சத்தியமங்கலம் கானுலா பகுதி - 1

எனக்கான நாட்கள் - 1

      கடினமான நாட்களோடே 2022 முடிந்துவிட்டது. வேப்பம் பூவில் இருக்கும் சிறு தேன் துளி போல ஆண்டின் இறுதி நாட்கள் எனக்கான நாட்களாகி போனது.

     தனியாக (பைக்கில்) நெடும் பயணம் சொல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை 2022 ல் தான் சாத்தியமானது.

     டிசம்பர் மாத இறுதி வாரம் முழுக்க அலுவலகத்தில் விடுப்பு கிடைத்ததால், ஒரு வாரத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல முடியும் என யோசித்து, பல ஊர்களையும் எழுதி இறுதியில் சத்தியமங்கலம், குன்றி மலைக்காடுகளில் வாழும் சோளகர் பழங்குடி மக்களை சந்தித்து உரையாடி அவர்களோடு விடுமுறை நாட்களை கழிக்கலாம் என முடிவு செய்தே. 

 ( சோளர் தொட்டி நாவல் படித்ததில் இருந்தே அம்மக்களை நேரில் சென்று பார்த்து, அவர்களிடம் பேசவேண்டும் என்ற தவிப்பு இருந்தது )

     சத்தியமங்கலம், கடம்பூர் மலையை அடுத்துள்ள குன்றி மலைப்பகுதியை சேர்ந்த, அன்பு தோழன் Sidhalingan  சித்தலிங்கத்தை அழைத்து என்னுடைய விருப்பத்தை சொன்ன போது அவன் எந்த மறுப்பும் இன்றி, நீ வா மச்சி உனக்காக நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறேன் என மனம் நிறைந்த பாசத்தோடு சொல்லியிருந்தான்.

     பயணத்திட்டம் உறுதியான பிறகு, சனிக்கிழமை (24.12.22) இரவு சென்னையில் இருந்து கிளம்ப திட்டமிட்டேன். ஆனால் அன்று (சனிக்கிழமை) இரவு முழுவதும் தொடர் மழை, அடுத்த நாள் ஞாயிறு காலையில் தான் மழை ஓரளவுக்கு ஓய்ந்து இருந்தது. ஆனால் வானில் கருமேகங்கள் மேற்கு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தன. ஒருவழியாக ஞாயிறு (25.12.22) காலை 9மணிக்கு மேல் பயணத்தை தொடங்கினேன்.

     பயணம் தொடங்கிய அடுத்த அரை மணிக்குள் மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது. வழி நெடுகிலும் மழை, சில இடங்களில் சாலையே தெரியாத அளவிற்கு கடுமையான மழை. மழையால் பொறுமையாகவே வாகனத்தை ஓட்ட முடிந்தது. மழையால் நெடுச்சாலையின் பல இடங்களில் வான செல்லவேண்டி இருந்தது.

      கள்ளக்குறிச்சி நெருங்கிய பின்னர் தான் மழை ஓரளவு குறைந்தது. உடன் கொண்டு வந்த மாற்றுத்துணிகள்,  புத்தகங்கள் குறிப்பாக வானகம் குமார் அண்ணாவை சந்தித்து அவரிடம் கொடுக்க வேண்டி எடுத்த பனையோலையில் செய்த ஐயா நம்மாழ்வாரின் படச்சட்டம் என அனைத்தும் மழையால் பாதித்து விடக்கூடாது என கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.

     சேலம் அடுத்த சங்ககிரி நோக்கி செல்லும் வழியில் இருந்த ஒரு தாபாவில் மதிய உணவை முடித்துவிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள 'வானகம்' குமார் அண்ணாவை தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டி நேரம் கேட்டேன். அவரோ வாங்க சதிஷ் நான் வெளியில் செல்கிறேன் நீங்க வருவதற்குள் வீட்டிற்கு வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு அவர் வீட்டிற்கு வருவதற்கான Location அனுப்பியிருந்தாங்க.

     இதற்கிடையில் நண்பன் சித்து(சித்தலிங்கம்) தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான். அவனை மீண்டும் அழைத்து பேசிய போது பெரும் அதிர்ச்சி. மச்சி நீ போகப்போற குன்றிமலை காட்டுபாதையில் நேத்திக்கு இரவு காட்டுயானை ஒருத்தரை மிதிச்சி கொன்னுட்டு இருக்கு. அதனால நீ சாயங்காலம் 5 மணிக்குள்ள கடம்பூர் மலைக்கு போகுற வாய்ப்பிருந்தா மட்டும் மலைக்கு மேல போ இல்லைனா, சத்தியிலயே தங்கிட்டு காலையில் மலைக்கு போ டா என்றான்.

     என்ன செய்வது என புரியாமல் குமார் அண்ணா வீட்டை அடைந்தேன் அப்போதே மாலை மணி 6 ஆகியிருந்தது.

     'வானகம்' குமார் அண்ணாவுடனான சந்திப்பு எப்போதும் போல் நீண்ட உரையாடலாக அரசியல், வரலாறு, சூழலியல், மார்க்சியம், காந்தியம், புரட்சி என 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்டது. ஒரு கற்றல் மாணவனாக அனைத்தையும் கேட்டுக்கொண்டேன். சூழலியல் நெருக்கடி நிறைந்த இந்த தருணத்தில் அண்ணா செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் விரிவாக பேசினார்.
குறிப்பாக மார்க்ஸியம் பற்றி பேசும் போது, 'படைக்கப்பட்ட பொருளுக்கும், படைத்தவனுக்கும் இடையே உள்ள அன்னூன்னியம் இல்லாத ஒன்றை அன்னூன்னியம் ஆக்குவது தான் மார்க்சியம்' என சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது.

     அண்ணாவின் வீட்டிலேயே இரவு உணவு முடித்துவிட்டு, கோபி-யில் அறை எடுத்து இரவு தங்கிவிட்டு, காலையில்  கடம்பூர் கிளம்பும் முன் கோவை சதாசிவம் ஐயாவின் நினைவு வர அவருக்கு  அழைப்பு கொடுத்து, ஐயா உங்களை சந்திக்க வாய்ப்பிருக்கா என கேட்ட போது, சதிசு நான் சின்னார் வனப்பகுதியில் மாணவர்களோடு கானுலா வந்திருக்கேன், நீங்க குன்றி மலை போய்ட்டு வரும் போது சொல்லுங்க சந்திப்போம் என்றார்.

     அத்தோட குன்றி மலையில் உள்ள நிலாப்பள்ளியில் சத்தியை சேர்ந்த நம் நண்பர் சதிசு பழங்குடி குழந்தைகளுக்காக நிறைய வேலை செய்துட்டு இருக்காரு நீங்க அவசியம் அவரை பார்க்க வேணும், நான் அவரை உங்களுக்கு அழைக்க சொல்கிறேன் என்றார்.

      எதிர்பாராத சந்திப்புகளே, நீண்ட பயணத்திற்கான பாதையாய் அமைந்துவிடும்.
     ஐயா பேசி முடித்தவுடன் நண்பர் சதிஷ், அழைத்திருந்தார், தோழர் நீங்க கோபியில் இருந்து கொடிவேரி அணைக்கட்டு வழியாக நால்ரோடு சந்திப்புக்கு வந்துவிடுங்க நானும் சத்தியில் இருந்து வந்துவிடுகிறேன் என சொல்லியிருந்தார். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த கொடிவேரி அணைப்பற்றி இதற்கு முன் நான் கேள்விப்பட்டது இல்லை. கோபியில் இருந்து  கொடிவேரி அணைக்கு செல்லும் வழிநெடுக சாலையின் இருபுறமும் இருந்த தென்னை மரங்கள் ஒன்றாக இணைந்து குகை போல தெரிந்தது.இதை பார்த்ததும், சிறு பிராயத்தில் எங்கள் ஊரில் இருந்து படைவீடு எனும் மலை அடிவார கிராமத்திற்கு செல்லும் பாதை நினைவிற்கு வந்தது.

     நால்ரோடு வந்து சேர்ந்ததும் சிறிது நேரத்தில் நண்பர் சதிசு வந்தார், அவரோடு அருகில் இருந்த தேனீர் கடையில் தேனீர் அருந்திக்கொண்டே, நான் குன்றிக்கு செல்லும் நோக்கத்தை பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவரும் பழங்குடிகுழந்தைகளுக்கு முன்னெடுக்கப்படும் வேலைகளை பற்றி பகிர்ந்து கொண்டார். நேற்று இரவு நடந்த யானை தாக்குதல் செய்தியை அவரும் சொல்லி பாதுகாப்பாக போகும் படி வழியனுப்பினார்.

மேலும் மலையில் Jio SIM தவிர வேறு இணைப்பு கிடைக்காது என்பதால் நால்ரோட்டிலேயே புதிதாக ஒரு Jio SIM வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.
     மிக அருகில் தெரியும் சத்தியமங்கலம் காடுகளில் இருந்து குளிர்ந்த இதமான தென்றல் காற்று நம்மை வருடிக்கொண்டே இருக்க, கடம்பூரின் மலைகளை மேகக்கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருக்க இனம்புரியாத மகிழ்வுடனே மலையில் பயணம் தொடங்கியது.

அடுத்த பதிவில் சோளகர் பழங்குடிகளையும், யானை குட்டையையும், பழங்குடி குழந்தைகளையும் பார்ப்போம்.

25.12.2022
பனை சதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்