கொல்லிமலை பயணம் - பகுதி 2



கொல்லிமலை பயணம் இரண்டாம் நாள்

கொல்லிமலை சித்தர் குகைகள்

      நேற்று இரவு மணி 10.30க்கு கொல்லிமலையில் முக்கிய இடமான அரபலீஸ்வரர் கோயில் பகுதிக்கு சென்றிருந்தோம். கோவிலின் வீதிகள் வெறிச்சோடி, ஒரு சில தேனீர் கடைகள் மட்டும் திறந்திருந்தது. அதில் ஒரு கடையில் அமர்ந்து தேனீர் குடித்துக் கொண்டே இந்த மலை பற்றியும், கோவில் பற்றியும் தெரிந்து கொள்ள அங்கே வேலை செய்யும் நபரிடம் பேச்சு கொடுத்தோம்.

     சாதாரணமாக பேச தொடங்கிய அவர் அடுத்த அரைமணி நேரம் பேசியதை கேட்டு முடிக்கும் போது நாங்கள் நிச்சயம் வேறு ஒரு உலகிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டேன்.

     திருச்சியை பூர்வீகமாக கொண்ட அவர் 14வயதில் கொல்லிமலைக்கு வந்துள்ளார். இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிவனே கதி என இருக்கிறார். கோயிலின் தல வரலாற்றை புராண கதைகளோடு இணைத்து கொஞ்சம் மிகைபடுத்தி சொல்லியதால் நான் அதை பெரிதாக உள்வாங்கி கொள்ளவில்லை.

     ஆனால் அதன் பின் இந்த மலை எங்கும் உள்ள சித்தர்களின் குகைகளை பற்றி சொல்ல தொடங்கிய போது தான் அவர் சொல்ல வருவதை கூர்ந்து கவனிக்க முற்பட்டேன். கொல்லிமலையின் அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும் குகைகளை பற்றி அவர் சொன்னதும் ஏதோ ஒரு உள்ளுணர்வு நிச்சயம் அவற்றை பார்த்திட வேண்டும் என உந்தியது.

     இது நிச்சயம் ஆன்மீக பயணம் இல்லை இருப்பினும் இதுவரை கண்டிடாத இடத்தை கண்டடைய வேண்டும் என்ற ஏக்கத்தால் அந்த குகைகளுக்கு போக வேண்டும் என்ற ஆவல், அதிலும் காட்டிற்குள் பயணம் என்பதால் முகுந்த ஆவலோடு இருந்தேன்.

     கொல்லிமலையில் எல்லாருக்கும் தெரிந்த குகைகள் பாம்பாட்டி மற்றும் கோரக்கர் சித்தர் குகைகள். அந்த குகைகள் பற்றி அவர் சொல்லி முடித்ததும், உடனே அங்கு எப்படி போவது என சொல்லுங்க, நாங்க போய்ட்டு பாத்துட்டு வர்றோம்ன்னு கேட்டதும் அவர் சிரித்துவிட்டு சொன்னார், நீங்க நினைப்பது போல அது அவ்வளவு எளிதான காட்டு பயணம் அல்ல, குகை என்றவுடன் ஏதோ மலை முகட்டின் ஓரம் இருக்கும் போய்ட்டு பார்த்துட்டு வருகிற தூரம் தான் என நினைக்காதிங்க.

     நான் சொல்லுகிற சித்தர் குகைகள் இருப்பது பாதைகள் இல்லாத, மரங்கள் அடர்ந்த இந்த மலை சரிவுகளில் இறங்கி, சில இடங்களில் குறுக்கே ஓடும் காட்டு ஓடைகளை கடந்து நடுகாட்டிற்கு செல்ல வேண்டும். அங்கு சித்தர்கள் இன்றும் எல்லா உருவங்களிலும் வாழ்வதாக எங்கள் நம்பிக்கை. ஆசைப்படும் எல்லோரலும் அங்கு சென்று குகைகளை பார்த்திட முடியாது. மேலும் சித்தர்களின் அருள் இல்லாமல் அங்கு செல்வது இயலாது என அவர் சொல்லி முடிக்கும் போதே மனம் எப்படியாவது அந்த குகைகளை பார்த்திட வேண்டும் என மனம் துடித்துக்கொண்டு இருந்தது.

     கவலைபடாதிங்க நாளை காலை 10மணிக்கு இதே இடத்துக்கு வந்துடுங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன்னு பின்னாடி இருந்து ஒரு குரல். அங்கு வேலை செய்யும் இன்னொரு தம்பி, சொல்லிட்டு அவனுடைய எண்களை கொடுத்து விட்டு கிளம்பினான்.

     ( கொல்லிமலை காட்டுக்குள் சித்தர் குகைகளை பார்க்க விரும்புகிறவர்களை அழைத்து செல்ல உள்ளுர் மக்களே உதவி செய்கின்றனர். அதற்காக கனிசமான தொகையும் வாங்குகின்றனர் )


     காலையில் சீக்கரம் எழுந்து செல்ல வேண்டும் என்பதற்காக அவருக்கு நன்றி சொல்லிட்டு அறைக்கு கிளம்பினோம். நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்பதை திரும்பி அறைக்கு செல்லும் போது தான் உணர்ந்தோம்.

     நாள் முழுவதும் வாகனம் ஓட்டிய கலைப்பால் அடுத்த நாள் காலை 8மணி வரை தூங்கி விட்டோம். பிறகு அவசர அவசரமாக குளித்துவிட்டு மீண்டும் அரபலீஸ்வரர் கோயில் இருக்கும் பகுதிக்கு கிளம்பினோம். முந்தைய நாள் இரவில் வெறிச்சோடி இருந்த கோவிலின் வீதிகளில் இன்று வாகனத்தை கூட நிறுத்த முடியாத அளவிற்கு கூட்டம். நேற்று பேசிய அதே நபர் இயல்பாக அவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார், அவருக்கு வணக்கம் சொல்லிட்டு அங்கயே காலை உணவு சாப்பிட்டு மதியதிற்கு தேவையான உணவையும் அங்கயே வாங்கிக்கொண்டோம். 

     எங்களை குகைக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பி இன்னோருவரையும் உடன் அழைத்து வந்தார். வாகனத்தை கடையின் ஓரம் நிறுத்திவிட்டு, எடை அதிகமாக இருந்த பைகளையும் அதே கடையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு மொத்தம் ஐவராக நடக்கத் தொடங்கினோம். அரப்பலீஸ்வரர் கோவிலில் இருந்து சில நூறு மீட்டர் வந்த பிறகு காட்டுபாதைக்கு போகிற திசையில் எங்களை வழிநடத்தினர். 

     முதலில் சவுக்கு மரங்கள் அடர்ந்திருந்த தோப்புக்குள் நுழைந்தோம். அங்கிருந்த எல்லா சவுக்கு மரங்களிலும் மிளகு கொடிகளை படரவிட்டு இருந்தனர். சில இடங்களில் காபி செடிகளையும் பார்க்க முடிந்தது.

      சமதளத்தில் நடந்து கொண்டிருந்த போது திடீரென மலை சரிவில் இறங்குவது போன்று இருந்தது. ஆம் இனி தான் காட்டுபகுதி ஆரம்பம் ஆகிறது என்றனர். ஒத்தடி பாதையை விடவும் குறுகிய பாதை தான். கொஞ்சம் கால் தவறினாலும் சரிவில் உருண்டு ஓட வேண்டியது தான். அது போக ஆங்காங்கே காட்டுக் கொடிகளும், சதையை கிழிக்கும் முட்களும் நிறைந்து இருந்தது. கடந்த மழையில் அனைத்து செடி, கொடிகளும் மீண்டும் துளிர்விட்டு இருந்தது.

     நடக்க ஆரம்பித்து அரைமணி நேரம் தான் சரிவில் இறங்கி இருப்போம் ஆனால் அதற்குள் மூச்சு வாங்கிவிட்டது. இறக்கமே இப்படியானால் ஏறுவது எப்படி இருக்குமோ என வெளியில் சொல்லாமல் எனக்குள் முணங்கி கொண்டேன். எங்களை வழிநடத்துபவர்கள் மிக பாதுகாப்பாக எங்களோடே இருந்து எங்களை அழைத்து சென்றனர்.

     கொல்லிமலையின் மூலிகைகளை பற்றி பேசுகையில் நடக்கும் போதே வழிநெடுக இருந்த மூலிகைச் செடிகளையும், மரங்களையும் அவ்வப்போது காண்பித்து அதன் பயன்பாடுகளையும் சொல்லி வந்தனர். ஒரு இடத்தில் பாம்பு கடிக்கு பயன்படும் செடியை கூட காட்டினர். உடன் இருந்த நண்பன் அந்த செடியை பறித்துக் கொண்டு போய் நாம வளர்க்கலாம் என்றான்.

     நான் சிரித்துக்கொண்டே இது இந்த காட்டினுடைய சொத்து நமக்கனது அல்ல, என சொன்ன போது அவனும் புரிந்து கொண்டான்.



     காட்டு ஓடையின் சத்தம் இடைவிடாமல் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது, அருகில் தான் இருக்கும் என நினைத்தால் அதை கடக்கவே இன்னும் இரண்டு கி.மீ உள் செல்ல வேண்டும் என்றனர். பெரும் இரைச்சலை கொடுத்துக்கொண்டு இருந்த அந்த காட்டு ஓடையை அடைந்தோம்.

     ஆகாய கங்கை அருவியில் இருந்து வரும் நீரும் இன்னும் சில ஓடைகளும் ஒன்றாக இணையும் அந்த இடத்தில் மலையளவு கொண்ட ஒரு பெரும் பாறை இருந்தது, அங்கே பூசை செய்யும் சில பொருட்களையும் பாறையின் மீது நாகத்தின் ஓவியமும் வரைந்து வைத்து இருந்தனர். பார்த்ததும் புரிந்துவிட்டது இது தான் பாம்பாட்டி சித்தர் குகை. 

     நாங்கள் திரும்பி வரும் போது ஒரு சம்பவம் நடந்தது. இப்போது வரை எனக்கு அந்த சம்பவம் பற்றியே யோசனையாக இருந்து வருகிறது, அதை பற்றி பின்னர் விவரிக்கிறேன். 

     பாம்பாட்டி சித்தர் குகை இருக்கும் பாறையின் மேலே உயரத்தில் ஏதோ கூடு போன்று இருந்தது என்ன என்று கேட்கும் போதே எங்களை கூட்டிவந்த தம்பி பதற்றத்தோடு அண்ணா அவற்றை தவறியும் கூட ஏதும் தொந்தரவு செய்துடாதிங்க, அவைகளை கோவப்படுத்திட்டு நாம இந்த காட்டின் எந்த மூளைக்கு ஓடி ஒதுங்கினாலும் பின் தொடர்ந்து வந்து நம்மை தாக்கும், அவை கொட்டினால் கோழி முட்டை அளவிற்கு கடித்த இடம் வீங்கி போய்டும், பிறகு மூணு நாளைக்கு அந்த வீக்கம் குறையாதுன்னு சொன்னதும் நமக்கு எதுக்கு வம்புன்னு ஓரமா ஒதுங்கி வந்துட்டேன்.


      பாம்பாட்டி சித்தர் குகையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு ஓடையை கடந்து அக்கறையில் ஏறி அடுத்து பார்க்க வேண்டிய முக்கியமான குகையை நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

     இதுவரை மனித நடமாட்டத்தை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் இப்போது எதிரில் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குகையை பார்த்துவிட்டு திரும்பி செல்வோர், அதில் ஒருவர் மாதந்தோறும் இங்கு வருவதாக சொல்லிருந்தது ஆச்சிரியமாக இருந்தது.

     பாம்பாட்டி சித்தர் குகை வந்ததும் அடர்ந்த மலை சரிவு பாதை முடிந்து அதன் பிறகு ஏற்ற இறக்கமான ஓரளவுக்கு நடக்கும் படியான பாதையாக இருந்ததால் காட்டில் கொஞ்சம் விரைவாகவே முன்னேறி போனோம்.

     நாங்கள் நடந்து சென்ற மலைபாதை காட்டு ஓடையை ஒட்டியே இருந்தது, நீரின் வேகத்தையும், பாறையில் முட்டி மோதி அவை எழுப்பும் சத்தத்தையும் கேட்டுக் கொண்டே போனதால் களைப்பு நீங்கி மனம் புத்துணர்ச்சியாக இருந்தது.

     காட்டுப்பாதை சில இடங்களில் குகை போன்றும், சில இடங்களில் பாறையின் மீது இருந்து காட்டுக்கொடிகளை பிடித்துக் கொண்டு ஏறுவதும், இறங்குவதும் என சாகசத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது.

     சில இடங்களில் பெருத்த மரங்களாக இருந்தது, அதுவரை பார்த்த மரங்களை விடவும் அளவிலும் உயரத்திலும் பெரிய மரங்கள். ஒரு இடத்தில் பாறையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது நாம கிட்டத்தட்ட வந்தாச்சி இன்னும் கொஞ்ச தொலைவு தான் என சொல்லி முடிக்கும் முன் ஆர்வமிகுதியில் அங்கிருந்து விரைவாக கிளம்பினோம்.

     குகைக்கு வந்துவிட்டோம் என்பதை காற்றில் வீசிய திருநீர் வாசனை சொல்லிவிட்டது, காட்டின் சமதரையில் இருந்து கொஞ்சம் பாறைகளின் மீது ஏறி சென்று கோரக்கர் குகையை வந்தடைந்தோம். வீட்டில் இருந்து கிளம்பும் போது கொல்லிமலை சித்தர் குகைக்கு போக போகிறோம் என விளையாட்டுக்கு நான் கூறிய சொற்கள் இப்போது நிஜமாக நடந்து கொண்டிருப்பதை இன்னமும் என்னால் நம்பமுடியாமல் இருந்தது.

     குகையின் வாயில் மிகவும் குறுகியதாக இருந்தது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் தான் உள் நுழைய முடியும் அதுவும் முட்டியிட்டு தவழ்ந்து தான் போக முடியும். குகையின் உள்ளே ஒரு பாறையில் கோரக்கர் ஓவியம் வரைந்துள்ளனர். அருகில் ஒரு சிவலிங்கம் மற்றும் பெண் தெய்வ சிலை இருந்தது. கொஞ்சம் பெரிய குகை தான். குகையின் உள் இருந்த அமைதியான சூழல் மன ஓய்வை கொடுத்ததால் எனக்கு தியானம் செய்ய வேண்டும் போல இருந்தது. முடிந்தளவு எதை பற்றியும் யோசிக்காமல் கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் இருந்திருப்பேன்.

     புராணங்கள் கூறும் கடவுள்கள் மீதும், அவை கற்பிக்கும் ஏற்றத்தாழ்வுகள் மீதும் துளியும் எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. ஆனால் தமிழ் சமூகத்தின் வரலாறு நெடுக பார்த்தாலும் சித்தர் மரபு வாழ்வியல் முறைகள் புராண புரட்டுகளில் இருந்து மாறாக தான் இருந்துள்ளது. எனவே நம்முடைய சித்தர் மரபுகளில் மதச்சாயம் பூசுவத்தில் இருந்து நாம் விரைவாக இவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

     இந்த குகையில் எப்போதும் ஒருசில நபர்கள் தங்கி இருப்பார்கலாம், அதனால் உணவு சமைப்புக்கான பொருட்கள் அங்கேயே நிரந்தரமாக இருந்தது. நாங்கள் அங்கு சென்ற நேரத்தில் கூட ஒருவர் உணவை சமைத்துக் கொண்டிருந்தார். அடுத்த முறை வந்தால் நிச்சயம் இரவு தங்கி விட்டு போகலாம் என்றனர். குகையில் கொஞ்ச நேரம் தங்கி ஓய்வெடுத்து விட்டு அருகில் இருக்கும் காட்டு ஓடைக்கு வந்து சேர்ந்தோம்.


      முழுமையாக ஒரு காட்டின் மையப்பகுதிக்கு வந்து ஓடையில் குளிப்பது இது தான் முதல் முறையாக இருக்கும் என நினைக்கிறேன். அதுவும் கண்ணிற்கு தெரியாத ஆயிரக்கணக்கான மூலிகைகளை கடந்துவரும் காட்டு ஓடை. மனமும், உடலும் போதும் என்று சொல்லும் அளவிற்கு ஆனந்தமாக குளித்து முடிந்த பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு எடுத்து வந்த உணவுகளை அருகில் இருந்த பாறையின் மீது கொட்டி அனைவரும் ஒன்றாகவே சாப்பிட்டோம்.

     எங்களை வழிநடத்திய தம்பிகள் இருவரும், திரும்பி வருகிற போதும் தங்கள் கண்ணில் தென்படும் மூலிகைகள் பற்றி சொல்லிக்கொண்டே வந்தனர். அதில் முக்கியமாக பாப்பாரக் கொட்டை என்ற ஒன்றை உடைத்துக்காட்டி இந்த விதைகளை காயவைத்து நறுக்கி தூளாக்கி நல்ல எண்ணெயில் சூடேற்றி பிறகு மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி சரியாகும் என்றனர்.

      பயணகம் தொடங்கும் போது நான் நினைத்ததை விடவும் இந்த மலை ஏற்றம் கடினமாக இருந்தது. நிறைய இடங்களில் உட்கார்ந்து மூச்சு வாங்கி கொண்டு போவதாக இருந்தது. மூச்சு இறைத்தல் அதை தொடர்ந்து வந்த வியர்வை காரணமாக உடல் விரைவாக சோர்வாகியது. ஒருவழியாக பாம்பாட்டி சித்தர் குகைக்கு வந்துவிட்டோம் அதாவது மலை ஏற்றத்தில் பாதி தொலைவுக்கு வந்துவிட்டோம் இதற்கு மேல் தான் முழுமையான மலையேற்றம்.


     முதலில் ஒரு வழிகாட்டி அவருக்கு பின் நானும் அடுத்தடுத்து இருவர் கடைசியில் இன்னொரு வழிகாட்டியும் என ஐவரும் மலை ஏறிக்கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் நான் இடது காலை எடுத்து வைத்து நகரும் போது எனக்கு முன் ஒரு குட்டி கருநீற பாம்பு ஒன்று குறுக்காக ஊர்ந்து போனது. தரையில் ஊர்ந்து சென்ற அது ஒரு கட்டத்தில் நின்றுவிட்டு பாதையிலேயே படுத்துக் கொண்டது.

     அந்த பாம்பால், முன்சென்றவர் திரும்ப முடியாமலும் பின் வருபவர் முன்னோக்கி செல்ல முடியாமலும் இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் அந்த பாம்பு கொஞ்சமும் சலனம் இன்றி இருந்தது. நாங்கள் தரையை தட்டியும், இலைகளை அசைத்தும் பார்க்கிறோம் பாம்பு நகர்வதாக இல்லை. ஒரு வழியாக 10 நிமிடம் கழித்து அதுவாகவே பொறுமையாக நகர்ந்து போன பின்னர் தான் எங்களால் மலை ஏற்றத்தை தொடரமுடிந்தது. 

     ( என்னால் இன்றளவும் இந்த நிகழ்வை எளிதாக கடந்து போக முடியவில்லை, பாம்பு அது தன் பாதையில் போவதும் படுப்பதும் இயல்பு தான் ஆனால் ஏன் இது சித்தர்கள் அரூபமாக எங்களை வழிடத்தினார் என்று எடுத்துக் கொள்ள கூடாது, ஆமாம் நான் இரண்டாம் நினைப்பை தேர்வு செய்து செய்கிறேன். எங்கள் பாதுகாப்பினை இந்த காடும் சித்தர்களும் உறுதி செய்தனர் என்றே நான் நம்புகிறேன்).



     நீண்ட நாள் கழித்து ஒரு முழுமையான மலையேற்றத்தை உடல் அனுபவிக்கிறது. கொரானா காரணமாக வீட்டில் இருந்தமையால் கொஞ்சம் தொப்பை போட்டுடுச்சி அதனால் மூச்சு இரைப்பு அதிகமாவே. ஒவ்வொரு நூறு, இருநூறு அடிக்கும் நின்று ஓய்வெடுக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் இந்த மலையின் மொத்த உயரமோ 3000அடிக்கும் மேல் இருக்கும்.

     ஒரு இடத்தில் வழிகாட்டி தம்பி எங்களை நிறுத்தி தூரத்தில் ஒரு மரத்தினை காட்டி அது தான் எங்கள் சாமி மரம். காட்டில் மக்கள் விறகுக்கு கூட  அம்மரத்ததின் காய்ந்த குச்சிகளையும் எடுக்கமாட்டோம். காட்டில் எங்களை பாதுகாக்கும் தெய்வமாக நாங்கள் வணங்குவது அம்மரத்தை தான், ஊர்காரர்கள் யாரேனும் தவறுதலாக அதன் விறகை எடுத்துவிட்டால் பிறகு அம்மரத்திற்கு படையல் இட்டு உடம்பில் துணியில்லாமல் மூன்று முறை சுற்றி வந்து அம்மரத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

      நான் எவ்வளவு கேட்டும் கடைசி வரை அந்த மரத்தின் பெயரை அவர் சொல்ல மறுத்துவிட்டார். 

      மாலை நேரம் நெருங்கி கொண்டே இருந்தது இருட்டுவதற்கு மேல் ஏறிவிடுவோமா என்ற சந்தேகமாகவே இருந்தது. சிறிது தூரத்தில் காட்டுவழியாக ஆகாயகங்கை அருவிக்கு போகிற வழி பிரிந்தது அந்த வழியை பின் தொடர்ந்தால் 1மணி நேரத்தில் அருவிக்கு போய்விடலாம் ஆனால் வழியில் வனத்துறை அதிகாரிகள் பார்த்துவிட்டால் பிறகு பிரச்சனை தான்.

     இது வரை மரக்கொப்புகள் மறைத்து இருந்ததால் நீல வானத்தை பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் நல்ல வெளிச்சம் இருந்ததால் அங்கிருந்து மொத்த வானத்தையும் பார்க்க முடிந்தது. இறுதியாக நாங்கள் மேலேறி வந்துவிட்டோம். வாகனங்கள் செல்லும் சாலையை பார்த்த பிறகு கிடைத்த மகிழ்வுக்கு அளவே இல்லை.

      இந்த ஒரு நாள் முழுவதும் நான் கண்ட, அனுபவித்த வாழ்வு என்னால் என்றும் நினைவு கூற தக்க பல அதிசய, அற்புதங்களை கொடுத்த நாள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. மலையேற்றம், காட்டு பயணம், காட்டு ஓடை, சித்தர் குகைகள், காட்டு ஓடைக்குளியல் என இந்நாளின் அனுபவத்தை மேற்கொண்டு வர்ணித்து எழுத என்னிடம் எழுத்துக்களும் இல்லை.

     எங்களை வழிநடத்திய உள்ளூர் நண்பர்களுக்கும் முக்கியமாக இந்த காட்டிற்கும், எங்களோடே இருந்து எங்களை பாதுகாப்பாக வழிநடத்திய சித்தர்களுக்கும் நன்றி.

     நாளை, எங்கள் பயணத்தின் கடைசி நாள். ஆகாய கங்கை மற்றும் மாசிலா அருவிக்கும், கொல்லிப்பாவை மற்றும் அரப்பலீஸ்வர் கோயிலுக்கும் நாளை போகலாம்.

26.12.20
பனை சதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்