கொல்லிமலை பயணம் - பகுதி 3


கொல்லிமலை பயணம் கடைசி நாள்

கொல்லிமலை அருவிகள்

    இந்த பயணத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திட கொல்லிமலை சித்தர் குகைகளை பார்க்க முடிந்தது பெரும் மகிழ்வை கொடுத்தது. அடர்ந்த காட்டிற்குள், மலையேற்றத்தில் சித்தர் குகைகளை பார்த்துவிட்டு வந்த பின் இரவு கால்களில் வலியை உணர முடிந்தது.

      ஆனால், அந்த காட்டுபயணத்தின் நினைவுகளால் உடலின் வலிகளை மறக்கடிக்க செய்து விட்டது.

     கொல்லிமலை பயணத்தின் கடைசி நாளான இன்று மேலும் சில இடங்களை பார்த்துவிட வேண்டும் என காலையில் விரைவாக நாங்கள் தங்கியிருந்த மலைவீடு விடுதி அறையை காலி செய்துவிட்டு நானும் தம்பியும் கிளம்பினோம்.

     நேற்று சித்தர் குகையை பார்த்து முடித்ததும் நண்பன் பிரபு மற்றொரு பயணத்திற்காக நேற்று இரவே கிளம்பிவிட்டான்.

      எப்படியும் இன்று கொல்லிமலையின் முக்கிய அருவியான ஆகாய கங்கையை பார்த்து விட வேண்டும் என்பது தான் திட்டம், போகிற வழியில் சில இடங்களை பார்த்துவிட்டு போகலாம் ஆனால் நேரத்தை விரயம் செய்திடாமல் கிளம்ப வேண்டி இருந்ததால் காலை உணவை விரைந்து முடித்துக்கொண்டோம்.

      செம்மேட்டில் இருந்து அரப்பலீஸ்வரர் கோயிலுக்கு செல்கிற பாதையில் 5கி.மீ தாண்டி சென்றதும் இடது பக்கம் மாசிலா அருவிக்கு செல்லும் பெயர் பலகையை பார்த்ததும் அவ்வருவியை காணச் சென்றோம்.

     சில கி.மீ பயணத்தில் மாசிலா அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் வந்தது, நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கட்டணம் வாங்குகின்றனர். வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றதும் தெளிவாக புரிந்தது, அருவியின் பெயருக்கும் அந்த இடத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை.

     அந்தளவிற்கு அருவியில் குளிக்க வருபவர்களால் நெகிழிகள் நிரம்பி வழிந்தது. காலையில் விரைவாக சென்றதால் அருவியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பொறுமையாக எந்த சலசலப்பும் இன்றி மூலிகள் நிறைந்த காட்டினுள் இருந்து கொட்டும் அருவியில் குளித்து முடித்து கரை ஏறினேன், தம்பி மட்டும் குளித்துக்கொண்டே இருந்தான்.

     உடைகளை மாற்றிய பின் தம்பியின் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் அருகில் இருந்த ஒரு குடும்பத்திடம் பேசிய போது அவர்கள் சென்னையில் இருந்து வருவதாக கூறினர், பின்னர் எனக்கும் பணி சென்னையில் என்றவுடன் நெருக்கமாகினர், பிறகு இந்த கொல்லிமலையில் பார்க்க என்னவெல்லாம் இருக்கிறது என்று முதல் நாள் இரவு அந்த தேனீர் கடை நண்பரிடம் நான் கேட்டது போன்றே இவர்கள் என்னிடம் கேட்டனர்.

     அவர்களுக்கு முந்தைய நாள் நாங்கள் சென்ற குகை பயணத்தை பற்றியும், கொல்லிமலை சித்தர்கள் பற்றியும் சொல்ல சொல்ல, அவர்கள் பேச்சற்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர், நான் நினைத்துக் கொண்டேன் முதல் நாள் நானும் இப்படி தான் வாய்பிளந்து அந்த தேனீர் கடை நபர் சொன்னதை கேட்டு இருந்தேனே என்று.

     தம்பி குளித்து முடித்ததும் அவர்களிடம் இருந்து விடைபெற்று கிளம்பினோம். நாங்கள் வானகத்தை நிறுத்திய இடத்திற்கு அருகில் ஒரு பாட்டி இப்போது மூலிகை விதைகளை விற்குக் கொண்டிருந்தார் அதில் சிலதை நேற்றைய காட்டுபயணத்தில் நாங்கள் நேரடியாக பார்த்தோம். அடுத்து அரப்பலீஸ்வரர் கோயிலை நோக்கி வாகனத்தை கிளப்பினோம்.

     கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலை பள்ளத்தாக்கு முழுக்க அழகான வயல்வெளிகளை காண முடிந்தது. மலை ஓடையின் நீர் ஒரு வரப்பில் இருந்து அடுத்த வரப்பிற்கு செல்வதற்கு ஏதுவாக பல இடங்களில் அடுக்கடுக்காக பாத்தி அமைத்து விவசாயம் செய்கின்றனர். பார்க்கவே அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

     ஒரு இடத்தில் எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி என எழுதி இருந்ததை பார்தேன், ஆம் எட்டுக்கை அம்மன் தான் கொல்லிப்பாவை. இந்த கொல்லிமலையை காக்கும் காவல் தெய்வமாக இந்த மலை முழுக்க இருக்கும் கிராம மக்கள் அனைவரும் வணங்குகின்றனர். நிச்சயம் அங்கு போக வேண்டும் என்று அவ்வழியே திரும்பினோம்.


      சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்விடத்தின் நடுவே சிறிய ஓலை குடிசையினுள் கொல்லிப்பாவை அமர்ந்திருக்கிறாள். கொல்லிமலைக்கு சுற்றுலா மூலமாக எவ்வளவோ வருமானம் வந்தாலும் இன்றளவும் மலைமக்கள் தங்கள் மரபை காக்க கொல்லிப்பாவையின் கோயிலை ஓலை குடிசையாகவே வைத்திருப்பதாக அங்கு கடையில் இருந்த ஒரு பெண்மணி கூறினார். 

      அங்கிருந்து கிளம்பும்போது மணி 11யை கடந்து விட்டது, விரைவாக சென்றால் தான் ஆகாய கங்கை அருவிக்கு போக முடியும் ஏனெனில் அருவிக்கு செல்லும் அனுமதி நேரம் மதியம் 3 மணியோடு நிறுத்தப்படும். எனவே வாகனத்தை விரைவு படுத்தி, அரப்பலீஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலில் பிரதான கடவுளாக இருக்கும் அரப்பலீஸ்வரை பார்த்துவிட்டு வெளியே வந்த போது என்னுடைய முகநூல் நண்பர் ராஜ சேகரை பார்க்க முடிந்தது சீர்காழி TV எனும் வலையோலியை நடத்தி வருகிறார் அதில் 6லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும் வைத்துள்ளார். அவரிடம் உரையாடி முடித்த பின் விரைவாக ஆகாய கங்கை அருவிக்கு செல்லும் நுழைவு சீட்டை வாங்கி கொண்டு இறங்க தொடங்கினோம்.


       நேற்று எங்களை குகைக்கு கூட்டி சென்ற தம்பி சொல்லிருந்தான் ஆகாய கங்கை அருவிக்கு போக 1,300 படி கீழ் இறங்கி போகனும், படிகள் சில இடங்களில் செங்குத்தாவும் வளைந்தும் போகும்ன்னு சொல்வும் அதையே நினைச்சிட்டே போனோம்.

     அந்த தம்பி சொன்ன மாதிரியே படிகள் செங்குத்தாக இறங்க ஆரம்பிச்சது, ஆனா இதைவிடவும் செங்குத்தான படிகள் இல்லாத காட்டுபயணத்தை நேற்று அனுபவைத்ததால பெரிதாக எங்கயும் ஓய்வு எடுக்காம விரைவாக கீழ் இறங்கினோம். படிகள் முடிந்து இடத்தில் இருந்து அருவிக்கு செல்ல 200 அல்லது 300 மீ தூரம் இருக்கும் ஆனாலும் அருவியின் சாரலை எங்களால் உணரமுடிந்தது.

      அதுவரை சத்தத்தை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அருவியின் முழு அழகையும் இப்போது பார்க்க முடிந்தது. நீல வானத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து வெள்ளிகளை உருக்கி ஊற்றுவது போல் இருந்தது அதன் அழகு. அருகே நெருங்க நெருங்க அருவியின் சாரலில் முழுவதும் நனைந்து போனோம். 

     அருவிக்கு நேர் எதிரே இருந்த பெரிய பாறையின் மீது எறி எங்களை அருவியோடு இணைத்து சில படங்களை எடுத்துக் கொண்ட பின் அருவியின் வலது பக்கம் அருகே சென்றோம். தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்த போது ஆம் இது நிச்சயம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் ஆகாயத்தில் இருந்து தான் குதிக்கிறது என்பது புரிந்தது. அருவியில் நீர் விழுந்து எழும் சாரலால் சில இடங்களில் வானவில் தோன்றி மன மகிழ்வை கொடுத்தது.

     அங்கிருந்து திரும்பி நடக்கையில் ஒருபாறையில் வழுக்கி கீழே விழுந்த போது என்னோட அலைபேசியும் தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே எடுத்துவிட்டேன் இருந்தாலும் ஒருவித பயம், சமீபத்தில் தான் கீழே விழுந்து பெரிய செலவை வைத்தது அதுபோல ஆகிடுமோ என பயந்தேன் ஆனால் அப்படி ஏதும் இல்லை.

      அருவிக்கு இடது பக்கம் எதிரில் இருந்த உடை மாற்றும் அறையில் நான் துணிகளை வைத்து காத்துக் கொண்டிருக்க தம்பி மட்டும் குளிக்க போனான், அவன் முடித்துவிட்டு வந்ததும் நான் சென்றேன். மணி மதியம் 2 கடந்து இருக்கும் இருந்தாலும் அருவியின் நீர் கடும் குளிராக இருந்தது. அதன் அடியில் சென்று சேர்ந்த பிறகு தான் அதன் வேகத்தை உணரமுடிந்தது. சில வினாடி கூட நிற்க முடியாத அளவிற்கு வானில் இருந்து வெள்ளி நீரை கடும் வேகத்தோடு கொட்டிக்கொண்டு இருந்தது. கொல்லிமலையின் அனைத்து மூலிகையையும் சேர்த்து கொண்டு வரும் ஆகாய கங்கையோடு முடிந்த அளவு இருந்து விட்டு கரையேறினேன்.


     உடைகளை மாற்றிக்கொண்டு கொஞ்சம் அருவியின் நீரை பாட்டிலில் எடுத்துக் கொண்டு படி ஏற ஆரம்பித்தோம். 

     ஆரம்பத்தில் 200படிகள் ஏறும் போது  ஏதும் தெரியவில்லை, ஆனால் அடுத்தடுத்து வந்த படிகள் ஒவ்வொன்றும் செங்குத்தாக இருந்ததால் மேற்கொண்டு 50படி முடிக்கும் முன்னமே கால்கள் தளர்ந்து போக செய்துவிட்டது கூடவே பசியும் சேர்ந்து கொண்டது. உடன் எடுத்து வந்த பழத்தையும், உணவையும் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம், சாப்பிடும் போது சுற்றிலும் குரங்குகள் மொய்த்துக் கொண்டு இருந்தன ஆனாலும் அவைகளுக்கு நாமாக உணவு போட்டுவிடக் கூடாது என்பதில் தம்பியிடமும் சொல்லிவிட்டேன், ஏனெனில்.

     இப்படி மனிதர்கள் கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடும் குரங்குகளுக்கு உடல் ரீதியான பாதிப்பையும், நாளடைவில் அது வேறு விதமான பாதிப்பையும் கொடுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. மேலும் அவை காட்டின் விலங்குகள் அவைகளுக்கு உயிர்பிழைத்து வாழ இயற்கை உணவு தேடும் வழிமுறைகளை அவைகளுக்கு கொடுத்து இருக்கும், இப்படி நாம் அவைகளுக்கு உணவை வழங்குவது அவற்றின் மரபு அறிவை மழுங்கடிக்க செய்துவிடும்.

     சாப்பிட்டு முடித்ததும் நானும் தம்பியும் ஒரு முடிவுக்கு வந்தோம் குறைந்த பட்சம் 100படி அதிக பட்சம் 150படி ஏறியதும் அடுத்த ஓய்வை எடுக்கலாம் இப்படியே மேலே செல்லும் வரை தொடரலாம் என சொல்லிக்கொண்டே படி ஏறினோம். முதலில் சிரமமாக இருந்தாலும் தலை உயர்த்தி படியை பார்க்காமல் தலை குனிந்தபடியே ஏறியதால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினோம். அதிகபட்சம்  ஒரு மணி நேர ஏற்றத்தில் ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.


    நாங்கள் முதல் நாள் சந்தித்த அந்த கடையில் தான் மீதம் இருந்த பைகளை வைத்துவிட்டு சென்றிருந்தோம், அவைகளை சென்று எடுத்துக் கொண்டு மதிய உணலை அங்கேயே முடித்தோம். கொல்லிமலை பற்றியும், சித்தர் குகைககள் பற்றியும் தகவல் சொன்ன அந்த அண்ணாவுக்கும், காட்டின் ஆதி தெய்வமான கொல்லிப்பாவைக்கும்  நன்றியை சொல்லிவிட்டு கொல்லிமலையில் இருந்து கிளம்ப தயாரானோம்.

     செம்மேடுட்டில் இருந்து இரு வழிகளில் மலையை விட்டு இறங்கலாம், பிரதான சாலை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது மற்றொன்று ஒருசில வளைவுகளை மட்டும் கொண்ட கொஞ்சம் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய பாதை, இறங்கும் போது வளைவுகள் குறைவாக இருக்கக்கூடிய முள்ளுக்குடிசை செல்லும் வழியாக இறங்க முடிவு செய்து போய்க்கொண்டிருந்தோம்.

     ஆனால், எங்கிருந்து கிளம்பினோமோ மீண்டும் அதே அரப்பலீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் பாதை மாறி சென்று கொண்டிருக்கிறோம் என்பது 8 கிமீ வந்த பிறகு தான் தெரிந்தது. இந்த மலைக்கு எங்களை கீழ் இறக்க மனமில்லை போலும்.


      பிறகு சரியான வழியை கேட்டு நமக்கு நன்கு தெரிந்த பிரதான சாலையிலேயே போகலாம் என்று வந்தோம். 

      நாங்கள் இறங்கும் போது கதிரவனும் மலையை விட்டு மறைந்து கொண்டிருந்தான். 70கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து ஒருவழியாக முதல் நாள் பார்த்த அடிவார வனத்துறையின் சோதனை சாவடியை வந்தடைந்தோம். அங்கிருந்து சேலம் பிரதான சாலை சந்திப்பை வந்து சேர்வதற்குள் நன்கு இருட்டி விட்டது, ஏதும் அறை எடுத்து தங்கி காலையில் போகலாமா என தம்பி கேட்டான் ஆனால் இரவு பயணத்தை அனுபவிக்க வேண்டி அவன் சொல்லியதை மறுத்துவிட்டேன்.

     இருவருக்குமே பசியில்லை எனவே தேவைப்படும் போது எல்லாம் ஏதேனும் தேனீர் கடையில் நிறுத்தி தேனீர் மட்டும் குடித்துக் கொண்டே கிளம்பினோம். சேலம்-அரூர் சாலையில் இரவு பயணம் கொஞ்சம் ஆபத்தானது தான் போல, கனரக வாகனங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

     ஆனால் இரவு சாலைகள் தனித்த அழகோடு இருந்தது, வாகனங்கள் ஏதும் அற்ற ஓர் இடத்தில் நின்று விளக்குகளை அணைத்து விட்டு இரவின் வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருந்தோம்.

     தம்பியின் வீட்டிற்கு 100கி.மீ முன்னாடியே ஒரு சில காட்டு பகுதியும் மலையும் ஆரம்பிக்கும் அதை கடந்து சென்றால் நீப்பத்துறை என்ற காடு வரும் அது தான் நான் முதல் நாள் கூறிய புதர்காடு. சரியான வழியில் தான் வந்து கொண்டிருந்தோம் ஆனால் ஒரு இடத்தில் இடது பக்க திருப்பத்தை தவறவிட்டு 10கி.மீ நேராக சென்றுவிட்டோம், அந்த காட்டு பகுதியின் சாலை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்த வழியே சென்ற பிறகு சாலையில் ரோந்து சென்ற ஒரு காவல் அதிகாரியிடம் வழியை கேட்டு பயணத்தை தொடர்ந்தோம் இருந்தோம்.

     நாங்கள் அந்த காட்டுப்பகுதிக்கு செல்லும் போது நள்ளிரவு ஆகிருந்தது, அந்த நேரத்திலும் 15க்கும் மேற்பட்ட நபர்கள் காட்டில் இருந்த ஒரு மரத்திற்கு எதிரே நின்று தாங்கள் பல்லக்கில் ஜோடித்து எடுத்து வந்திருந்த ஊர் சாமிக்கு பறை அடித்து பூஜை செய்தனர். நள்ளிரவில் அடர்ந்த காட்டில் அதை பார்க்க கொஞ்சம் அச்சமாக தான் இருந்தது.

     பிறகு தூரத்தில் ஒரு மலையின் மீது விளக்கு ஏறிவது தெரிந்தது அது தீர்த்தமலையாக தான் இருக்க முடியும், அந்த அடையாளம் தான் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது. வெறிச்சோடி இருந்த தீர்த்தமலை பிரதான சாலையை கடந்து நீப்பத்துறை காட்டுப்பகுதியை வந்தடைந்தோம். பகலில் இவ்வழியே செல்லும் போதே உள்ளூர அச்சத்தை கொடுத்தது, இரவில் காடு எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்தது மேலும் அச்சத்தையே கொடுத்தது.

     நினைத்ததை விட காட்டுபகுதி நீண்ட தூரம் போய்க்கொண்டே இருந்தது, நாங்கள் தனித்துவிடப்பட்டோம் என பயம் வேறு ஏனெனில் இவ்வழியே சாலையில் வழிப்பறி அதிகம் நடக்கும் என்று தம்பி சொல்லிருந்தான், ஆனால் காடு எங்களை தனித்து விடவில்லை, தூரத்தில் சில வீட்டின் முன் விளக்குகள் தெரிந்தது, அதை கடந்ததும் செங்கம் - ஊத்தங்கரை சாலை சந்திப்புக்கு வந்து சேர்ந்தது இன்னும் 2,3 கி.மீ தான் வீட்டை அடைந்துவிடுவோம்.

     அந்த இரவிலும் அம்மா எங்களுக்காக உணவோடு காத்திருந்தாங்க. உணவு முடித்து விரைவாக தூங்க சென்றேன், அடுத்த நாள் காலை ஜவ்வாதுமலை பயணத்திற்கு செல்ல அண்ணன் தஞ்சாவூரில் இருந்து வந்துட்டு இருக்காங்க.

     தூங்க செல்லும் முன் கண்களை மூடி இந்த நீண்ட பயணத்தை மீண்டும் நினைவு கூர்ந்து கொள்கிறேன், ஒரே ஒரு பயணத்தில் எத்தனை எத்தனை அனுபவங்கள், முகம் தெரியாத அன்பு நிறைந்த மனிதர்கள், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத காடும், மலையும், புது அனுபவத்தை கொடுத்த சித்தர் குகைகள் என இப்பயணம் புதிய பரிணாமத்தை என்னுள் விதைத்து விட்டுள்ளது. என்னுடைய கால்களும், எழுத்துகளும் இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மட்டும் உணர்ந்து கொள்கிறேன்.. அடுத்து ஜவ்வாதுமலைக் காட்டில் சந்திப்போம்.

அன்பும் நன்றியும்
பனை சதிஷ்
27.12.20

Comments

  1. எங்கள் ஊரில் வரும் ஆடி மாதம் பனை மரம் நடவு செய்யலாம் என்று என் நண்பர்கள் முடிவெடுத்துள்ளனர்...தயவு செய்து தங்களது ஆதவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் தொடர்பு என்னை பகிரவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்