சங்கப்புகழ் செங்கம் - மரபு நடை



சங்கப்புகழ் செங்கம் - ஜவ்வாதுமலை

மரபுநடையில் பார்வையிட்ட இடங்கள்:-
 
1. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோயில் - ஓவியங்கள்
2. செங்கம் ரிஷபேஷ்வர் கோயில் - கல்வெட்டுகள்
3. செங்கம் நடுகற்கள்
4. வலையாம்பட்டு தமிழர் கணக்கியல் மையம்
5. ஜவ்வாதுமலை மேல்பட்டு நீர்மருது மரம்
6. ஜவ்வாதுமலை நடுகற்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள்
7. கோவிலூர் சிவன் கோயில் கல்வெட்டுகள்

      கல்வெட்கள், நடுகற்கள், பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள் என பலவற்றை பல இடங்களில் பல பயணங்களில் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முன்னேடுத்த 9வது மரபுநடையில் தான் கிடைத்தது. நம்முடைய வரலாற்றை அறிந்து கொள்வதும், அவற்றை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியதுவம் வாய்ந்து என்பதை மீண்டும் இந்த மரபு பயணத்தில் உணர்ந்து கொண்டேன்.

    செங்கத்தில் நிகழ்வு காலை 7மணிக்கு ஆரம்பிப்பதால் அதிகாலையே நானும் பங்காளி மதன்னும் கிளம்பினோம், எங்களோடு தம்பி லோஷ்-ம் இணைந்து கொண்டார். மார்கழி மாத குளிர் எப்பவும் போல் அல்லாமல்  குறைந்தே இருந்தது எனவே 1மணி நேர பயணத்திற்குள் செங்கம் வந்தடைந்தோம். சில ஆண்டுக்கு முன் சென்னையில் ஒரு நேர்முக தேர்வில் பழக்கமான தம்பி யோகேஷ் வீட்டிற்கு சென்றோம், அங்கு அம்மா அவசமாக போட்டு கொடுத்த தேனீரை குடித்துவிட்டு, அருகில் இருக்கும் ரிஷபேஷ்வர், பார்த்தசாரதி கோயிக்கு சென்று பார்த்தோம் அங்கே சிலர் மட்டும் வந்திருந்தனர், எல்லோரையும் அழைத்து கொண்டு வரும் வாகனம் திருவண்ணாமலையில் இருந்து கிளம்ப கால தாமதம் ஆனது போல. தம்பி யோகேஷ் நண்பர் பார்த்த சாரதியும் உடன் இணைந்து கொண்டார்.

     எங்களுக்குள் முதலில் அறிமுகம் செய்து கொண்டு பின் உரையாடல் தொடங்கினோம், 15,20 நிமிடங்களில் அனைவரும் வந்து சேர்ந்தனர் பின் எல்லோரும் பார்த்தசாரதி கோயில் திடலில் ஒன்று சேர்ந்தோம்.

சங்கப்புகழ் செங்கம் அறிமுகம்:-

     சங்ககால இலங்கியமான பத்துப்பாட்டில் இடம் பெற்ற மலைபடுகடாம் என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்கள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்கு உட்பட்ட நவிர மலை என்பது தற்போது ஜவ்வாதுமலை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

     கோயிலில் அனைவரும் வந்து சேர்ந்ததும் முதலில் இந்த மரபுநடை எதற்கானது என்பதை பற்றி மரபுநடை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @Bala விளக்கவுரை கொடுத்தார் பின்னர் முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் ஐயா வெங்கடேசன் தொல்லியல் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் நீண்ட அனுபவ பகிர்வை கொடுத்தார். 

பார்த்தசாரதி கோயில் - ஓவியங்கள்:-

      காலை உணவு முடித்து பின், கி.பி1600 ஆண்டு வாக்கில் செஞ்சியைச் சேர்ந்த நாயக்க மன்னன் ஒருவன் கட்டிய பார்த்தசாரதி கோயிலில் உள்ள பழங்கால ஓவியங்களை பார்வையிட்டோம், கோயிலின் மகா மண்டபத்தின் மேற்புறத்தில் ராமாயணக் காட்சிகள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. ஓவியத்தில் சில இடங்களை தவிர பிற இடங்களில் இருந்தவை மறைந்து போயியுள்ளன. ஓவியத்தில் ஒவ்வொரு காட்சியும் எதை குறிக்கிறது என்ற விளக்கமும் அங்கே எழுதப்பட்டிருந்தது.

    இந்த ஓவியங்கள் குறித்து ஓவியர் ராமச்சந்திரன் தெளிவான உரையை கொடுத்தார், அவர் உரையில் இந்த ஓவியங்களில் விளக்கங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களில் எழுதபட்டிருந்தாலும் சில இடங்களில் தெலுங்கு மொழியிலும் தெலுங்கு எழுத்திலும் உள்ளதால் இந்த ஓவியங்கள் தெலுங்கு நாட்டு ஓவியனால் வரையப்பட்டு இருக்கும். ஆகையால் தெலுங்கு ராமாயணமான ரங்கநாத ராமாயணமே வரையப்பட்டு இருக்கும். இந்த ஓவியத்தில்  ராவணணின் வீழ்ச்சிக்குப் பிறகு விபீடணனுக்கு முடிசூட்டும் காட்சியும், அனுமன் ஆசிபெறுதல், இராமன் - இராவணன் போர்க்காட்சிகள், இராவணன் பாத ஹோமம், சீதை அக்னிப்பிரவேசம், சீதை பல்லக்கில் வருதல், தேவர்கள் - வாரணங்கள்,மண்டோதரி வதம், இப்படி  பல்வேறு காட்சிகள் வரையப்பட்டுள்ளன, கடைசியாக ராமனுக்கு பட்டாபிஷேகம் நடப்பதும் உள்ளது. 

     அது முடித்ததும் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மகாவீரரை பார்த்துவிட்டு ரிஷபேஷ்வர் கோயில் கல்வெட்டு பார்க்க சென்றோம்.



ரிஷபேஷ்வர் கோயில் கல்வெட்டு:-

     செங்கம் நகரில் ஒரு காலத்தில் செய்யாற்றுக்கு அருகில் இருந்து இன்று ஆறு சுருக்கப்பட்டு நகரின் மையமாக மாற்றப்பட்டு இருக்கும் ரிஷபேஷ்வர் கோயிலைல பார்வையிட்டோம். கோயிலில் உள்ள 13வது நூற்றாண்டு பாடல் கல்வெட்டு ஒன்று மலைகடாம் பாட்டுண்ட மால்வரை என்று மலைபடுகடாம் பற்றிய குறிப்புகள் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் பல்வேறு பகுதிகளைக் குறிக்கும் போது நவிரமலை என்று ஒரு பகுதியை குறிக்கும் கல்வெட்டும் இக்கோயிலில் உள்ளது, இதை குறித்து ஆய்வாளர் ஐயா வெங்கடேசன் மற்றும் பாலா அண்ணா விரிவாக கூறினர். 

அடுத்து காயம்பட்டு ஏரி கரையில் உள்ள நடுகற்களை பார்வை இட கிளம்பினோம்.


செங்கம் நடுகற்கள்:-

     தமிழகத்தின் தொன்மையான நடுகற்கள் ஒருங்கே பெற்ற பகுதி செங்கம் பகுதி என்பதால், தமிழக அளவில் செங்கம் நடுகற்கள் சிறப்பு வாய்ந்தவை. பல்லவர் காலம் முதல் பிற்காலம் வரை சுமார் 70 நடுகற்கள் செங்கம், தண்டராம்பட்டு பகுதிகளில் கிடைத்துள்ளன. இதில் செங்கம் காயம்பட்டு ஏரிகரையில் மட்டும் 3நடுகற்கள் உள்ளன. 

     காயம்பட்டு ஏரிகரையில் இருக்கும் நடுக்கல்லை பார்க்க கிளம்பினோம், முதலில் நடுகற்கள் எதற்காக அமைக்கப்பட்டது என்பது பற்றி ஒருங்கிணைப்பாளர் பாலா அண்ணா சிறப்பான தொரு விளக்கத்தை கொடுத்தார் பின் அவ்விடத்தில் உள்ள இருக்கும் ராஜராஜன் கால நடுகல்லில், வீரனின் உருவம் இடது புறம் பார்த்த நிலையில் வலதுகையில் குறுவாளுடன், இடது கையில் கேடயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவனது உடலில் இரண்டு அம்புகள் பாய்ந்துள்ளதும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலைக்கு மேல் சிறிய அளவில் அவன் மேல் உலகம் சென்றதைக் குறிக்கும்படி சிறிய இரண்டு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விரனை வரவேற்று கையில் கவரி வீசியபடி நின்ற நிலையில் ஒரு தேவலோகத் தூதன் அவன் அருகில் அமர்ந்த நிலையில் நடுகல்வீரன் என இச்சிறிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்ட்டுள்ளன. 

     இது வீரன் இறந்தவுடன் மேல் உலகம் சென்றுவிட்டதாகவும் அங்கு அவனுக்குச் சகல மரியாதைகளும் அளிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுவதாகவும் உள்ளது. இதன் மூலம் வீரனை இழந்த குடும்பத்தார் மனநிம்மதி அடைவதாக கொள்கலம் வீரனின் பாலுக்கு அருகில் குத்து விளக்கும், இடது காலுக்கு அருகில் நீர் வைக்கும் கெண்டியும் செதுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு நீர் மற்றும் நெருப்பு வைத்து வழிபாடு செய்யும் பழக்கத்தை அன்றைய மக்கள் கொண்டிருந்தனர் என்பதும் அறியலாம். 

தமிழர் கணக்கியல் மையம்:-

     தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த பெரும் கொடை மறைந்த ஐயா வெங்கடாலத்தின் தமிழ் கணக்கியல் குறித்த ஆய்வுகள். ஐயா நம்மாழ்வாருக்கு முன்னரே இயற்கை விவசாயத்தை முன்னேடுத்துள்ளார், 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகளை பாதுகாத்து அதை மக்களிடம் பரவலாக்கியதில் ஐயா வெங்கடாசலத்தின் உழைப்பு அலப்பரியது, ஐயா நம்மாழ்வாரே நேரில் வந்து ஐயா வெங்கடாசலத்தை சந்தித்து இயற்கை விவசாய அனுபவத்தை பெற்றுள்ளார் என்பதும் கூடுதல் தகவல். அவர் மறைந்தும் அவரின் ஆய்வுகள் பொதுமக்களின் பார்வைக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் எந்நேரமும் அவரின் வீட்டுகதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளது, தற்போது ஐயாவின் மகன் தான் அனைத்தையும் பாதுகாத்து வருகிறார், மீண்டும் செல்ல வேண்டும் என நான் விரும்பும் இடத்தில் இதுவும் ஒன்று.

     மதிய நேரம் 1 மணியை கடந்து இருந்தது ஆனாலும் பனிமூட்டம் களைந்த பாடில்லை, குளிர்ந்த காற்றின் ஊடாக அடுத்து ஜவ்வாதுமலைக்கு பயணமானோம்.



ஜவ்வாதுமலை தொல்லியல் இடங்கள்:-

     செங்கத்தில் இருந்து ஜவ்வாது மலைக்கு ஏறுவது இது தான் முதல் முறை, எல்லோரும் வேன் மற்றும் காரில் செல்ல நானும் பங்காளி மதன், தம்பி யோகேஷ் மற்றும் லோகேஷ் இரண்டு இரு சக்கர வாகனத்தில் மலைக்கு மேல் ஏறினோம். இயற்கை அழகை நின்று தரிசிக்க நேரமில்லாது பயணத்திலேயே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். முதலில் மேல்பட்டு மலைகிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான நீர்மருது மரத்தை பார்வையிட்டோம், நீர் ஓடையின் அருகிலேயே பிரம்மாண்டமாக இருந்தது. ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய மரங்களில் இந்த மேல்பட்டு நீர்மருது மரம் மிக முக்கியமானது. நாங்கள் 14பேர் ஒன்றிணைந்து தான் மரத்தை அணைக்க முடிந்து அவ்வளவு பெரிய மரம். பிறகு அங்கேயே மதிய உணவு சைவம்/அசைவம் முடித்துவிட்டு சவ்வாது மலையில் இருக்கும் வரலாற்று தொன்மங்களை பார்க்க கிளம்பினோம்.

      மேல்பட்டு கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் பயணித்தால் அடர்ந்த காட்டு ஓடையின் ஓரமாக இருக்கும் பாறையில் பழங்காலத்தில் வேட்டை ஆயுதமான கற்களை கூர்தீட்டிய இடங்களை பார்த்தோம், முதல் முறையாக இவற்றை காண்கிறேன் அதனாலயே பிரம்மிப்பை கொடுத்தது. பிறகு அந்த ஓடையின் உள் சென்று அடர்ந்த காட்டில் ஓய்வெடுத்தோம். காட்டுக்குள் இருப்பதை போன்ற உணர்வு வேறு எதுவும் கொடுத்திட முடியாதது தான்.


     அடுத்து அந்த காட்டு ஓடையின் எதிர்கரையில் சாமை வயல்களுக்கு நடுவே மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்த சோழர்கால நடுக்கல் ஒன்றை பார்த்தோம், அதற்கடுத்து கொஞ்சதூரம் நடந்து சென்று அங்கு இருந்த பெருங்கற்கால காலத்தில் இறந்த மனிதர்களை அடக்கம் செய்யப்பட்ட பாறை கூடாரங்கள் ஒன்றிடண்டு இருந்ததை பார்வையிட்டோம். (சில வாரங்களுக்கு முன் இதே மலை தொடரில் கீழ்சிப்பிலி என்ற ஊரில் இருக்கும் இதே போன்ற கற்குகைகளை போய்ருந்தோம்). சூரியன் ஏற்கனவே மலையை விட்டு மறைந்து இருந்தது, இன்னும் சிறிது நேரத்தில் இருள் சூழ்ந்துவிடும் இருப்பினும் அடுத்து கோவிலூர் சிவன் கோயில் கல்வெட்டுகளை பார்க்க சென்றோம்.



கோவிலூர் சிவன் கோயில் கல்வெட்டுகள்

     ஜமுனாமரத்தூரில் இருந்து போளூர் செல்லும் வழியில் அத்திப்பட்டில் இருந்து 8கி.மீ தொலைவில் உள்ள கோவிலூர் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் பழமையான சிவன் கோயிலில் எட்டு கல்வெட்கள் இருந்தன. இக் கல்வெட்டின் அடிப்படையில் இக்கோயில் 12/13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் இக்கோயில் பெயர் திருமூலநாதர் என்றும் அறியவருகிறது, அதற்கேற்றார் போல சிவலிங்கதிற்கு அருகே திருமூலர் கற்சிலையும் உள்ளது. இரவு 8மணியும் கடந்து மரபுநடை தொடர்ந்து. சென்னை, திருநெல்வெலி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 60க்கு மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

      ஒரு நாள் சந்திப்பு தான் என்றாலும் அன்பு நிறைந்த மனிதர்களை இந்த பயணம் கொடுத்தது, மரபுமீட்டல் குறித்த உரையாடல்களை இன்னும் வெகுசன மக்களிடம் கொண்டு சேர்த்து அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமையை இந்த மரபுநடை சொல்லியுள்ளது. நிச்சயம் நம்மால் இன்றதை அடுத்தஅடுத்த பயணங்களின் ஊடே செய்ய முற்படுவோம்.


     வரலாற்று முக்கிய இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அண்ணன் பாலா அவற்களுக்கும் உடன் உதவி புரிந்தவர்களுக்கும் சந்தித்த அனைத்து அக்கா, அண்ணனன், தம்பி, தங்கைகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பனை சதிஷ்
20.12.20

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்