அதிசய கிளைப்பனை - பனை பயணம்


அதிசய கிளை பனை

       ஐயா பண்ருட்டி பஞ்சவர்ணம் எழுதிய  #பனைமரம் புத்தகத்தில் ஏழுகிளைகள் கொண்ட பனையை ஆவணப்படுத்தி இருந்தார், அவரின் முகநூல் பதிலும் அது பற்றி பதிவிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததில் இருந்து அந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்தது, மேலும் அந்த இடம் எங்க ஊரில் இருந்து 50km பயண தூரத்தில் தான் இருக்கு, ஆனால் பணிச் சூழலில் பல காலம் அங்கு போக முடியாமல் இருந்தது.

       இந்த கொரானா ஊரடங்கு நமக்கு நிறைய உபரி நேரங்களை கொடுத்தது. இந்த ஓய்வு நேரத்தில் வார இறுதி நாட்களில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சவ்வாது மலை காட்டுக்கும், அங்குள்ள பழங்குடிகளின் கிராமத்திற்கும் கடந்த வாரங்களில் சென்று பார்த்துதோம். அடுத்து நான் #பனைமரம் புத்தகத்தில் பார்த்த அந்த ஏழு கிளை கொண்ட பனையை பார்க்க போகனுன்னு எப்போதும் போல் பங்காளி மதன் கிட்ட வெள்ளி இரவு 10.30மணிக்கு மேல் தான் சொன்னேன், ஆனா அடுத்த நாள் காலையே (11.07.20) கிளம்பிட்டோம். 

         காலை 11மணிக்கே அந்த ஊருக்கு போய் சேர்ந்துட்டோம், பிறகு அங்கு ஆட்டோ ஓட்டும் அண்ணன்களிடம் இந்த கிளை பனையின் புகைப்படம் காட்டி எங்க இருக்குன்னு விசாரிச்சோம், அவங்க பாதை சொல்லுரதுக்கு முன் ஏன்பா அந்த பனைய பார்த்தா அதிர்ஷ்டம்ன்னு பார்க்க வந்து இருக்கிங்கலான்னு கிண்டலா கேட்டு சிரிச்சாங்க, பின்பு அவங்க கூறிய பாதையை நோக்கி போனோம்.

        தூரமா ஒரு இடத்தில் பனைகள் நெருக்கமான கூட்டமாக இருப்பது தெரிந்து, ஆம் அது தான் கிளைபனை என்று நான் பங்காளியிடம் கூறினேன். 


ஆறு கிளைகள் கொண்ட பனை, செதுவாலை கிராமம், வேலூர்

       வாழ்வில் முதல் முறையாக இந்த கிளைப்பனையை நேரில் பார்க்கிறேன், ஒரு முறை சிதம்பரம், கிள்ளை பனை மாநாட்டுக்கு போகும் போது அங்கு 11கிளைப்பனை இருந்ததாக சொன்னாங்க ஆனால் அதை அப்போது என்னால் பார்க்க முடியவில்லை, ஐயா புத்தகத்தில் காட்டிய போது ஏழு கிளைகள் இருந்தது ஆனால் இங்கு ஆறு கிளைகள் தான் இருந்தது அப்ப தான் ஒரு கிளை முறிந்து விழுந்துள்ளதை பார்த்தோம் ( மற்ற பனைகளில் அழுத்தமாக நெருக்குவதால் முறிந்து இருக்கலாம் ). கொஞ்ச நேரம் அந்த பனையின் மடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு பின் புறப்பட தயாரானோம், அந்த ஊருக்கு பக்கத்துல தான் விரிஞ்சிபுரம் இருக்கு அங்க ஒரு சிவன்கோவிலில் பனை தல மரமா இருக்கு (இது பற்றியும் புத்தகத்தில் குறிப்பு இருந்தது), அந்த காலத்து நேர மாணியும் இருக்குன்னும் பங்காளி சொல்லிருந்தான்.

        எங்க திட்டம் அந்த கிளை பனைகளை பார்த்துட்டு வருவதாகத் தான் இருந்தது, ஆனால் பயணங்கள் நாம் நினைப்பது போல் முடிந்து விடுவதில்லையே. அந்த பனை கோவிலை பார்க்க போனோம், மிக பழமையான கோவில் என்பது அதன் கட்டுமானத்தை வைத்தே அறிய முடிந்தது, ஆனால் ஊரடங்கு காரணத்தால் கோவில் மூடியிருந்தது, தல மரத்தை பார்க்க முடியாமல் போனது  கொஞ்சம் வருத்தம் தான்.

       வேலூருக்கே உரிய கடும் வெயில் தலையை சூடாக்கிட்டு இருந்தது பசியும் சேர்த்து, வேலூரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபலமான அம்மா பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி வாங்கிக் கொண்டு கிளம்பினோம், இன்னொரு யோசனை.

     இவ்வளவு தூரம் வந்தோட்டோம், பக்கத்துல  இருக்குற பாலமதி மலை பாதையில் ஏறி பூசிமலைகுப்பம் காட்டு வழியா ஊருக்கு போலாம்ன்னு சொல்ல அந்த மலை பாதையை நோக்கி கிளம்பினோம், சொல்ல போனால் இந்த பாதையில் நான் சொல்வது இது தான் முதல் முறை. ஆச்சரியம் யாதெனில் இந்த மலை பாதையின் சாலை மிக நேர்த்தியாக போடபட்டு இருந்தது, மரங்கள் மட்டும் கொஞ்சம் அதிக அடர்த்தியோடு இருந்து இருந்தால் இந்த மலை பாதை நிச்சயம் பலரின் பார்வையை ஈர்த்து இருக்கும்.

      சமீபத்தில் பெய்த மழையால் மலை பாதை ஓரளவுக்கு பச்சையாக இருந்தது (மற்ற நாட்களில் கடுமையான வெயில் தான் இருக்கும்) கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மலை கிராமதத்தில் ஓர் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டு கிளம்பினோம். 

நடுகல் மற்றும் சதிக்கல், பூசிமலைக்குப்பம் கிராமம், ஆரணி

       பூசிமலை குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு நடுக்கல் பார்த்தோம் அங்கு யாரும் இல்லாததால் அது பற்றி குறிப்பு எடுக்க முடியவில்லை, காட்டு பகுதி ஆரம்பிக்கும் முன் பங்களா நகரில் 1800களில் கட்டப்பட்ட பிரஞ்சு கால கோட்டைக்கு (ஜாகீர் மன்னர் தன் கள்ள காதலிக்காக கட்டிய அரண்மனை😁) கடைசியாக 3ஆண்டுக்கு முன்பு போய்ருந்தோம், உயரமான மரங்கள் இல்லாத முட்புதர்கள் அடர்ந்த அந்த வறண்ட காட்டு பாதை வழியே வீடு வந்து சேர்ந்தோம். 

ஜாகிர் அரண்னை, பங்களா நகர், பூசிமலைக்குப்பம் கிராமம், ஆரணி

வெயில் மற்றும் தாமதமான மதிய உணவால் இரவு கடுமையான தலைவலியோடு தூங்க போய்ட்டேன்.

இந்த கிளை பனையை ஆவணபடுத்தி எங்களுக்கு உதவிய ஐயா: @பஞ்சவர்ணத்திற்கும் பயண உதவியாய் உடன் வந்த பங்காளி @மதனுக்கும் அன்பு வாழ்த்துகள்💜

பூசிமலைக்குப்பம் வனப்பகுதி, ஆரணி

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்