ஜவ்வாது மலை கானுலா - 2

15.06.20
நீர்போந்தை, படைவீடு காடு

சின்ன வயசு ஆசை

    எங்க ஊருல இருந்து 15கி.மீ தூரத்துல படைவீடு இருக்கு அங்க இருந்து தான் சவ்வாதுமலை காடு ஆரம்பிக்குது, வடதமிழகத்துல இன்னைக்கும் கொஞ்சம் ஊயிரோட்டமா இருக்குற மலை தொடர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எல்லையாவும் ஆந்திரா வரையும் நீண்டு இருக்குற மலை தொடர், படைவீட்டுல காட்டு பாதை வழியா 10,15கி.மீ கடந்து 3மலைய ஏறி போனா உச்சியில கோட்டை மலை பொருமாள் கோவில் வரும், பழமையான கோவில் ஒவ்வொரு வருசமும் புரட்டாசி மாசம் மூன்றாவது சனிக்கிழமை சூரிய வெளிச்சம் நேரா சாமி மேல விழுன்னு சொல்லுவாங்க, எனக்கு அப்போ 12வயசு இருக்கும் எங்க வீட்ல எல்லாரும் ஒரு புரட்டாசி மாசம் சனிக்கிழமை கோட்டை மலை கோயிலுக்கு கிளம்பினோம், சின்ன வயசுல இருந்தே காடு, மலைன்னா அலாதியான பிரியம், ஆர்வம், அதனால எல்லாருக்கும் முன்னாடி சீக்கரமா நானும், அண்ணனும் மலை மேல ஏறிட்டோம்.

 அப்ப எங்க பாட்டியும் கூட வந்துச்சு அதுக்கு அப்பவே 65வயசு இருக்கு, அந்த வயசுலையும் கடினமான மலை பாதைய ஏறி வந்தது எனக்கு அப்போ பெரிசா தெரியல, பிறகு எல்லாரும் சாமிய பார்த்தோம், அப்புறம் சாப்புட்ட பிறகு சுத்தி பாக்கலாம்ன்னு மலைக்கு பின்னாடி பக்கம் போனோம், பின்புற மலைக்கு மேல இருந்து கீழ செங்குத்தா பெரிய ஆழம், அங்க தெரிஞ்ச  பள்ளத்தாக்குல 10,20 குட்டி குட்டி வீடுங்க வத்திபெட்டி மாதிரி தெரிஞ்சது, அவங்க . யார் இருக்கான்னு ஆயாகிட்ட கேட்டே அவங்லாம் காட்டுவாசிங்கன்னு சொல்லி என்ன பயமுறுத்தி வச்சா எங்க ஆயா, ஆனா எனக்கு அந்த ஊர பாக்கனும்ன்னு ரொம்ப ஆச, அப்பவே முடிவு பண்ணினேன் கண்டிப்பா ஒரு நாள் அந்த ஊருக்கு போகனும்ன்னு, அப்புறம் படிச்சிட்டு சென்னைக்கு வந்த பிறகு போக முடியாத நிலை வந்துச்சி, ஆனா ஊருக்கு போகும் போதுலாம் தூரத்துல தெரியும் மலைய பார்த்த உடனே இத பத்தின நினைப்பு வந்துடும், அப்படி இந்த கொரானா ஊரடங்கால ஊருக்கு வந்ததுல இருந்து திரும்பவும் அந்த சின்ன வயசு நினைப்பு வந்துச்சி.

    என்னோட எல்லா பயணங்களிலும் கூடவே வரும் பங்காளி மதன் குமார் சேகரன் கிட்ட இத பத்தி சொல்லி போவோமான்னு கேட்டே இதுவரைக்கும் நான் போகலாம்ன்னு சொன்ன எந்த பயணத்துக்கும் மறுப்பு சொன்னது இல்ல சரி போலாம்ன்னு சொல்லிடா, நான் சின்ன வயசுல கோட்டை மலை கோவிலுக்கு பின்னாடி இருந்து ஏக்கதோடு பார்த்த பள்ளத்தாக்குல இருந்த அந்த குட்டி மலை கிராமத்துக்கு போகனும்ன்னு திட்டம் அந்த காட்டு வழி பாதை எப்படி இருக்கும்ன்னு எங்களுக்கு தெரியாது, ஆனா கிளம்பிட்டோம் சனி கிழமை (13.06) காலையில 8.45கிளம்பி 9.30க்குலாம் மலை அடிவாரத்துக்கு போய்ட்டோம், வெயில் ரொம்ப இல்ல மழைவர மாதிரியே இருந்துச்சி, செண்பகத்தோப்பு அணைக்கட்டு வழியாதான் அந்த பள்ளத்தாக்குக்கு போக முடியுன்னு தெரிஞ்சிட்டோம், ஆனா ஆரம்பமே கடினமான ஒரு பாறைமேல வண்டிய ஏத்தி இறக்க வேண்டியதா இருந்துச்சி, ஒத்தடி மலை பாதை தான், இரண்டு நாளைக்கு முன்னாடி பெய்த மழையோட தடம் வழிநெடுக நல்லா தெரிஞ்சது.

     கொஞ்ச தூரத்துலயே சில மலைவாழ் மக்களை பார்த்தோம் அங்க கிட்ட வழிகேட்டு, கேட்டு போய்ட்டு இருந்தோம், இன்னும் கொஞ்ச தூரத்துல மலையில இருந்து மழை தண்ணி வர ஓடை இருந்துச்சி,  அந்த ஓடைய பார்த்ததும் ஒரு முறை கோவை சதாசிவம் ஐயா கூட #காடறிதல் #கானுலா போகும் போது அவர் சொன்னது நினைவுக்கு வந்துச்சி, காட்டுக்குள்ள எங்கலாம் நீர் ஓடை இருக்கோ அங்கெல்லாம் கண்டிப்பா ஒரு பிரம்மாண்டமான நீர் மருது மரத்த நீங்க பார்க்கலாம், அந்த மரத்தோட வேருங்க தான் மலை ஓடைக்கான நீர் வழி பாதைய உருவாக்கி கொடுக்கும்ன்னு ஐயா சொன்னாங்க. நாங்க பார்த்த ஓடையோட கரையில பெரிய பெரிய நீர் மருது மரங்க இருந்துச்சி நாலு பேரு சேர்ந்தா கூட அந்த மரத்த அணைக்க முடியாது அவ்வளவு பெரிய மரம். அந்த மரத்துக்கு கீழயே நிறைய பீர் பாட்ல ஒடைச்சி போட்டு இருந்தாங்க, சில பைத்தியங்க.

  அடுத்த பத்து நிமிசத்துல நான் சின்ன வயசுல கோட்டை மலைக்கு மேல இருந்து ஏக்கத்தோடு பார்த்த அந்த பள்ளத்தாக்கு குட்டி கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம், அந்த ஊருக்கு "#நீர்போந்தை" ன்னு பெயர்.  ஊருக்கு நுழைச்சதும் எங்களை வரவேற்கிற மாதிரி இரண்டு பனை மரம் ஊரோட ஆரம்பத்துல இருந்துச்சி. வழியில பார்த்த அந்த மலை வாழ் மக்களும் வந்து சேர்ந்தாங்க அவங்க கிட்ட இது தாண்டி என்ன ஊர் இருக்குன்னு கேட்டோம், ஏன்னா அந்த நீர் போந்தை ஊர சுத்தி  நாலா பக்கமும் மலைங்க சூழ்ந்து இருந்துச்சி, மேல முருகமந்தை இருக்கு அங்க ஒரு சாவுக்கு போய்ட்டு இருக்கோம்ன்னு சொல்லி மேல கைகாட்டி நாங்க, பாக்க சின்ன மலையா தான் இருந்துச்சி சரி நாங்களும் வர்றோம் கூப்புட்டு போங்கன்னு சொன்னே, அவங்க ஆரம்பத்துல கொஞ்சம் தயங்குனாங்க ஏன்னா அந்த மலை நேர் செங்குத்தா இருந்துச்சி, பாதையும் சரியா இல்ல, உங்களால ஏற முடியாதுங்கன்னு சொல்லி தடுத்தாங்க ஆனா வற்புறுத்தி கேட்கவே சரி வாங்கன்னு கூப்புட்டு போனாங்க. வண்டிய நீர்போந்தை ஊருலயே விட்டு அவங்க கூட கிளம்பினோம்.

 அவங்க நான்கு மலைக்கு அந்த பக்கம் இருக்குற #எலந்தம்பட்டு மலை கிராம வாசிங்களாம், ஏற்கனவே நான்கு மலையேறி நடந்து வந்து இப்ப இந்த செங்குத்தான இந்த மலையில ஏறிட்டு இருக்காங்க, அவங்க கூட வந்தவங்க வேகமா போக எங்கள இரண்டு பேர் வழிகாட்டிட்டு கூப்புட்டு போனாங்க, அவங்களோட பேச்சும், பேச்சுல இருந்து வந்த அந்த பாசமும் எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சி, அறை மணி நேரத்துலயே எங்க இரண்டு பேருக்கும் வாய்ல நுரை தள்ளாத குறையா மூச்சி இரைச்சிடுச்சி சில நிமிசத்துக்கு மூச்சிவிடவே சிரமமா இருந்துச்சி, இதுக்கு மேல முடியாதுன்னு ஒரு பாறை மேல படுத்துட்டோம், திரும்பி பாத்தா அவங்க கையில வச்சிருந்த பட்ட சாராயத்த குடிச்சிட்டு இருந்தாங்க, மலை ஏறும் போதே எங்கள கொஞ்சம் குடிங்க இல்லன்னா மேல ஏர்றது சிரமம்ன்னு சொன்னாங்க. ஆனா நாங்க பழக்கம் இல்ல வேணாம்ன்னு சொல்லி தடுத்துட்டோம், இன்னும் 10நிமிசம் தான் 10நிமிசம் தான்னு சொல்லிட்டு எங்க கூட பேச்சு கொடுத்துட்டே மலைக்கு மேல இருந்த #முருகமந்தை மலை கிராமத்துக்கு வந்துட்டாங்க, கிட்டதட்ட 1மணி நேரத்துக்கும் மேல இருந்து இருக்கும் எங்க மலையேற்றம், ஆனா அவங்க கால் மணி நேரத்துல போய்டுவோன்னு சொன்னாங்க.

     இதுவரைக்கும் என் வாழ்கையில இது மாதிரி மலைக்கு மேல தனிச்சி இருக்குற கிராமத்துக்கோ, இல்ல இது மாதிரி மலை ஏற்றத்தையோ அனுபவிச்சது இல்ல, மலைக்கு மேல குளிர்ச்சியான சுத்தமான காற்றும், அந்த மலைகிராமமும், சுத்தி தெரிஞ்ச மலைங்களும்ன்னு எல்லாம் எங்கள கிறங்கடிச்சது, மதியம் 1.30ஆய்டுச்சி நல்ல பசி அங்க சாவுக்கு வந்து இருந்த ஒருத்தர் கிட்ட இந்த மலை கிராமம் பத்தி பேச்சு கொடுத்துட்டே பசிக்குது இங்க சாப்புட எதாச்சும் கிடைமுன்னு தயக்கமா கேட்டோ, இதுக்கு ஏன்ணே இவ்வளவு கூச்சப்படுரீங்க வாங்கன்னு கூப்புட்டு போனாரு அப்பாசாமி, அவரு இந்த ஊருல தான் பொண்ணு எடுத்து இருக்காப்புல அவங்க மாமியார் விட்டுக்கு தான் சாப்புட கூப்புட்டு போனாரு, அந்த ஊருல இருந்த எல்லாரும் எங்களயே மிரட்சியா பார்த்துட்டு இருந்தாங்க, ஏற்கனவே நிறைய பேர் எதுக்கு வந்திங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க, சாப்பாடு வந்தது  கொள்ளும், முருங்கக்காவும் சேர்த்த குழம்பு அத அப்பாசாமியே கூட இருந்து எங்களுக்கு பரிமாறிட்டு இருந்தாரு, நீங்களும் சாப்புடுங்கன்னு சொன்னா இல்ல நீங்க முதல்ல சாப்புடுங்கன்னு சொல்லிட்டு எங்களயே பார்த்துட்டு இருந்தாரு, அந்த அம்மா வச்ச குழம்பு சுவை விவரிக்கவே முடியல அவ்வளவு ருசியா இருந்துச்சி. 

  சாப்புட்டு முடிச்சிட்டு வெளிய வந்தா திரும்பவும் அந்த ஊர் இளசுங்க கூட்டமா வந்து எங்கள விசாரிச்சதுங்க எதுக்கு வந்திங்க ஏன் வந்திங்கன்னு, அப்புறம் எங்க ஊர்ல இருந்த ஒருத்தர் அவங்களுக்கு பழக்கம் போல அவர் பேரு சொன்னதும் தான் கலைச்சி போனாங்க, நாங்களும் அந்த மலை கிராமத்தையே சுத்தி பார்த்துட்டு இருந்தோம், எங்கள கீழ இருந்து பத்திரமா மலைக்கு மேல கூப்புட்டு வந்த எலந்தம்பட்டு மலை கிராமத்த சேர்ந்த சின்னராஜ், அய்யாசாமிய அன்பா அணைச்சிட்டு கிளம்புறோன்னு சொன்னோம், ஆனா எங்கள தனியா அனுப்ப அவங்களுக்கு மனசே இல்ல இருந்தும் பிரியா விடைகொடுத்து அனுப்பிவச்சாங்க, கண்டிப்பா அடுத்தமுறை வாங்கன்னு சொல்லி அனுப்புனாங்க, மலை இறக்கம் நேர் செங்குத்து கீழ் இறக்கமா இருந்ததால பொறுமையா இறங்கி வந்தோம். 

   அடிவாரத்துல இருக்குற நீர்போந்தை கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம், நல்லா இருட்டிட்டு மழை வர மாதிரி இருந்துச்சி, மழை வந்துடுச்சினா திரும்பிப்போறது கடினமா ஆய்டும், ஆனா ஒரு வழியா செண்பகத் தோப்பு அணைக்கட்டு தாண்டி படவேடு டவுனுக்கு வந்துட்டோம், எங்களால நம்ப முடியாத மீண்டும் திரும்பி போவோமான்னு தெரியாத ஒரு அற்புத அனுபவத்த கொடுத்தது இந்த மலை பயணம், சின்ன வயசு ஆசை கனவு நிறைவேறிய மன திருப்தியோடு வீடு வந்து சேர்ந்தோம். 

      உண்மையில் காடு, மலை, மரங்களை நேசிக்குரவங்க எந்த தொந்தரவும் கொடுக்காம இங்கு போய்ட்டு வரலாம்.. காடுகள் எப்போம் நம் இருதயத்துக்கு நெருக்கமா இருக்குற இடம் தான் அதை மறுபடியும் மறுபடியும் இதை போன்ற பயணம் மூலம் உணர்ந்துட்டே இருக்கே, இந்த பயணத்துக்கு உடன் வந்த பங்காளி மதனுக்கும், மலை பாதையை காட்டியதும் இல்லாம உடன் வந்து உதவிய மலைவாழ் மக்களான சின்னராஜ்க்கும், அய்யாசாமிக்கும், யார்ன்னே தெரியாத எங்களுக்கு சோறு போட்டு உபசரிச்ச அப்பாசாமிக்கும், அவங்க மாமியாருக்கும் முக்கியமா இந்த காட்டுக்கும், அன்பு முத்தங்களுடன் நன்றிகள்... மீண்டும் செல்வோம் காடுகளில் கரைந்து போக.

முகநூல் பதிவு: 
https://m.facebook.com/story.php?story_fbid=2965302890251279&id=100003147909711

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்