என் பாட்டியின் பனை




     


     நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டின் கோடை வெயில் எப்போதும் போல் அல்லாமல் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. வெயிலின் தாக்கத்தால் மரப் பொந்துகளில் கூட ஓணான்கள் இல்லை. வீட்டுக்கு அருகே வந்துபோகும் சில பறவைகளைத் தவிர மற்றவையின் கூச்சல் எங்களுக்குக் கேட்கவில்லை. தென்னை மரத்தில் இரண்டு அணில்கள் வேகமாக இளநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தன. பகல் நேரத்தில் காற்றும் ஒரே இடத்தில் சுழன்று வீசிக் கொண்டிருந்தது. அதைக் காண மனதில் சிறிது அச்சம் படர்ந்தது.
"என்ன இது, பேய் காற்று" என்று அம்மாவிடத்திலும் அச்சத்தைப் பரப்ப தவறவில்லை, பேய் காற்றால் ஊரில் சொற்பமாக இருந்த பனை ஓலைகளால் வேயப்பட்ட செம்மண் வீடுகளின் மேற்க் கூரைகள், ஆட்டுக் கொட்டகைகள் என அனைத்தும் பெயர்ந்து போகும் அளவிற்கு ஆடிக்கொண்டிருந்தது. தான் இராட்சசன் என்னும் நினைப்பு போலும்.

     ஆனால் இக் காட்சிகள் யாவும் சிறிது நேரத்தில் தலைகீழாய் மாறிப் போனது. மாலை சூரியன் தூரத்தில் இருந்த கூர்மலையின் இடையில் மெதுவாக இறங்கி கொண்டிருந்த போது காற்றின் வேகமும், அதன் வாசமும் மாறியது. திடீரென அகண்ட வானம் தூசியாலும், கரியாலும் நிறைந்த கரு மேகக் கூட்டங்களால் நிரம்பி இருந்தது.அந்த மேகத்தின் பார்வை காய்ந்து வெடிப்புற்ற தன் தாய் நிலத்தை அள்ளி முத்தமிட ஏங்கி தவிப்பது போல் இருந்தது. ஒரு சிறு இடி மேககூடத்தின் வாசல் கதவை திறந்து விட பேரருவியாய் கொட்டித் தீர்த்தது மாமழை.

     பல ஆண்டுகள் கழித்து கோடை மழையை இப்போது தான் காண்கிறாள் என் பாட்டி. காற்றும் மழையும் சுழன்று அடிக்க நானும் அண்ணனும் பாட்டியின் கையை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டின் நடு வாசலுக்கு வந்து அவளையே சுற்றி சுற்றி ஆடிக்கொண்டு இருந்தோம். தள்ளாத வயதில் அவளுக்கான ஒரே சந்தோசம் நாங்களாக தான் இருந்தோம்.  "ஏய்ய்ய்ய்ய், புது மழை உடம்புக்கு ஆகாதுல, உள்ள போங்கடா"ன்னு கம்பீர குரலில் அப்பா.... அவர் எங்களை திட்டத் தயாராகும் முன் மூவரும் பின் புற தோட்டத்திற்கு ஓடிவிட்டோம். சரி கண்ணு சீக்கரம் தூங்குங்க நாளைக்கு காலையில நாம ஆத்துக்கு துணி துவைக்க போகனும்னு பாட்டி சொன்னதும், அண்ணன் அப்பா அம்மா கூட தூங்க போய்ட்டான், நான் பாட்டியின் மடியிலேயே என் இடது கை கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.

     ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே எங்கள் ஊர் ஆற்றில் தண்ணீர் வரும், இந்த கோடை மழையால் அடுத்த ஒரு சில வாரத்திற்கு ஆற்றில் ஒரளவுக்கு தண்ணீர் வரலாம். கடந்த  இரண்டு, மூன்று ஆண்டாக ஆற்றில் தண்ணீர் வராததால் அழையா விருந்தாளிகளாக மணல் லாரிகளும், மாட்டு வண்டிகளும் ஆற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. காலையில் எல்லோரும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். ஆற்றின் நடுவே எரிகற்கள் விழுந்த அளவிற்கு நிறைய பள்ளம் இருந்தது,  தூரத்தில் தூசியை துரத்திக் கொண்டு பறந்து கொண்டிருந்தது மணல் ஏற்றி செல்லும் லாரிகள். எரும்புகள் வரிசை கட்டிப் போவது போல லாரிகளின் அணிவகுப்பை கண்ணீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி. ஏன் என்ற காரணம் தெரியாமல் நான் அவளையே பார்த்து விழித்துக் கொண்டிருந்தேன்.

      கால் முட்டி அளவே நீர் ஓடிக்கொண்டு இருந்த ஆற்றில் இறங்கிய பாட்டி துணிகளை பாறையின் மீது வைத்து விட்டு கரை ஓரம் சிறு சிறு குழிகளை போடச் சொன்னாள். நானும் அண்ணனும் போட்டி போட்டுக் கொண்டு சிறு சிறு குழி போட்டுக்கிட்டு இருந்தோம். பாட்டி போதும்னு சொன்னதால் நிறுத்தினோம். எதுக்கு பாட்டி இந்த குழின்னு கேட்டு முடிக்கும் முன் அந்த குழிகளில் நீர் மெல்ல ஊற்றெடுத்து சிறிது நேரத்தில் குழி முழுவதும் நீர் நிரம்பியது. பக்கத்தில் இருந்த வழுக்குப் பாறையில் இருந்து நானும் அண்ணனும் குதித்து விளைடியாடிக் கொண்டுடிருந்தோம். ஆனால் அந்தப் பாறை அவ்வளவு வழுக்கலாக எல்லாம் இல்லை. பரந்து நீண்ட ஆற்றைப் பார்க்கும் போது போன வாரம் பாட்டி சொன்ன கதை நினைவு வருதுன்னு அண்ணன் கிட்ட சொல்ல ஆரம்பிச்சேன். என்ன கதைன்னு அண்ணன்  ஆர்வமாகக் கேட்டான்.

       நம்ம ஆயா (பாட்டி) சின்ன வயசா இருக்கும் போது இதே மாதிரி ஒரு வெயில் காலத்துல ஆத்துக்கு வந்து மழை வரணும்னு படையல் போட்டுட்டு இருந்தாங்களாம். கிட்டதட்ட 100,150 மாட்டு வண்டில ஆளுங்க ஆத்துல அப்போ நின்னுட்டு இருந்தாங்களாம். இப்ப இருக்குற மாதிரி ஆத்துல நாணல் செடியோ, சீமைக் கருவேல மரமோ ஏதுவும் அப்போ இல்லை. கண்ணுக்கு தெரியுர வரைக்கும் ஆறு மைதானம் மாதிரி மணல் மட்டும் தான் தெரியுமாம். அப்போ நடுவெயில் கடந்து போய்ட்டு இருந்துச்சி சூரியன் மேகத்துக்குள்ள இருந்து வெளிய வரும் போது மேகத்தோட நிழல் ஆற்றுத் தரையில் பட்டு சூரிய ஒளி வேகத்திற்கு ஏத்த மாதிரி மேகத்தின் நிழல் முன் நகர்ந்து வந்துச்சாம். இத பாத்தவங்க அய்யயோ ஆத்துல வெள்ளம் வருது யோன்னு தலைதெரிக்க அலறி அடிச்சிட்டு ஓடினாங்களாம், அப்படி ஓடியாரும் போது தான் நம்ம தாத்தவ பாட்டி பாத்துச்சாம்டா, இப்படியே பேசிட்டு ஒருத்தரு மேல ஒருத்தர் வேகமா குதிச்சி விளையாடிட்டு இருந்தோம்.
நல்லா ஆட்டம் போட்ட பிறகு பசி வந்துடுச்சு. வாடா சாப்பிட போலாம்ன்னு அண்ணன் என்னைக் கூட்டிகிட்டு கரைக்கு வந்துட்டான். இப்ப அந்த சின்னச் சின்னக் குழியில தண்ணி அள்ளி குடிக்குற மாதிரி தெளிவா இருந்துச்சு, அம்மா கிட்ட இருந்த பழைய சாதத்துல சம்பார் ஊத்தி பிசைஞ்சி எல்லாருக்கும் உருண்டை உருட்டி கொடுத்தா பாட்டி. நாங்க சாப்புட்டு இருக்கும் போது பாட்டி கரைக்கு அந்த பக்கம் இருக்குற ஒரு ஒற்றைப் பனை மரத்தயே பாத்துட்டு இருந்தா, அப்புறம் எழுந்து அந்த ஒற்றை பனமரம் நோக்கி நடந்து போய்ட்டு இருந்தா, நானும் அண்ணனும் கிண்ணத்துல இருந்த உருளைகிழங்கு பொரியலுக்கு சண்ட போட்டுக்கிட்டு இருந்தோம். அதனால் பாட்டி அந்த பக்கம் போனதை கண்டுகொள்ளவில்லை. பொரியலை சாப்பிட்டு முடித்த பிறகு தான் பாட்டியின் செய்கையை அவதானித்தேன்.

     ஆற்றின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும் அந்த உயரமான ஒற்றைப் பெண் பனை மரம். எப்போதும் இவளின் வருகைக்காக காத்திருக்கும். புதிதாக ஈன்ற தன் குட்டியை நாவால் தொட்டு தடவி சுத்தம் செய்யும் பசுவை போன்று, பாட்டி அந்த மரத்தை பார்த்து கொண்டிருந்தாள். இரண்டு, மூணு தடவ அந்த மரத்தை ரத்தம் சுண்டிய, தோல் சுருங்கிய அவளின் கையால் தொட்டு பாத்துவிட்டு கீழே கிடந்த பனந்தும்பு, காய்ந்த மட்டைகளை எல்லாம் எடுத்து ஓரமா போட்டுட்டு அம்மரத்தை சுற்றி சுத்தம் செய்துட்டு, அந்த பனை மரத்துக்கூட ரொம்ப நேரம் ஏதேதோ பேசிட்டு இருந்தா. பிறகு அதோட நிழலில் உட்கார்ந்துட்டு திரும்பி வந்துட்டா.

      எல்லாரும் வீட்டுக்கு போகும் போது நான், என்ன பாட்டி அந்த பனை மரத்துக்கிட்ட பேசிட்டு இருந்த, பனமரம் பேசுமான்னு அவகிட்ட கேட்டேன், அவ சொன்னா ஓ அந்த பனமரம் நல்லா பேசும், நாம பேசுறது கூட அதுக்கு ஜோரா கேட்கும்னு சொன்னா. ஆனா அவ சொல்லுறது எதுவும் எனக்கு புரியல, ஏன்னா அப்போதைய (இப்பவும்) தமிழ் சினிமாக்களில் யானை, நாய், குரங்கு போன்ற மிருகங்கள் தானே பேசும், மரம் பேசுவதை எந்த சினிமாவும் காட்டினது இல்லையே. பாட்டி கிட்ட அந்த மரம் என்ன பேசுச்சு சொல்லு பாட்டின்னு கேட்டுகிட்டே இருந்தேன், ஆனா அவ சிரிப்ப மட்டும் பதிலா கொடுத்துட்டு போய்ட்டா.

      வீட்டுக்கு வந்ததும் அம்மா கிட்ட கேட்டேன், அம்மா, ஆயா ஆத்தங்கரையில் இருக்குற அந்த ஒத்த பனை மரத்துக் கிட்ட உட்காந்து ரொம்ப நேரமா ஏதேதோ பேசிட்டு இருந்தான்னு சொல்ல, அதுக்கு அம்மா சொல்றா அந்த கிழவிக்கு வேற வேலை இல்லை பித்து புடிச்ச மாதிரி என்னத்தையாச்சும் பண்ணிட்டு இருக்கும். அதையெல்லாம் வந்து கேட்டுட்டு இருப்பியா, போடா போய் தூங்கு நாளைக்கு ஸ்கூலுக்கு போகனும்லன்னு சொல்லி அனுப்பிட்டா.

       ஆனால் அன்றைய இரவு தூக்கம் இல்லாமல் பாட்டி பன மரத்துக்கிட்ட பேசினதையே நினைச்சிட்டு இருந்தேன். தூக்கத்தில் நானும் தேனீ போல பறந்து பனை மரத்தின் ஊச்சிக்கு சென்று அதனிடமே கேட்குற மாதிரி கனவு கண்டேன். அடுத்த நாள் ஸ்கூல் முடிஞ்சி நேரா தோட்டத்துக்கு ஓடிப்போனேன். பாட்டி கிட்ட இதை கேட்டே ஆகனும்ன்னு.. அவ என்னோட தவிப்பு பற்றி கொஞ்சமும் சட்டை செய்துக்காம ஓரமா உட்காந்துட்டு மாட்டு சாணத்த வைக்கோல், மர உம்மி போட்டு உருண்டையை தரையில் தட்டிட்டு இருந்தா. நான் பக்கத்துல உட்காந்துட்டு எதாச்சும் கதை சொல்லு ஆயான்னு கேட்க, அவ என்ன கத ராசா சொல்லுறதுன்னு கேட்டதும், நான் உடனே நேத்து பன மரத்துக்கிட்ட பேசிட்டு இருந்தியே அந்த கதைய சொல்லு சொல்லுன்னு ஆர்வமா கேட்க, அவளும் பெரு மூச்சி வாங்கி எழுந்து, சாணக் கூடையையும் வைக்கோலையும் எடுத்து ஓரமா போட்டுட்டு கைய கழுவி சேலை முந்தில தொடைச்சிகிட்டு, "வா ராசா"ன்னு, அவ மடியில் படுக்க வச்சி பன மரத்திடம் பேசின கதையை சொல்ல ஆரம்பிச்சா.

     பாட்டிக்கு அப்ப உன்னோட வயசு தான் ராசா இருக்கும், தினமும் எங்க அய்யா (அப்பா) கூட தான் கழனிக்கு (வயல்) போவேன், அப்போ நம்ம கழனியை சுத்தி மொத்தமா 150 பன மரத்துக்கு மேல இருந்துச்சி, வரப்பு சுத்தி வரிசையாவும், கம்பீரமாவும் நின்னுட்டு அதோட ஓலைகளால சத்தம் போட்டு எல்லோரையும் மிரட்டிட்டு இருக்கும். அய்யா கூட இருக்குறதால எனக்கு பயம் இருக்காது. ஆனா அதோட ஓலைகள் எழுப்புற சத்தம் உள்ளூர பயத்த கொடுக்கும், இதனாலயே பகல்ல பனமரத்து பக்கம் போகாத பேய் புடிக்கும்னு சொல்லுவாங்க, சில பனமரத்த தவிர்த்து நம்ம தோட்டத்துல மட்டும் தான் நிறைய நுங்கு காய்க்குற பெண் மரம் இருக்கும், நுங்கு பருவம் வந்தா போதும் ஊருல இருக்குற பயலுக பூரா நம்ம வயல்ல தான் ஈ மாதிரி மொய்ச்சிட்டு இருப்பானுங்க, எங்க அய்யா நெஞ்ச அணைச்சிட்டு மரம் ஏறுவதே தனி அழகு, தவளைங்க கரையில இருந்து தண்ணிக்கு தாவுர மாதிரி நெட்டுக்கா இருக்குற மரத்துல தாவி தாவி ஏறுவாரு, நான் தலைய தூக்கி மேல பாக்குறதுக்குள்ள அய்யா மரத்துமேல உக்காந்துட்டு, "கண்ணு, ஓரமா போய்க்க, நுங்கு தள்ளிவிட போறேன்"னு சொல்லுவாரு, அய்யா வரவரைக்கும் எதையும் எடுக்காதன்னு சொல்லிட்டு என்னோட அடுத்த கண் சிமிட்டலில் கீழே இறங்கி வந்திருப்பாரு. 

     ஒவ்வொரு நுங்கு குலையிலையும் 10,15 இளம் நுங்குகள் இருக்கும். ஒவ்வொன்னா அறுத்து அறுத்து சாப்புடு கண்ணுன்னு கொடுப்பாரு. என்னோட விரல்கள் வீங்கி போய் வலிக்குற வரைக்கும் நுங்கு ஓட்டையை குத்தி சாப்புட்டே இருப்பே, நுங்கு கீழே விழும் சத்தம் கேட்டு மத்த பசங்களும் ஓடி வந்து அய்யா எனக்கு எனக்குன்னு அய்யாவை சுத்திட்டு இருப்பானுங்க. ஆனாலும் முகத்துல எந்த கோவத்தையும் காட்டிக்காம எல்லாருக்கும் நுங்க அறுத்து கொடுத்து ஓடிப்போங்கடான்னு துரத்தி விடுவாரு. அவனுங்களும் நுங்க வாங்கிட்டு பின் பக்கம் கிழிஞ்ச அரை டவுசர மறைச்சிகிட்டு தெறிச்சி ஓடுறத பார்க்க சிரிப்பா இருக்கும்.

     அய்யா கிட்ட நுங்கு மட்டும் ஏன் அவ்வளோ உயரத்துல இருக்குன்னு கேட்டேன். அதுக்கு, அவரு பனை மரம் தான் கண்ணு நம்ம சொர்க்கம், அங்க போகனும்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் போகனும், நாம எப்போதும் சொர்கத்துக்கு ரொம்ப நெருக்கமா இருக்கனும் கண்ணுன்னு சொல்லுவாரு. ஒவ்வொரு மரமா அய்யா ஏறி நுங்கு வெட்டி போடுவாரு. ஆனா ஒவ்வொரு மரத்துலயும் ஒரு குலைய அப்படியே விட்டுட்டு வருவாறு. எனக்கு அது மட்டும் ஏன்னு புரியல.  இப்படியே தினமும் நடக்கும். ஒரு நாள் அய்யா கிட்டயே கேட்டேன், ஏன் எல்லா மரத்துலையும் ஒரு குலைய மட்டும் விட்டு வரிங்கன்னு, அதுவா கண்ணு நமக்கு இந்த மரம் தானே சோறு போடுது, இந்த மரம் தானே சாமியா இருந்து நம்மல காப்பாத்திட்டு இருக்கு, இந்த மரம் நமக்கு என்னலாம் செய்யுதோ, நாமும் அதுக்கு திருப்பி செய்யனும் கண்ணு, அதுக்காக தான் நாம வருசா வருசம் பொங்கல் பண்டிகையின் போது பன மரத்துக்கு படையல் போட்டு கும்பிடுறோம்.

     அப்புறம் நான் மேல விட்டு வந்தேன்ல, அந்த நுங்குலாம் காய்ச்சி பழமாய் கீழே விழும். அதை கொண்டு போய் இதை மாதிரி நாம இன்னொரு இடத்துல நடுவோம், அந்த விதை வளர்ந்து மரமாகி நீ பெரிய புள்ளையா ஆன பிறகு உனக்கு நுங்கு தரும் கண்ணுன்னு சொன்னதும், அய்யா அப்ப நானும் பனமரம் வளர்க்கனும் சொன்னே, சரி கண்ணு இப்ப நுங்கு தான் கிடைக்கும் இன்னும் இரண்டு மாசம் கழிச்சி பனம் பழம் கிடைச்சிடும். அப்புறம் அய்யா எப்படி பன விதை போடனும்னு சொல்லித் தர்றேன்  சரியா.

     ஒவ்வொரு நாளும் அய்யா பனை மரத்த பத்தி புதுசு புதுசா சொல்லிட்டு இருந்தாரு, ஒருநாள் கீழ் தாடை பல்லு வலிக்குதுயான்னு அழுதுட்டு இருந்தேன். அப்ப இந்தா கண்ணு இத நல்லா கடிச்சி எச்சில் துப்பு சரியா போய்டும்னு சொல்லி பனை மரத்தோட வேரை அறுத்து கொடுத்தாரு, அடுத்த நாள் வீட்ல இருந்த பசு மாடுக்கும், கன்றுகளுக்கும் ஆண் பனை மரத்தோட பூவையெல்லாம் துண்டு துண்டா வெட்டி போட்டுட்டு இருந்தாரு. இது எதுக்குயான்னு கேட்டேன், இத சாப்பிட்டா மாடு நிறைய பால் கரக்கும் கண்ணுன்னு சொன்னாரு. இப்படி ஒவ்வொரு நாளும் பனை பற்றி ஒவ்வொரு தகவல் சொல்லிட்டே இருந்தாரு. எப்ப பேசுனாலும், "கண்ணு, நாம எங்க இருந்தாலும் சொர்க்கத்துக்கு நெருக்கமா இருக்கனும்"ன்னு சொல்லுவாரு. (அவருக்கு சொர்க்கம்னா பனை மரம் மட்டும் தான்).

      இப்படியே நாட்கள் கடந்துச்சு, ஒரு நாள் கழனிக்கு போகும் போது வரப்பு ஓரமா ஒரு பனம்பழம் விழுந்து கிடந்தது. (எனக்கு அப்ப அது என்னன்னு தெரியாது) அதை எடுத்து அய்யா கிட்ட கொடுத்து என்னன்னு கேட்டேன் , இதான் கண்ணு முன்ன ஒருமுறைக்கு அய்யா சொன்ன பனம் பழம், இந்த பழத்துக்கு நிகரான பழத்தை ஆண்டவன் இன்னும் பூமியில படைக்கலன்னு சொல்லிட்டு இருக்கும் போதே அதை நல்லா உறிச்சு உள்ள இருந்த மஞ்ச தோலை எடுத்து, இந்தா இதை நல்லா கடிச்சி சாறு முழுங்கு கண்ணுன்னு கொடுத்துட்டு அவரும் சாப்ட்டுகிட்டு இருந்தாரு, முதல் முறையா பனம்பழம் சாப்பிட்டதால தொண்டை ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னேன். உடனே இடுப்புல இருந்த கருப்பட்டி கட்டில கொஞ்சம் ஒடைச்சி இந்தா கண்ணு வாய்ல போட்டுக்கன்னு கொடுத்தாரு, அப்புறம் பழத்தோட வாசனை புடிச்சி போக அடுத்து இருந்த முழு பழத்த நான் மட்டும் சாப்பிட்டேன், அப்புறம் அந்த கொட்டைய பத்திரமா வச்சிக்க கண்ணு. அதுதான் பனை விதை, அது வளர்ந்த பிறகு  பெரிய மரமா வந்து உனக்கு நுங்கு தரும்னு சொல்லிட்டு இருக்கும் போது ஆசை ஆசையா எல்லா கொட்டைகளையும் வயலுக்கு போன தண்ணில நல்லா கழுவி கூடையில போட்டு வச்சிக்கிட்டேன்.

     அடுத்த இரண்டு வாரம் தினமும் பொழுது விடியுறதுக்கு முன்னாடியே வயலுக்கு அய்யா கூட வந்து பனம் பழம் எடுத்து சேகரிச்சிட்டு இருந்தேன், ஒரு நாள் கண்ணு நீ சேமிச்சு வச்சிருக்குற பனம் பழத்துல நல்ல பழமா இரண்டு எடுத்துட்டு வா அய்யா உனக்கு இன்னோன்னு சொல்லித் தரேன்னு சொன்னதும், எப்படியும் சாப்புடறது தான் அய்யா சொல்லுவாருன்னு பின்னங்கால் முதுகுல அடிக்குற அளவுக்கு வேகமா ஓடிப்போய் நல்ல பழமா பாத்து எடுத்துட்டு வந்தேன் , அதுக்குள்ள அய்யா காய்ந்த பன ஓலைங்க, காய்ந்த மட்டைங்களை ஒன்னா அடுக்கி அடுப்பு எரிய வச்சிட்டு இருந்தாரு, எதுக்கு அய்யான்னு கேட்க, கொஞ்சம் இரு கண்ணுன்னு கையில இருந்த பனம்பழத்த குச்சில சொருகி நெருப்புல காட்டிட்டு இருந்தாரு, எனக்கு கஷ்டமா போச்சு. நெருப்புல காட்டினா உள்ள இருக்குற விதை செத்து போய்டும்னு நினைச்சி, என் முகம் வாடி போனத பாத்துட்டு, ஏன் கண்ணு அய்யா பழத்த நெருப்புல போட்டானேன்னு கவலையா.?, நான் ம்ம்ம்ம்ம் தலை மட்டும் அசைச்சேன், அப்போ அய்யா சொன்னத என்னால இப்ப வரைக்கும் மறக்க முடியல, கண்ணு நாம பனம் பழத்த நெருப்புல எரிச்சாலும் அதுல இருக்குற விதைக்கு ஒன்னும் ஆகாது, எந்த நெருப்பு கொண்டும் அதை அழிக்க முடியாது, பூமியில நமக்கு தெரிஞ்சு பனம்பழம் மட்டும் தான் நெருப்புல சுட்டாலும் மீண்டும் முளைக்கும், இவ்வளவு ஏன் கண்ணு நெருப்புல சுட்ட பனம் பழத்தோட கொட்டை தான் இன்னும் வீரியமா முலைக்கும்னு அய்யா சொல்லச் சொல்ல என் முகம் மகிழ்ச்சியின் உச்சத்துல இருந்துச்சு. 

   பனபழத்த அப்படியே சாப்பிட்றது ஒரு சுகம்னா அதை சுட்டு சாப்புட்றது இன்னொரு சுகம், அதிலும் கருப்பட்டிய பாகு போல ஆக்கி அதை  சுட்ட பனம் பழத்து மேல ஊற்றி சாப்பிடுற சுகம் எங்கையும் கிடைச்சிடாது, உங்களுக்கெல்லாம் அந்த சுவை என்னன்னு கூட தெரியாது ராசா, ஆனா எங்க அய்யாவுக்கு அவரோட சொர்க்கம் எல்லாத்தையும் கொடுத்துச்சு. பதிலுக்கு இப்ப அவர் திருப்பி செய்யுற நேரம் வந்தது.

     இரண்டு வாரம் கழிச்சி ஒரு நாள் இரவு சாப்புட்டுட்டு இருக்கும் போது கண்ணு நீ வச்சிருக்குற பன விதையில பாதிக்கும் மேல எடுத்து தண்ணில ஊறப் போட்டுவை. காலையில் நாம பன விதை வைக்க போவோம்னு சொல்லிட்டு தூங்க போய்டாரு. ஆனா நான் அன்னைக்கு இரவு தூங்காம பனை விதைகளையே பாத்துட்டு இருந்தே, ஒவ்வொரு விதையா எடுத்து நீ சீக்கரம் வளர்ந்து எனக்கு நுங்கு தரணும்னு சொல்லி சொல்லி தண்ணியில ஊற போட்டு இருந்தே, இதை எல்லாம் எங்க அய்யா கவனிச்சிட்டு தான் இருந்திருக்காரு.

      அடுத்த நாள் ஊர்ல இருக்குற சின்ன பசங்க எல்லாரையும் ஆற்றங்கரைக்கு கூப்புட்டுட்டு வந்தாரு. எனக்கு எதும் புரியல எதுக்கு ஆற்றங்கரைக்கு வரணும் பனை விதைய நம்ம வயல்ல தானே வைக்கனும்ன்னு நினைச்சிட்டு இருந்தே, அப்ப தான் அய்யா நாம ஏன் ஆற்றங்கரையில் பனைய விதைக்கனும்ன்னு பேச ஆரம்பிச்சாரு, எனக்கு அது வரைக்கும் பனை விதை போட்டா நுங்கு கிடைக்கும்ன்னு தான் நினைச்சிட்டு இருந்தே ஆனா அய்யா பேசின பிறகு தான் பனை விதைக்குறது எவ்வளவு முக்கியன்னு மண்டையில் ஏறிச்சி.  கண்ணுங்கலா  அய்யா ஏற்கனவே வரிசையா சின்ன சின்ன குழி வெட்டி வச்சிருக்குறே நீங்க எல்லாரும் ஒரு ஒரு விதையா எடுத்து குழியில போட்டு விடுங்கன்னு சொல்ல, எல்லாரும் ஆர்வமா விதைகளை கையில எடுத்து விதைக்க போனோம், நான் தான் முதல் விதைய போட்டே, போடும் போதே சொர்கத்துக்கிட்ட கிட்டே சீக்கரம் முலைச்சி மரமாகனும்ன்னு வேண்டிக்கிட்டே குழியல போட்டு முடினேன். அப்புறம் வரிசையா எல்லோரும் குழியில விதைகளை போட்டாங்க குறைந்தது 100விதைகளை அன்னைக்கு விதைச்சி இருப்போம், என்னோட விதைக்கு மட்டும் நானே கையால குழிய தோண்டி தண்ணி ஊத்தி மண்ணுக்கு மேல காய்ந்த இலைகள் எல்லாம் எடுத்து உரம் போட்டு வந்தே.

      வீட்டுக்கு வந்ததும் நாம விதைக்கு போட்டது போக மீதம் இருந்த பனை விதைய என்னங்கய்யா பண்ணுறதுன்னு கேட்டேன் , நாளைக்கு சொல்லுறேன் கண்ணுன்னு தூங்க போய்டாரு. மறுநாள் எல்லா விதைகளையும் கூடையில வச்சிட்டு வயலுக்கு வந்துட சொல்லிட்டு அவர் முன்னமே போய்டாரு. நான் போறதுக்குள்ள வரப்புக்கு பக்கத்துல ஏரி மண்ண கொண்டு வந்து இரண்டடி உசரத்துக்கு குமிச்சி வச்சிருந்தாரு, இங்க வா கண்ணு நீ வச்சிருக்குற விதைய எல்லாம் இந்த மண் மேட்டு மேல சுத்தி அடுக்கி வை- ன்னு சொல்ல, நானும் என் பள்ளி தோழியும் போட்டி போட்டு எல்லா விதையையும் ஆமை ஓடு மாதிரி கவுத்து வச்சிட்டோம், நான் கேட்குறதுக்கு முன்னாடியே கண்ணு நம்ம சொர்க்கம் இருக்குல அத கேட்டதெல்லாம் கொடுக்கும் பூலோக கற்பக தரு- ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.

      அது எப்படிங்கய்யான்னு கேட்டதும், அய்யா ஆரம்பிச்சாரு. முதலில் பொங்கல் முடிஞ்சி நமக்கு கள்ளும்/பதனீரும் கொடுத்துச்சா, அப்புறம் உனக்கு சாப்பிட நுங்கு கொடுத்துச்சா, அப்புறம் பனம் பழம் சுட்டு சாப்பிட்டோமா, ம்ம்ம் ஆமா ஆமா நாம சாப்பிட்ட அந்த கொட்டைய தானே விதைக்கு போட்டோம் (நானு), ஆமா கண்ணு இப்ப மீதம் இருக்குற விதைய இப்படி மண் மேடு அமைச்சி அதுக்கு மேல வச்சி விட்டா நாம ஆத்துக் கரையோரம் வச்ச விதைங்க மாதிரியே இதுக்கும் வேர் கீழ இறங்கும். அந்த வேர் தான் பனங்கிழங்கு. மூணு நாளு மாசம் கழிச்சி இந்த மண்ண துத்தி விட்டா எல்லா விதையும் முளைச்சி வேர் விட்டு இருக்கும். அதைய அப்படியே எடுத்து கழுவி, கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு தண்ணில கொதிக்க விட்டு அவிச்சி சாப்பிடலாம், இல்லைனா அவிச்ச கிழங்க காய வச்சி துண்டு துண்டா நறுக்கி பொறுமையா வச்சி சாப்பிடலாம், நீ ஸ்கூல் போகும் போது கடையில இருக்க மிட்டாயிக்கு பதிலா, நறுக்கி வச்ச இந்த பனகிழங்க தினமும் வாயில போட்டுகிட்டு போலாம். இப்படி வருசம் முழுக்க நமக்கு சாப்பிட எதாச்சும் கொடுத்துட்டே இருக்கும்,நம்ம சொர்க்கம். அய்யா இப்படி சொல்ல சொல்ல எனக்கு வாயில ஓரமா எச்சி ஊறிட்டு இருந்துச்சி. அத அய்யா சிரிச்சிட்டே தன் வேட்டில தொடச்சி விட்டாரு.

      நான் மட்டும் தினமும் யாருக்கும் தெரியாம ஆத்தங்கரைக்கு போய் நாங்க விதைச்ச இடத்தை பாத்துட்டு இருப்பே, அது மழை காலங்குறதால நாம தண்ணி ஊத்த தேவையில்லை, அதுவா வளர்ந்துடும்னு அய்யா சொன்னாங்க, ஆனா தினமும் போய் பார்த்துட்டு வருவே எதுவுமே முளைச்சி இருக்காது,  சரியா ஆறு மாசம் இருக்கும் நான் விதைச்ச முதல் பனை விதை குச்சியாட்டம் அழகா இரண்டு இலை விட்டு இருந்துச்சி அப்ப எனக்கு இருந்த சந்தோசத்த சொல்ல முடியாம, அய்யான்னு கத்திட்டே வீட்டுக்கு ஓடி போய் சொன்னேன். அய்யாவுக்கும் மகள் பனை மேல இவ்வளவு பிரியமா இருக்காளேன்னு சந்தோசம். கொஞ்ச நாளுக்குள்ள நாங்க விதைச்ச விதைகளில் பாதிக்கும் மேல முளைச்சி வந்துடுச்சி, அப்ப அய்யா சொன்னாங்க கண்ணு பனை முளைச்சிடுச்சின்னு அதைய கண்டுக்காம விட்டுற கூடாது, நீ எப்படி குழந்தையா இருக்கும் போது நாங்க உன்ன பாத்துக்கிட்டமோ அதே மாதிரி நீ இங்க வளர்ந்து இருக்குற பனைகளை பார்த்துக்கனும், இன்னும் கொஞ்ச வருசத்துக்கு நீ இதுங்களுக்கு தண்ணி ஊத்தி, மட்டைகளை கழிச்சி விடனும், அப்புறம் எந்த காலத்துக்கும் இந்த பனை உன்ன வாடி போக விடாதுன்னு சொன்னாரு.

      நானும் என் பள்ளி தோழிகளும் வாரத்துக்கு இரண்டு முறையாவது அந்த குட்டிப் பனைகளுக்கு தண்ணி ஊத்தி சுத்தி முள் வேலி கட்டி விட்டோம். சில வருடம் கழிச்சி குச்சி மாதிரி இருந்த பனை நல்லா வளர்ந்து இலை விட்டு பெருசா ஆய்டுச்சி, நாங்களும் அந்த பனை கூடவே வளர்ந்து பெரிய புள்ளைங்க ஆனோம், நான் எட்டாவது படிச்சி முடிக்கும் போதே உங்க தாத்தன எனக்கு கட்டி வச்சிட்டாங்க, அவருக்கு பக்கத்து ஊரு தான் ஆனா என்னால எங்க அய்யாவையும் நான் வச்சி வளர்த்த என் பனையையும் விட்டு போக மனசே இல்ல, உங்க தாத்தாவுக்கு அப்ப வேலை கிடையாது அதனால என் கூடவே அவரும் இருந்துட்டாரு.

     தினமும் பீடியும், சீட்டுமா அவரு ஊதாரியா சுத்திட்டு இருப்பாரு. ஆனா அய்யாவும் பனையும் என் கூட இருக்குறதால பெருசா கஷ்டம் தெரியலை, கட்டி கொடுத்த சில வருசத்தலயே அய்யா மேல போய்டாரு. என்னால அந்த இழப்ப தாங்கிக்கவே முடியல, நான் பொறக்கும் போதே அம்மா மேல போய்ட்டாங்க, அய்யா தான் எனக்கு அம்மாவாவும் இருந்து பார்த்துகிட்டாரு, இப்ப அவரும் இல்ல. எனக்கான ஒரே ஆறுதல் என்னோட பனை மட்டும் தான் இருந்துச்சி, என் மொத்த வேதனையையும் அதுகிட்ட தான் சொல்லி அழுவே, நான் அழும் போது என்னை அதோட தோல்ல சாய்ச்சிட்டு தட்டி கொடுக்குற மாதிரி இருக்கும்.

       சில வருசம் கழிச்சி என்னோட பனை முதல் குருத்த வெளிய காமிச்சது, ஆமாம் நான் ஆசைப்பட்ட மாதிரி அது ஒரு பெண் பனை தான், வீட்ல பொம்பள புள்ளைங்க வயசுக்கு வந்தா எப்படிலாம் சடங்கு செய்யவோமோ அதே மாதிரி வயதுக்கு வந்த என்னோட பனைக்கும் சேலை கட்டி விட்டு சடங்கு பண்ணி படையல் போட்டோம், எல்லாரும் பொதுவா தென்னை மரம் வயசுக்கு வந்தா தான் இப்படி சடங்கு பண்ணுவாங்க. முதல்முறை நான் பனைக்கு சடங்கு செய்யனும்ன்னு அடம்புடிச்சி செய்தே. நாங்க வரிசையா வச்ச பனைகளில் சிலவும் குறுத்து தள்ளியது, ஆனால் சில ஆண்டுலயே எல்லாம் மாறிடுச்சி, மழை இல்ல, அதனால ஆத்துலயும் ஏரிலையும் தண்ணி இல்லை, கிணத்துல கூட தண்ணி வத்தி போய்டுச்சி, விவசாயமும் பெருசா இல்ல ஊருல பெரிய வறட்சி, அந்த நேரம் பார்த்து செங்கல் சூளை போடுறவங்க எங்க ஊருக்கு வந்து பெரியவங்க கிட்ட பேசி ஊருல இருந்த பனை மரத்தலாம் வெட்டி லாரில ஏத்திட்டு இருந்தாங்க, நான் எவ்வளவோ சொல்லியும் உங்க தாத்தா நம்ம வயல்ல இருந்த எல்லா பனை  மரத்தையும் வெட்ட சொல்லிட்டாரு. தனி ஒருத்தியா என்னால அப்ப எதுவும் செய்ய முடியல, ஆனா என்னோட உயிரோடு கலந்திருந்த அந்த ஒற்றை பனையவாச்சும் காப்பாத்தனும்னு அதைய கட்டி புடிச்சிட்டே, வெட்ட வந்தவங்க என்னனென்னவோ சொல்லி பார்த்தும் நான் அந்த இடத்தை விட்டு நகருல, சரி ஒரு மரம் தானேன்னு அவங்களும் விட்டுட்டு போய்ட்டாங்க.

      என்னோட சின்ன வயசுல இந்த பனையில தானே அய்யா ஏறி நுங்கு வெட்டி போடுவாரு. இப்ப அந்த பனைகளையே மொத்தமா வெட்டிடாங்களேன்னு தூங்கும் போதெல்லாம் அழுதுட்டே இருந்த, அதீத மன கவலையால சில நாள் காய்ச்சலும் வந்தது. எல்லா பனையும் வெட்டிடாங்களேன்னு கவலை படவா இல்ல என்னோட பனையை மட்டும் காப்பாத்திட்டோம்னு சந்தோசபடுவதான்னு தெரியாம முழுச்சிட்டு இருந்தே, கொஞ்ச நாள்ல உங்க அப்பா பொறந்தாரு. அப்புறம் உங்க இரண்டு சித்தப்பான்னு என் வாழ்க்கை இவங்கள வளர்க்குறதுலயே கடந்துடுச்சி, ஆனா இன்னைக்கு வரைக்கும் என்னோட எல்லா சந்தோசத்தையும், துக்கத்தையும், அழுகையையும் தெரிஞ்சி வச்சிருக்குற ஒரே உயிர் என்னோட சொர்க்கம் அந்த ஒற்றைப் பனை தான்னு, சொல்லி முடிச்சதும் அவ கண்ணுல இருந்த நீர் துளிகள் என் முகத்துல கொட்டிட்டு இருந்துச்சி.

     பனை மரத்து கூட அவ பேசுனதுக்கான காரணத்தை பாட்டி சொன்ன பிறகு என்ன அறியாமலே பனையை நேசிக்கவும்,  அணைக்கவும் ஆரம்பிச்சேன், நாம் பேசினா மரம் திரும்பி பேசாதுன்னு நம்ம ஆறாம் அறிவும் இன்றைய நவீன அறிவியலும் சொல்லும். ஆனா பனை மரத்து கூட பேசுறது நாம் இயற்கையின் இருதயத்துக்கு நெருக்கமாக இருக்குற உணர்வை கொடுக்கும், இயற்கையும் அதைத்தான் கேட்கிறது.
   படித்து முடித்து சென்னையில் வேலைக்கு வந்துட்டேன். சில ஆண்டுகளில் என் பாட்டியும் அவள் பனையும் விட்டு நான் வெகு தூரம் விலகி போய்ட்டேன். வேலைக்கு வந்த சில ஆண்டுகளில் செய்தி வந்தது பாட்டி இறந்துட்டான்னு, வேலைக்கு போக ஆரம்பிச்சதால பாட்டியின் இறுதி காலத்துல அவ கூட இருக்க முடியல,  பாட்டியின் இழப்பை அப்ப நான் பெருசாவும் எடுத்துக்கல, எங்க ஊர் ஆற்றங்கரை ஓரம் இருந்த இடுகாட்டில் பாட்டிய அடக்கம் செய்துட்டு வரும் போது, குளிர்ந்த காற்று என்னோட முகத்தில் அறைந்தது போல இருந்தது. சட்டென்று முகத்தை திருப்பினேன் அப்போது தான் மீண்டும் அதை நான் உணர்ந்தேன், ஆமாம் இது தான் என் பாட்டி சிறு வயதில் சொன்ன அந்த ஒற்றைப் பனை மரம், எல்லா கால சுழற்சிகளையும் தாண்டி இப்பவும் கம்பீரமா நின்னுட்டு இருக்கு.

     எல்லாரும் கடந்து போக சொல்லிய பிறகு மெதுவா அந்த ஒற்றைப் பன மரத்துகிட்ட போனேன், என் கைகளால் முதல் முறையா அந்த பனையை தொட்டு வருடிவிட்டேன் சிலிர்த்த உடலைப் போல் ஓலைகளை சிலுப்பி விட்டு சத்தம் போட்டது. என்னால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை, கண்களில் பெருகி வரும் கண்ணிரோடு அந்த பனையை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு என்னால் இயன்ற வரை கத்தி அழுதேன், இன்னும் சத்தமாக கத்தி அழ வேண்டும் போல இருந்தது, ஆனால் என்னை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு அந்த பனை மரம் அதன் காய்ந்த ஓலைகளை என் மேல் பொழிந்து கொண்டிருந்தது, என்னிடம் இருந்த பாட்டியின் பழைய சேலையை அந்த பனையை சுற்றி கட்டி விட்டேன். அதற்கு மேல் அங்கு என்னால் நிற்க முடியாமல் வீடுக்கு வந்து சேர்ந்தேன்.

    நான் என் வாழ்வின் சரிபாதி காலத்தை கடந்து விட்டேன், இன்றும் நான் ஊருக்கு செல்லும் போது எனக்கான ஒரே ஏக்கம் சிறுவயதில் என் பாட்டி அவள் கைப்பட ஆசையாய் ஊன்றி வளர்த்த இந்த ஒற்றைப் பனை மரத்தை மீண்டும் எப்போது காண்பேன்  என்பது தான் (காண்பேனா என்பதே சந்தேகம்).

      ஆனால் இயற்கை நம்மிலும் உன்னதமானது ஆயிற்றே. ஒவ்வொரு ஆண்டும் அந்த ஒற்றைப் பனைமரம் ஆற்றில் வெள்ளம் வரும் போது எல்லாம் நூற்றுக்கணக்கான தன் விதைகளை ஆற்றின் நீரோட்டத்தோடு வழி அனுப்பி வைத்து கொண்டு தான் இருக்கிறது. அவை எங்கோ இருக்கும் ஒரு குழந்தையின் விரல் தொடும் கனவுகளை சுமந்து கொண்டு ஆற்றில் மிதந்து செல்கிறது. நான் நினைவு கொள்கிறேன் இரத்தம் சுண்டிய தன் கரங்களால் என் பாட்டி மீண்டும் பனையை கட்டி அணைத்து கொள்கிறாள், அவள் பனையும் அதற்காகவே ஏங்கி தவிக்கிறது.

அன்பும் நன்றியும் - பனைசதிஷ் 9994969088

Comments

  1. Arumai sathish..
    Panaiyin payanai ungal karpanai kondu atharku uyir koduthatahruku nandri...
    Ungal payanam dhodara vazhththukkal😍.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்