மறுபிறவி எடுத்த அபூர்வ பனை


      பனை குறித்த தொடர் பயணங்களில் நாம் பல்வேறு வித்தியாசமான பனைகளை பார்த்து கொண்டு வருகிறோம், அதன்படி கடந்த வாரம் கிளைப்பனை பற்றி பதிவு செய்து இருந்தோம். அதை பார்த்த அநேக நண்பர்கள் தமிழ் பெருநிலமெங்கும் உள்ள கிளைப்பனைகளை பற்றி செய்திகளை அனுப்பி இருந்தனர், அதில் எங்கள் ஊர் நண்பர்  Ganesh கடந்த முறை படைவீடு சென்ற போது தான் பார்த்த வித்தியாசமான பனையின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார்.

     இதுவரை அப்படியான பனையை நான் எங்கும் பார்த்தது இல்லை, அவர் புகைப்படம் அனுப்பிய நாளில் இருந்தே அதை நேரில் சென்று பார்க்க வேணும் என்ற ஏக்கம் இருந்தது. அதிலும் அப்பனை இருக்கும் இடம் நாங்கள் முந்திய பயணங்களை மேற்கொண்ட அதே படைவீடு, சவ்வாதுமலை பகுதிக்கு அருகில் தான். எனவே ஞாயிறு காலையில் வேறு ஒரு மலைக்கு செல்வதாக இருந்த பயண திட்டத்தை இந்த அதிசய பனையை காண போவோம் என பங்காளி மதன் கூற.. புறப்பட்டோம்.

       காலை 11 மணிக்குள் அந்த அதிசய பனை இருக்கும் தஞ்சாம்பாறை (படைவீடு) மலை அடிவாரத்திற்கு சென்றிருந்தோம், அங்காங்கே சில குடிசை மற்றும் கான்ங்ரிட் வீடுகள் இருந்தது, சாலையின் ஓரம் நெல் வயல் வரப்பின் மீது வலிமையாக தன் இருப்பை காட்டி கொண்டு அமைதியாக இருந்தது அந்த அதிசய பனை. அதனுடைய பழமும் வெளிர் மஞ்சள் நிறத்திலும் கலந்து அழகான தோற்றத்தோடு இருந்தது. ஆனால் எப்படி இவ்வாறு வளைந்து நெளிந்து பனை வளர்ந்திருக்கும் என்று எங்களால் அவதானிக்க முடியவில்லை, ஒரு வேளை ஏதேனும் மரம் அதன் மேல் விழுந்து பல காலம் அப்படியே தங்கி இருந்ததால் இவ்வாறு வளைந்து போய் இருக்கலாம் என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.


     சில நேரம் அந்த பனையை பலவாறு ஆவணப்படுத்திட்டு அதை பற்றி தகவல் சேகரிக்க அந்த வயலின் வீட்டாரை சென்று அனுகினோம், அப்போது தான் அந்த பேரதிசயத்தின் ரகசியம் தெரியவந்தது. ஆம் அவர் கூறியது "சில ஆண்டுகளுக்கு முன் இப்பனையின் மீது இடி விழுந்துள்ளது, இவரும், ஊராரும் பனையின் மீது இடி விழுந்ததை பார்த்துள்ளார் (நமக்கு நன்கு தெரியும் இடி விழுந்தால் எவ்வளவு ஆற்றலோடு விழும் என்று ) பிறகு பனை இறந்துவிட்டது அவ்வளவு தான் என நினைத்துள்ளார். 

     ஆனால் இயற்கையின் படைப்பு வலிமையை நாம் எவ்விதமும் அறிமுடியாது, ஆம் இடி விழுந்த அந்த பனை மரம் ஆச்சரியமாக அடுத்த சில ஆண்டுகளில் மறுபிறவி எடுத்து துளிர்விட்டு வளர ஆரம்பித்துள்ளது. அதன் பொருட்டே இவ்வாறாக வளைந்து கொடுத்து வளர்ந்துள்ளது, இந்த பேச்சுகள் அனைத்தையும் அந்த பனையின் மேலே இருந்து ஒரு ஓணான் கேட்டு கொண்டருந்தது. 


    பின் அவரும் அந்த மலை பகுதியை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார், அதில் முக்கியமாக பக்கத்தில் செண்பத்தோப்பு அணை உள்ளதால் சில ஆண்டுக்கு முன்பு வரை இந்த பகுதி யானைகளின் வழித்தடமாக இருந்ததாம், ஆனால் இன்றோ இக்காட்டில் இருந்து அவை முற்றிலுமாக (வலுகட்டாயமாக) அப்புறபடுத்தபட்டதாக கூறினார், கிளம்பும் முன் அன்போடு அவர் தோட்ட கொய்யா பழங்களை அவரின் 6வயது சுகந்தியிடம் கொடுத்து வழி அனுப்பினார். 

    அந்த பகுதியில் ஒரு பழைமையான கோவிலில் 25வயது கொண்ட ஒரு பெண் யானையை கூண்டிற்குள் கட்டி போட்டு வைத்திருந்தனர். அது கண்ணெதிரே தெரியும் பிடுங்கபட்ட தன் தாய் நிலத்தை வெறுமையோடு பார்த்து கொண்டு இருப்பதாகவே உணர்ந்தேன். 

   பிறகு எப்போதும் போல் உள் காட்டிற்குள் சென்று சில நேரம் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஊருக்கு கிளம்பினோம்.

அடுத்த வாரம் ஆமை பாறையை பார்க்க போலாம்.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்