ஜவ்வாது மலை கானுலா

18.01.20
ஜமுனாமரத்தூர்

          தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் முடிஞ்சி பங்காளி மதன் குமார் சேகரன் கூட பேசிட்டு இருக்கும் போது, பக்கத்துல தானே ஜவ்வாதுமலை இருக்கு போய்ட்டு வரலாமான்னு கேட்டே அவனும் உடனே சரி நாளைக்கு (மாட்டு பொங்கல்) போலாம்டான்னு சொல்லிட்டா, காடு, மலை, மரன்னு எனக்கு பிடிச்சது எல்லாம் அவனுக்கும் பிடிக்க வச்சிட்டேன் அதான் இது மாதிரி பயணங்கள் எங்க எப்ப கூப்பிடாலும் கூடனே வந்துடுவான்.

எங்க ஊரு ஊட்டி:- 

 காலை 8மணிக்கு புறப்படலான்னு திட்டம் ஆனா தூங்கி எழுந்ததே 8மணிக்கு தான், ஒரு வழியா தூங்கி எழுந்து சாப்புட்டு கிளம்ப 9 மணி ஆய்டுச்சி, எங்க ஊர் முள்ளிப்பட்டு, ஆரணியில் இருந்து ஜவ்வாது மலை (அதாவது ஜமுனாமரத்தூர்) ரொம்ப பக்கம் தான் சோ பங்காளியோட பைக்கிலேயே கிளம்பினோம், ஆனா அங்க போக எங்க ஊருல இருந்து இரண்டு வழி பாதை இருக்கு ஆரணியிலிருந்து போளூர் போய்ட்டு அங்கிருந்து அத்திமூர் வனப்பகுதி வழியாவும் ஜமுனாமரத்தூர் போலாம், மற்றொன்று ஆரணியிலிருந்து கண்ணமங்கலம் வழியா அமிர்தி வனப்பகுதி வழியாவும் போலாம். போளூர் போய்ட்டு அத்திமூர் வனப்பகுதி வழியா போகிற பாதை  தான் எங்களுக்கு நல்லா தெரிஞ்ச வழி அதனால அந்த வழியிலேயே காட்டு பயணத்த தொடங்கினோம் (திரும்ப வரும்போ அமிர்தி வழியா இறங்கலாம்ன்னு திட்டம்)

காலை10மணிக்கு போளூர் கேட் வந்தோம் அங்கிருந்து ஜமுனாமரத்தூர் மலைக்கு சரியா 43கிலோ மீட்டர் (30 - 35கி.மீ  மலை பாதை தான்), மதியம் 1மணிக்கு ஜமுனாமரத்தூர் போய்டலாம், மலைக்கு மேல் பீமன் அருவி இருக்கு, இந்த மாதசத்துல அருவியில் தண்ணீர் இருக்காது அல்லது சிறிய அளவு மட்டும் வரலாம் என்ற சந்தேகத்திலேயே கிளம்பினோம், வழிநெடுக நெல், மஞ்சள், வாழை -ன்னு பல்வேறு பயிர்கள் நல்லா வளர்ந்து இருந்தது சென்ற ஆண்டு மழையில் கிணத்துல தண்ணி இருக்கு போல (எங்க பக்கம் பெரும்பாலும் கிணற்று பாசனம் தான்), மலைக்கு நெருக்கமான பகுதியில் ஏராளமான #பனைமரங்கள் இருந்தது, அரை மணி நேர பயணத்தில் அத்திமூர் கடந்தோம். இதன் பிறகு தான் காடும் மலையும் ஆரம்பம்.

காட்டு பயணம் தொடங்கியது:-

ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் காடுகள் துவங்கும் இடத்தில் இருக்கும் ஊர் தான் அத்திமூர், சுற்று வட்டாரத்தில் கடைகள் கொஞ்சம் அதிகம் இருக்கும் ஊர், நான் கல்லூரி படிக்கும் போது அத்திமூரில் இருக்கும் கிருத்துவ நண்பனோட வீட்டிற்கு வருடம் தவறாமல் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட வந்துடுவோம், அப்போ தான் கடைசியா இந்த மலைகாட்டுக்கு வந்தது, 10வருசம் கழிச்சி இப்ப திரும்ப வரும் போது அந்த இடம் நிறைய மாறி இருந்துச்சி.

 வனப்பகுதி பரப்பளவு அதிகமான மாதிரி தெரிஞ்சது (தெரிஞ்சது அவ்வளவு தான்), மழை இருந்ததால மரங்கள் செழிப்பாவும், அடர்த்தியாவும் இருந்தது, பச்சையாக சாலை ஓர புல்வெளிகள், மலைப் பாதையில் அகலமாக புதிதாக போடபட்ட சாலைகள், சில இடங்களில் வனத்துறை கண்காணிப்பு, என அனைத்தும் புதிதாக தெரிந்தது. 

 கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய வெப்பமண்டல காட்டு மரங்களின் அமைப்புகளையும் அதன் குறைவான உயரங்களையும் பார்த்துட்டே கடந்தோம், மலைப் பாதையில் முடிந்தளவுக்கு மிக பொறுமையாக ஒவ்வொரு பகுதியாக அடர்ந்த வனபகுதிகளை ரசிச்சிட்டு கடந்து போய்ட்டு இருந்தோம், அமைதியான அந்த சூழலை கெடுக்கும் வண்ணம் மரங்களை ஊடுறுவி வாகனங்கள் எழுப்பும் ஒலி எரிச்சலாக இருந்தது, நமக்கே எரிச்சல் மூட்டுவதாக இருக்கே சின்ன சின்ன விலங்குக்கு எவ்வளவு பாதிப்பாக இருக்கும்..!!!! மேற்கு தொடர்ச்சி மலையின் காட்டு மரங்களுக்கும் இந்த காட்டு மரங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்த தெளிவா உணர முடிந்தது, (மேலும் இவை உயரம் குறைவான மலைகள் என்பதால் மலைகாட்டை அழித்து தேயிலை பயிர் இங்கு போடவில்லை) நாங்க இது வரைக்கும் பார்த்திராத கோணத்தில் இந்த காடும் மலையும் எங்களுக்கு காட்சி கொடுத்தது, மலைக்கு மேல போக போக காட்டு தாவரங்களில் இருந்து வெளிவரும் குளுமை எங்களை சூழ்ந்து கொண்டு மனசுக்கு இதமான புத்துணர்ச்சி கொடுத்துச்சி (சென்னையில் தினம் தினம் வாகன புகை, இரைச்சல், பெட்ரோல் வாசனை என இயந்திர வாழ்கையில் இருந்து வெளிவர துடிக்கும் எவருக்கும் இந்த இடம் சொர்க்கம் தான்).

திட்டமிட்டது போல சரியா மதியம் 1 மணிக்குலாம் ஜமுனாமரத்தூர் டவுன் போய்ட்டோம், பொங்கல் என்பதால் பஜார் வீதிகள் பரபரப்பா இருந்தது, பல கிராமங்களில் இருந்தும் வந்த பழங்குடி மக்கள் தாங்கள் கொண்டு வந்த காட்டு பலா, காட்டு பெரிய நெல்லி மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது என பஜார் நிரம்பி இருந்தது, குளிருக்கு இதமாவும், களைப்பு நீங்கவும் டீ குடிச்சுட்டு இருக்கும் போது தான் தெரிஞ்சது அருவியில் தண்ணி கொஞ்சமா போதுன்னு, அவ்வளவு சந்தோசம் உடனே அங்கிருந்து 6கி.மி தூரத்துல இருக்குர பீமன் அருவிக்கு கிளம்பினோம், பிரம்மான்டமான அருவி கிடையாது ஆனா பெரிய பாறை பார்க்க அழகா இருக்கும் வனத்துறையிடம் பத்து ருபாய் நுழைவு சீட்டு வாங்கிட்டு அருவி வந்து சேர்ந்தோம், முதலில் அருவியில் தண்ணீர் இருக்குமா இருக்காதான்னு தெரியாது மேலும் அருவியில் குளிக்கும் திட்டம் அப்போது இல்லை அதனால் மாற்று உடை ஏதும் கொண்டு போல, ஆனா அருவிய பார்த்ததும் பங்கு குளிச்சே ஆகம்ன்னு சொல்லிட்டா, பைக்க ஓரமா நிறுத்திட்டு அருவியில் இறங்க நடந்தோம், அப்போது காட்டுக்கொடி ஒன்னு இரண்டு மரத்துக்கும் இடையில் ஒரு பாலம் மாதிரி இருந்தது பார்க்கவே பிரம்மிப்பா இருந்துச்சி, கடைசியா அருவிக்கு வந்து சேர்ந்தோம். கடற்கரை கடலும், நீர் நிரம்பிய ஆறும் பார்த்தவுடன் மனதிற்கு எவ்வளவு மகிழ்வை கொடுக்குமோ அது போன்று தான் அருவியும், அருவி தண்ணி மலையின் சுணை நீருக்கே ஏற்ற மாதிரி கடுமையான குளிரா இருந்துச்சி, ஒரு மணி நேரத்திற்க்கும் மேல் அருவியில் நல்லா ஆட்டம் போட்டோம், கடைசியா பசி தான் எங்களை அங்கிருந்து வெளியேற்றியது, கிளம்பும் போது அங்கிருந்த ஏராளமானை நீர்மருது விதைகளில் எங்களால் முடிந்தளவுக்கு எடுத்துட்டு மீண்டும் ஜமுனாமரத்தூர் டவுனுக்கு வந்தோம், பிரியாணி தீர்ந்து போகும் நேரம் ஆனா வாங்க தம்பி உங்களுக்காக தான் வசிட்டு இருக்கே அப்புடிங்குர மாதிரி கடைசியா இரண்டு தட்டு பிரியாணி மட்டும் கிடைச்சதது,சூடா இல்லைனாலும் பிரியாணி சூப்பரா இருந்துச்சி.

 பிற்பகல் 3மணி ஆச்சி இப்ப கிளம்புனா தான் மாலை இருட்டுறதுக்கு முன்னாடி வீடு போய் சேர முடியும், அமிர்தி வனபகுதி பாதையில் இறங்கலாம் ஆனா நமக்கு அந்த பாதை தெரியாதே?? எவ்வளவு நேரம் ஆகும்.?? கொஞ்ச நேரம் பேசிட்டு சரி இந்த வழியே போலாம் நிச்சயம் புது அனுபவத்த கொடுக்கும்ன்னு சொல்லிட்டு கிளம்பினோம், (ஆனா அங்கிருந்து கிளம்பி முதல் 5கி.மீ தவறான பாதையில் போய்ட்டோம்😁) அத்திமூரில் இருந்த வந்த மலை பாதை அகலமாவும், நல்லாவும் இருந்துச்சி, ஆனா இந்த பாதை கொஞ்சம் குறுகளாவும், நிறைய இடங்களில் சாலை மோசமாவும் இருந்துச்சி,  ஆனா அந்த பாதையை விட இந்த பாதையில் வனம் அடர்த்தியா இருந்துச்சி,  நிறைய இடத்துல மலை பள்ளத்தாக்கு தெளிவா தெரிஞ்சது, அங்கலாம் வண்டிய நிறுத்திட்டு பார்த்துட்டு வந்தோம். ஒரு இடத்துல வண்டிய நிறுத்திட்டு போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது, ஒரு வித்தியாசமான பறவைய பார்த்தோம், மரங்களுக்கு உள் இருந்ததால அத சரி படம் எடுக்க முடியல, ஒல்லியா இருந்துச்சி, உடல் முழுக்க வெள்ளையாவும் வால் மயில் போல் நீண்டும் தலையில் மட்டும் முடி சின்னதா கறுப்பாவும் இருந்துச்சி. இப்படி இயற்கை அதன் பேரதிசியங்களை அவ்வபோது காட்சிபடுத்த தவறவில்லை.

கடைசியா அமிர்தி வழியா இறங்கி கண்ணமங்கலம் வந்தோம், அங்க டீ-யும் உருளைகிழங்கு பஜ்ஜியும் சாப்புட்டு, சந்தவாசல் வழியா மாலை 6மணிக்குலாம் ஊருக்கு வந்து சேர்ந்தோம், எங்க பயணத்தில் எந்த ஒரு காட்டு விலங்கையும் பார்க்க முடியல ஒரு சில வித்தியாசமான பறவைகளை தவிர (காட்டில் நாம் தனித்து விடப்படவில்லை நாம் உள்நுழையும் போதே அங்கு இருக்கும் அனைத்து உயிர்களும் நம்மை கண்காணிக்க தொடங்கிவிடுகிறது என கோவை சதாசிவம் ஐயா சின்னார் காடறிதல் பயணத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது). காடும் மலையும் நமக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது… நம்முடைய அத்துனை தேவையையும் அவை பூர்த்தி செய்யும் ஆனால் நம் பேராசைக்கு அதனிடம் எதுவும் இல்லை என்பது தான்.

 அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

முகநூல் பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=2639979132783658&id=100003147909711

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்