சத்தியமங்கலம் கானுலா பகுதி - 3

எனக்கான நாள் - 3

#SathyamangalamForest #KundriMalai

     முனியாண்டி தாத்தாவிடம் பீநாசி எப்போதெல்லாம் வாசிப்பீங்கனு கேட்ட போது. நாங்க ஊர் திருவிழா போது வாசிப்போம், வாலிப வயசுல இருக்கும் போது எங்களுக்கு பிடிச்ச பொண்ணு கிட்ட பேச வாசிப்போம், அந்த பொண்ணு கூட தண்ணி எடுக்க போலாம் வான்னு கூப்பிட வாசிப்போம்னு சொல்லிட்டே அந்த பாட்டையும் பீநாசியில் வாசித்து காட்டினாங்க.

     பெரும்பாலும் காடுகளில் வாழும் ஆண் விலங்குகள் தன் இணையை கவர ஏதெனும் ஒரு சிறப்பியல்பை கொண்டிருக்கும், இணை சேர்கையின் போது அதனை வெளிப்படுத்தும். முனியாண்டி தாத்தா பாடிக்கொண்டே வாசிச்ச பீநாசியின் இசையும் கூட அவருக்கான இணையை கவர்வதாவே தான் உணர்ந்தேன்.

     அன்று மாலை தம்பி ஈஸ்வர், பண்ணையில் யானை நடமாட்டத்தை கண்காணிக்க கட்டப்பட்டுள்ள உயரமான  அட்டாலிக்கு (பரண்) கூட்டிச்சென்றான். நான் கடம்பூரில் இருந்து குன்றி மலைக்கு வரும் வழியில் பலரின் காட்டில் (நிலத்தில்) அங்கிருக்கும் மரத்தின் உயரத்திற்கேற்ப பரண் அமைக்கப்பட்டிருந்தது.

     தம்பியின் நிலத்தில் கூட 50 அடிக்கு மேல் இருக்கும் உயரமான மரத்தின் கிளைகள் மூன்று,  நான்காக பிரியும் இடத்தில் மூங்கில்களை கொண்டு இருவர் தாராளமாக படுத்துக்கொள்ளும் அளவு அழகான பரண் அமைக்கப்பட்டிருந்தது. பரணுக்கு செல்ல நீளமான மூங்கிலை எடுத்து அதன் பக்கவாட்டு கிளைகளையே படிகளாக வெட்டி மிக நேர்த்தியான செய்திருந்தனர். 

     தரையில் இருந்து 30 அடிக்கும் மேல் பரண் கட்டப்பட்டு இருந்தது. மேலே ஏறிச்சென்ற பின் குன்றியின் மலையையும், அங்குள்ள பாங்காட்டின் (அடர்ந்த வனம்) அழகை முழுவதுமாக பார்க்க முடிந்தது. வடக்கு, தெற்காக கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்தது காடும், மலையும்.

     இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், தங்களின் சோளப்பயிரை பாதுகாக்க இவ்வளவு உயரமான இடத்தில் பரண் அமைத்து இரவு, பகல் என யானையின் நடமாட்டத்தை கண்காணிப்போம் என்றான் தம்பி ஈஸ்வர். 

      இயற்கையின் இயல்பை மனிதனால் எப்படி வெல்ல முடியும் ஒரு புயல் காற்று போதுமானதாக இருக்கும் எல்லாவற்றையும் சிதைத்து விட ஆனால் மலைவாழ் மக்களும், பழங்குடிகளும் காட்டை பூரணமாக புரிந்து வைத்துள்ளதால் அவர்களுக்கு ஏற்படும் எல்லா விதமான சிக்கல்களில் இருந்தும் காடு அவர்களை பாதுகாக்கிறது. எல்லா நேரங்களிலும் காடு அவர்களோடு துணை நிற்கிறது.

     சிறிது நேரம் பரணிலேயே படுத்திருந்தேன், மாலையின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மலையை விட்டு மறைந்து கொண்டிருந்தது. எலும்பை ஊடுருவச்செய்யும் இரவின் குளிர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. குளிரின் நடுக்கத்தால் மாலையே பரணை விட்டு கீழ் இறங்கி அறைக்கு சென்று படுத்துறங்கினேன்.
     பின்னிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது அறையிலிருந்து வெகு அருகில் யானைகளின் பிளிறல் கேட்பது போன்ற உணர்வு, கடுமையான உடல் சோர்வினால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை. பிறகு காட்டு வேலியின் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும் சத்தம் கேட்டு தம்பி சிவா பரணில் இருந்து டார்ச் லைட் அடித்து பார்த்த போது, யானைகள் வேலியின் ஓரமாக வந்து மீண்டும் பாங்காட்டிற்குள் போயிருந்தன.

     சமீப காலங்களில் யானை-மனித மோதல்கள் அதிரித்துக்கொண்டே வருகிற சூழலில், குன்றியின் காட்டிலும் அது தொடர் கதையாக இருக்கிறது.

     இந்த பாங்காட்டில் யானை - மனித மோதல் ஏன் நடக்குது.? நீங்க காட்டுக்கு போகும் போது யானை வந்துட்டா அப்ப என்ன பண்ணுவீங்க.?  என சில கேள்விகளை அறிவுப்பூர்வயாக கேட்டுவிட்டோம் என நினைத்துக்கொண்டிருக்கும் போது நாம் படித்தவற்றை தூக்கி எறிந்தது போல் இருந்தது, குன்றி மலைக்கு வந்த முதல் நாள், மாலையில் பார்த்து பேசிய சோளகர் அண்ணா சொன்ன தகவல்கள்.

     தம்பி காட்டுக்குள்ள இருக்குற யானைங்க இப்ப ஊருக்குள்ள வர முக்கிய காரணம் பாங்காட்டுல மூங்கில் எல்லாம் செத்து போய்டுச்சி, யானைக்கு மூங்கில் தான் புடிச்ச உணவு அது கிடைக்காததால ஊருக்குள்ள இருக்குற கம்பு, மூங்கில் உடைச்சி சாப்புட்டு, தண்ணி குடிக்க அதுங்க வந்துடுதுங்க.

      அவர் சொன்ன போது தான் மலைகளில் இருக்கும் மூங்கில் மரங்களை கவனிக்கத் தொடங்கினேன், பெரும்பாலான மூங்கில் காய்ந்து போய்ருந்தது. எல்லா மூங்கில்களும் பூத்து, அரிசி கொடுத்து விட்டாதாகவும் விரைவில் காய்ந்துவிடும் எனவும் சொல்லிருந்தார். ( யானை ஊருக்குள்ள வருவதற்கு மூங்கில்கள் காட்டில் கிடைக்காததும் ஒரு காரணம் என அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது ).
     ஆனா, நாங்க சின்ன பிள்ளையாக இருந்த போது ஊருக்குள்ள வந்த யானைகளை விடவும்  இப்ப அடிக்கடி பாங்காட்டுல இருந்து யானைங்க ஊருக்குள்ள இறங்கிடுதுங்க.

      நாங்க காட்டுக்குள்ள தேன் எடுக்க போகும் போது, இல்லனா கீழ்நாட்டுக்கு போய்ட்டு வரும் போது யானை ஏதும் குறுக்க வந்துட்டா, யானைக்கு நேருக்கு நேரா நிக்காம இடது பக்கமோ, வலது பக்கமோ வேகமா ஓடிடுவோம், இல்லனா ஓடி போய் பெரிய மரமா பார்த்து மேல ஏறிக்குவோம். யானையை நேருக்கு நேரா நின்னு பார்த்தா நாம அதுங்க கூட சண்டைக்கு வந்து இருக்கோம்ன்னு நினைச்சிட்டு கோவமாயிடும். அதனால கூடுமான வரைக்கும் யானையை நேரா சந்திக்குறத தவிர்த்திடனும்னு சொன்னது புத்தகத்தில் படித்திட முடியாத பாடமாக இருந்தது.

     கூட்டத்தை விட்டு தனியா சுத்துர ஆண் யானையும், குட்டியோட இருக்குற பெண் யானையும் தங்களை பாதுகாத்துக்க மூர்க்கமா கோவப்படும். இது யானைக்கு மட்டும் இல்ல காட்டுல இருக்குற பெரும்பாலான விலங்குகளுக்கு பொருந்துன்னு அண்ணா சொல்லி முடிச்சாங்க.

      பழங்குடிகளுக்கே உரிதான குறைந்த ஒலிக்குறிப்போடு அவர் பேசியதால் சமவெளியில் வாழ்ந்த என்னால் அவரின் சில வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் திணறினேன். ( மலைவாழ் லிங்காயித்துகள் கார்நாடகம் கலந்த மொழியில் பேசினர்)  ஆயினும் அவரை இடைமறிக்காமல் அவர் முழுவதும் பேசிவிட்டு சென்ற பின்  தம்பி ஈஸ்வரிடம் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தங்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டேன்.

      சில இடங்களில் அறுவடை செய்த சோளங்களை நிலத்திலும், மச்சாலையிலும் கொட்டி தார்பாய் போட்டு மூடிவச்சிருந்தாங்க. சில இடங்களில் இன்னும் அறுவடை செய்து முடிக்காமல் சோளக்கதிர்களாகவே இருந்தது, தம்பி ஈஸ்வர் நிலத்திலும் சோளம் இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. ஆகையால் எப்போது வேணாலும் யானை சோளக்கதிர்களை திண்ண இறங்கிவிடும் என்பதால் ஈஸ்வரும், சிவாவும் மாறி மாறி நிலத்தை கண்காணிச்சிட்டு இருந்தாங்க.

      அன்று இரவு மின்சார கம்பிகள் உரசியதும் சிவா தம்பி பரண் மேலே இருந்து டார்ச் அடிச்ச போது யானைங்க கூட்டமாக பாங்காட்டுக்குள்ள போகுதுங்க என பரணில் இருந்து இறங்கி அறைக்கு வந்து எங்களிடம் சொல்லியிருந்தார். 

     அவர் சொன்ன பிறகு தூக்கம் வராமல் இருள் நிறைந்த பாங்காட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். வேலிக்கு அருகில் ஆங்காங்கே மூங்கில்கள் உடைபடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நீண்ட இரவுகளுக்கு பின் தெளிவான முழு வானத்தை பார்க்கிறேன். வானில் நட்சத்திர கூட்டத்தை முழுமையாக காணமுடிந்தது.

யானை குட்டை:

     காலையில் தம்பி ஈஸ்வர் யானை குட்டை என்ற இடத்திற்கு அழைத்து சென்றான். நான் தங்கி இருந்த பண்ணையில் இருந்து கோவிலூர் செல்லும் வழியில் க்ளமன்ஸ் தொட்டி என்ற மலைகிராமத்தை தாண்டியதும் தென்மேற்கில் பாங்காடு ஆரம்பிக்ககூடிய இடத்தில் ஓரளவு நீர் நிறைந்த குட்டை இருந்தது. காட்டு ஓடைலிருந்து நீர் நேராக குட்டைக்கு வந்து கொண்டிருந்தது.
     குன்றி மலையிலேயே யானைகளுக்கு பிடித்த இடம் இது தான் அண்ணா என தம்பி ஈஸ்வர் இந்த யானை குட்டையை சொல்லினான். நண்பன் சித்தலிங்கம் ஒரு முறை இந்த குட்டைக்கு அருகில் இருக்கும் மரத்தின் மீதிருந்து தான் யானைகள் கூட்டமாக தண்ணீர் குடிக்கும் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருந்தான். குட்டைக்கு காட்டு ஓடையில் இருந்து எப்போதும் தண்ணி வந்து கொண்டே இருக்குமாம். குட்டைய சுற்றிலும் செழிப்பான முங்கில் நிறைந்திருந்தது. அவ்விடத்தை பார்த்தாலே யானைகள் தங்கிவிடும். 

    நேற்று இரவு வேலியின் மின்சார கம்பிகளை மிதித்து தள்ளிவிட்டு நேராக இந்த குட்டைக்கு வந்து இரவு முழுக்க ஓய்வெடுத்துட்டு, அங்குள்ள மூங்கில்களை சாப்பிட்டு, குட்டையின் கரைப்பகுதியில் மண்ணை தந்தங்களாலும், காலாலும் குத்தி கிளறிவிட்டு, குட்டையை சுற்றிலும் சாணங்களை இட்டுச்சென்றுள்ளன.
     அருகில் இருந்த மூங்கில் செடியில் இருந்து பல் துலக்க மூங்கில் நுனியை உடைத்து கொடுத்தான் தம்பி. மூங்கில் குச்சியில் பல் துலக்கிக்கொண்டே நேற்று இரவு யானைகள் செய்த சேட்டைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். நிறைய இடங்களில் சில மணி நேரத்திற்கு முன்னர் இட்டது போல் யானைகளின் சாணம் சூடாக இருந்தது, ஈக்களும், பட்டாம்பூச்சிகளும் சாணத்தை மோய்த்துக் கொண்டிருந்தன.

கிருத்துவமும் சோளகரும்:-

     பல ஆண்டுக்கு முன்னரே இம்மலையில் கிருத்துவ மத குருமார்கள் வந்து, இங்குள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளும், கல்வி சார்ந்த உதவியும் செய்துள்ளனர். கோவிலூர் பகுதியில் பழமையான தேவாலயமும் உள்ளது. இது தவிர பல மலைகிராமங்களில் கிருத்துவ அடையாளங்களை பார்க்க முடிந்தது.

     சில தலைமுறைக்கு முன் பழங்குடிகள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் நிலங்களை ( பெரும்பாலும் பழங்குடிகளிடம் பட்டா இருப்பதில்லை, அரசும் அவர்களுக்கு பட்டா வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது) சர்ச்சு ஃபாதர்களிடம் கொடுத்து அதற்கு ஈடாக பணமோ, பொருளோ வாங்கி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். 

    பல ஆண்டுகளாக இப்படி நடந்ததால் நிறைய பழங்குடிகளின் நிலம் சர்ச்சு ஃபாதர்களிடம் கை மாறியுள்ளது.

     குன்றி மலையில் லிங்காயித் மக்களை தவிர்த்து நான் பார்த்து பேசிய நிறைய சோளக பழங்குடி மக்கள் நிலமற்ற கூலிகளாக இருந்தனர். அவர்களிடம் பேசு போது மேற்கூறிய தகவலை கவலையோடு சொல்லியிருந்தனர். இன்று குன்றி மலையில் மட்டும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பழங்குடிகளின் நிலம் அங்குள்ள சர்ச் ஃபாதர் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொன்னது பெரும் ஆச்சரியமாக இருந்தது.

     பழங்குடிகளின் பூர்வீக நிலங்களை சர்ச்சுகாரர்களிடம் போய் திரும்ப கேட்டால் மதம் மாறினால் தான் நிலம் தருவோம் என சொல்வதாக நம்மிடம் பேசிய பழங்குடிகள் சொல்லி வருத்தப்பட்டனர்.

     அங்குள்ள நிறைய மலைகிராத்தின் நிலையும் அப்படியாக தான் உள்ளது. குன்றி மலையை தாண்டி பல மலைகளில் கிருத்துவம் வளர்ந்திருந்ததை பயணத்தில் பார்க்க முடிந்தது. நிலம் கிடைக்கும் என்ற ஆசையில் பல்வேறு சோளக பழங்குடிகள் கிருத்துவத்திற்கு மாறி உள்ளனர். பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிகையில் சிலர் மாற்றப்படுகின்றனர், ஆனால் ஏமாற்றமே அவர்களுக்கான சலுகை.

     இன்றும் ஊரில் பழங்குடிகளால் நடத்தப்படும்  திருவிழாக்களில் கிருத்துவத்திற்கு மாறியவர்களும் வருவார்கள் ஆனால் அவர்கள் பாரம்பரிய பூசைகளை செய்ய நாங்கள் அனுமதிப்பத்தில்லை என்றார் ஒரு சோளக பழங்குடி அண்ணா.

     ஒரு காலத்தில் இம்மலை மக்களுக்கு கிருத்துவம் எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் சமகாலத்தில் அதனுடைய தாக்கம் மரபு வழிப்பட்ட பழங்குடி மக்களை தங்கள் மதத்திற்கு மாற்றுவதில் தீவிரமாக செயல்படுகிறது. இதற்கு நேர் மாறாக லிங்காயித் மலைவாழ் மக்கள் தங்களுக்குள் இருக்கும் தீவிரமான தெய்வ நம்பிக்கையால் அவர்கள் யாரும் கிருத்துவத்திற்கு மாறுவதில்லை எனவும் தெரிந்தது.
      லிங்காயித் சமூகம் நிறைய கட்டுப்பாடுகளை, பழக்க வழக்கங்களை கொண்டது. ஒரு முழுமையான லிங்காயித் தன்னுடைய வீட்டை தவிர வேறு எங்கேயும் உணவருந்தமாட்டார். வெளியூருக்கு சென்றாலும் நெருக்கு சில திண்பண்டங்களை தவிர வேறு ஏதும் சாப்பிடமாட்டார்.

     நான் குன்றிக்கு வந்தது மார்கழி என்பதால் அம்மாதம் முழுக்க வெளி ஆட்களை அவர்கள் தங்கள் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை, வருபவர்களுக்கு உணவும் கொடுப்பதில்லை.

     குஜ்ஜம்பாளையம் என்ற மலை கிராமத்தை அடுத்துள்ள லிங்காயித் சமூகத்தை சேர்ந்த முனி அண்ணாவை சந்திக்க போயிருந்தோம். மார்கழி மாதம் வீட்டிற்கு போக முடியாது என்பதால் மலையை ஒட்டி இருக்கும் அவரது காட்டிற்கு (நிலத்திற்கு) சென்றிருந்தோம். அவருடடைய பிள்ளைகள் இருவரோடு சோளம் அறுவடைக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

     கும்கிகள், JCP இயந்திரங்கள், வனக்காவலர்கள் துணையின்றி யானைகளை பாங்காட்டுக்குள் துரத்தும் வித்தைக்கு சொந்தகாரர் என முனி அண்ணாவை பற்றி தம்பி ஈஸ்வர் அறிமுகம் செய்திருந்தான்.

     யானைகளை கைக்கெட்டும் தொலைவுகளில் சந்தித்து உயிர் தப்பிய மையிர்கூச்சும் சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்தார். பல சமயங்களில் யானையிடம் அடிபட்ட காயத்தின் தழும்புகளையும் காண்பித்தார். தீப்பந்தங்களை வைத்து யானையை விரட்டினால் யானைகள் நேராக வந்து அந்த தீப்பந்தகளை மிதித்து, ஊதி அணைத்துவிடுமாம். யானைகள் எப்போது வந்தாலும் அதனை பாதுகாப்பாக காட்டிற்குள் விரட்டும் வித்தையை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன ஒவ்வொரு செய்தியும் தனி புத்தகமாக போடலாம், அவ்வளவு தகவல்கள்.
     அங்கிருந்து கிளம்பி, மதிய உணவை கோவிலூரில் முடித்த பின் தம்பி ஈஸ்வர், அண்ணா மாதேஸ்வரன் மலைக்கு போய்ட்டு வரலாமா எனக் கேட்டான். லிங்காயித்களின் புனிதத்தலம் இந்த மாதேஸ்வரன் மலை. அந்த மலைக்கோவிலை பற்றி கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் எங்கிருக்கிறது, எப்படி போவது எவ்வளவு நேரம் ஆகும் என ஏதும் தெரியாது.

     மதியம் கிளம்பினால் இரவு அங்கேயே தங்கி அடுத்த நாள் காலையில் விடலாம் அண்ணா என தம்பி சொல்ல. நானும் சரி வாடா கிளம்புவோம் எனச்சொல்ல… இருவருமாக மாதேஸ்வரன் மலைக்கு கிளம்பினோம். 

     திகில் நிறைந்த, அச்சத்தில் உறைய வைத்த மாதேஸ்வரன் மலை காட்டு பயணத்தினை அடுத்த பதிவில்  காண்போம்.

பனை சதிஷ்
27.12.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்