சத்தியமங்கலம் கானுலா பகுதி - 4

எனக்கான நாள் - 4

#SathyamangalamForest #KundriMalai

     குன்றியில் உள்ள குஜ்ஜம்பாளையம் மலை கிராமத்தில் இருக்கும் கண்ணப்பன் அண்ணாவிடம் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காட்டைப் பற்றி கேட்ட போது அவர் இறுக்கமான மனதோடு சொன்னது… "தம்பி…இந்த மலையும், காடும் எங்களுக்குச் சொந்தமானதுங்கப்பா. இதோ இந்த பாங்காட்டுக்குள்ள தான் எங்க முன்னோரோட ஆன்மா இருக்கு. அவங்க இன்னமும் அங்க தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா எங்கள பாருங்க எங்க எத்தா, எத்தே ( தாத்தா, பாட்டி) இருந்த பாங்காட்டை இழந்து, எங்க சொத்த இழந்து, எங்க சந்தோசத்தை இழந்து இப்ப இங்க வந்து வாழுறோம் என்றார். (பேசும் போதே அவரின் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தது) அதற்கு மேல் கேட்ட எனக்கும் மனமில்லாமல் அமையாக இருந்துவிட்டேன்.

     இங்குள்ள பழங்குடிகளின் முன்னோர்கள் பழையூர் காடு, சில்லூர் பைல் காடு, வாழை மடுவு தோம்பு, கரடிமடுவு காடு என பல பாங்காட்டு பகுதியில் வாழ்ந்துள்ளனர். 

     பழங்குடிகள் தாங்கள் பயிர் செய்யக்கூடிய சொந்த நிலத்தைத்தான் காடு என்கிறார்கள். வன அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் போதெல்லாம் இவர்கள் காடு என்று கூறியதை வனப்பகுதி என நினைத்துக் கொண்டு அதை வன நிலமாகப் பதிவு செய்து, பழங்குடிகளை அவர்களின் பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றியது பெரும் சமூக அவலம் என "ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்" நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் திலீப்குமார்.
      யார் இந்த பழங்குடிகள்…? மாதப்பன் என்ற சாமி வரம் கொடுத்ததால் பிறந்தவங்க காரய்யன், பில்லையன். இதில் காரய்யன் வழி வந்தவர்கள் ஊராளி பழங்குடிகள் என்றும் பில்லைய்யன் வழி வந்தவர்கள் சோளகர் பழங்குடிகள் என்றும் வாய்வழிக் கதைகள் கூறுகிறது. இல்லை, இல்லை லிங்காயித்கள் தான் பில்லையன் வழி வந்தவர்கள் ஊராளியும், சோளகரும் ஒரே ஆட்கள் தான் என மறுத்து சொல்பவர்களும் உண்டு.

     எல்லா வகையிலும் ஊராளிகளும், சோளகர்களும் ஒரே மாதிரியான பழக்க வழக்கம்,  பண்பாட்டை கொண்டவர்கள் தான். எனவே அவர்களிடம் பேசும் போது கூட தங்களை ஒரே இனத்தவர்கள் என்றே சொல்லிக்கொள்கின்றனர். மொழி என்ற ஒரு கூறு தான் இவர்களை இரு வேறாக பிரித்துக்காட்டுகிறது. ஊராளி பழங்குடிகள் ஊராளி என்ற மொழியை பேசுகின்றனர். ஆனால் சோளகர்கள் கன்னடம் தான் பேசுகிறார்கள். சில இடங்களில் மட்டும் கன்னடம் கலந்து ஊராளி மொழியில் பேசுவர்.

     சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் வாழும் மக்கள் அடிக்கடி யானையை சந்திப்பர் ஆனால் எப்போது பார்த்தாலும் முதல் முறையாக பார்த்த பரவசத்தோடு அதை மற்றவரிடம் சொல்கிறார்கள். இங்குள்ளவர்கள் யானையை சாமியாகத்தான் பார்க்கின்றனர். யானை ஊருக்குள் வந்தாலோ அல்லது காட்டு வழியில் சந்தித்தாலோ "சாமி போயிடு சாமி" "சாமி போயிடு சாமி" என அதனை வணங்க ஆரம்பித்துவிடுவார்களாம்.
     முதல் நாள் நான் குன்றி மலைக்கு வருவதற்கு முன் யானை மிதித்து ஒருவர் இறந்தது கூட எதிர்பாராத விபத்து தான். சத்தியமங்கலத்தை சேர்ந்த இருவர் குன்றி மலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு இரவு 8 மணிக்கு மேல் குன்றி மலையில் இருந்து கடம்பூர் காட்டு பாதையில் வரும் போது இரவு நேரம் என்பதால் யானை வழியில் நிற்பது பாராமல் நேராக யானை மீது இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளனர்.

     திடீரேன வாகனம் தன் மீது மோதியதால் அச்சமுற்ற யானை பெரும் சத்தத்தோடு பிளற தொடங்கி அங்கும் இங்கும் ஓடியுள்ளது. வாகனத்தை ஓட்டி வந்தவர் சுதாரித்துக்கொண்டு குறுக்கே ஓடிவிட பின் இறுக்கையில் அமர்ந்திருந்தவர் பயத்தில் அருகே இருந்த மரத்தின் பின்புற புதரில் மறைந்துள்ளார். அச்சமுற்று இருந்த யானை நேராக மரப்புதருக்கு வந்து அவரின் தலையில் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.

     இவ்வளவுக்கும் குன்றி மக்கள் ஒத்த ஆனை தனியா சுத்திட்டு இருக்கு அதனால இரவு தங்கிட்டு காலையில் ஊருக்கு போங்க என சொல்லியதை கேட்காமல் இருவரும் இரவில் காட்டுப்பாதையில் பயணித்துள்ளனர்.

     இப்படியான எதிர்பாராத சம்பவங்களை தவிர்த்து, இங்குள்ள மலை மக்கள் யானைகளோடும், காட்டு விலங்குகளோடும் ஒரு உயிரோட்டமான இணைப்பை கொண்டுள்ளனர்.

     இங்குள்ள பழங்குடிகளான சோளகரும் (ஊராளி), பழங்குடி பட்டியலில் இல்லாத லிங்காயித் மலைவாழ் மக்களும் தங்களுக்கே உரிய மரபு வழிப்பட்ட வாழ்வை இன்றும் தொடர்ந்து வருகின்றனர். இந்தாண்டு தங்களுக்கு உணவு கொடுத்த இந்த வனத்திற்கும், அங்குள்ள உயிர்களுக்கும் குறிப்பாக யானைக்கும் நன்றி கூறும் விதமாக ஆண்டு தோறும் திருவிழா எடுத்துக் கொண்டாடுகின்றனர். 

யானை படையல் (ஆனை பரா) & ஐம்பூத படையல்:

    குன்றி மலையில் வாழும் லிங்காயித் மலைவாழ் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டியையொட்டி யானைகளுக்கும், ஐம்பூதங்களும் நன்றி தெரிவிக்க படையல் செய்வதாக  அணில் நத்தம் பகுதியை சேர்ந்த அண்ணா ஒருத்தர் சொல்லியிருந்தார். நீங்க அவசியம் ஆனை திருவிழாவுக்கு வாங்க தம்பி, அப்ப நாங்க எல்லோரும் பாங்காட்டுக்குள்ள போவோம் என சொல்லி அழைத்திருந்தார்.

     மலை மக்களின் திருவிழாக்களை நேரில் பார்க்க வேண்டும் என நீண்ட நாள் ஆவல் இருக்கிறேன். ஆனாலும் பொங்கல் அன்று குன்றி மலைக்கு என்னால் செல்ல முடியவில்லை. நல்வாய்ப்பாக Galaxy trip maker ஒருங்கிணைப்பாளரான (மச்சி) நண்பன் அன்பு மணி யானை பரா எனும் யானைக்கான படையல் திருவிழாவுக்கு சென்று, அதனை மிக  நேர்த்தியாக பதிவு செய்து காட்சிப்படுத்தி இருந்தான். யானை மற்றும் ஐம்பூத படையல் குறித்து  அறிந்து கொள்ள அவசியம் இந்த காணொளியை பார்க்கவும் & பகிரவும்.

 https://youtu.be/xkwcxZGBvjQ

     பழங்குடிகள் ஐம்பூதங்களுக்கு படையல் இடுவதை நான் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் யானைகளுக்கு படையல் போடும் மரபு எனக்கு புதிதான தகவலாக இருந்தது. நேரில் சென்று பார்க்க இயலவில்லை என்றாலும் அன்பு மாச்சானின் காணொளியில் அதனை முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன்.

     சைவ உணவு பழக்கத்தை மட்டுமே கொண்டுள்ள லிங்காயித் மக்கள் பொங்கலையோட்டி கொண்டாடும் திருவிழாவின் போது மற்றொரு பகுதியில் சோளக மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிடாய் என ஊர் முழுக்க இருக்கும் ஆடுகளை ஒரே இடத்தில் வனத்திற்கு பலிகொடுத்து அங்கேயே சமைத்து பின் மீதம் உள்ளதை மற்ற சோளக ஊர்காரர்களும் கொடுக்கின்றனர்.

     மரக்கறி உணவை மட்டுமே உண்ணும் லிங்காயித்தும், ஊண் உணவையே வாழ்வாக கொண்டுள்ள சோளகர்களும் (ஊராளி) ஒரே ஊரில் சிறிய இடைவெளியில் வாழ்கின்றனர்.
மாதேஸ்வரன் மலை (கர்நாடகா காட்டுப்பகுதி)

     தம்பி ஈஸ்வர் மாதத்திற்கு இரு முறையாவது மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு வந்து விடுவதாக சொல்லியிருந்தான். குஜ்ஜம்பாளைத்தில் கண்ணப்பன் அண்ணாவை பார்க்க போன போதே லோசாக தூரல் இருந்தது, மழை மேகங்கள் அருகில் இருக்கும் மலைகள் முழுவதுமாக சூழ்ந்திருந்தன. ஆனால் அங்கிருந்து திரும்பும் போது நிலைமை அப்படியே மாறி போய் வானம் நல்ல வெளிச்சமானது.

     அருகில் இருந்த வீரபத்திரர் கோவிலுக்கு சென்ற பிறகு தங்கியிருக்கும் அறைக்கு வந்து தேவையானதை எடுத்துக்கொண்டு மாதேஸ்வரன் மலைக்கு கிளம்பினோம்.

     குன்றிமலையில் இருந்து மாக்காம்பாளையம், ஊக்கியம் வழியாக காட்டுப்பாதையில் சென்றால் மூன்று மணி நேரத்திற்குள் மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு சென்றுவிடலாம், குஜ்ஜம்பாளைத்தை தாண்டியதும் பாங்காடு ஆரம்பித்துவிடும் அங்கிருந்து மலையை விட்டு கீழ் இறங்கும் வரைக்கும் அடர்ந்த காடு தான் அண்ணா வழியில் யானை,கரடி இருந்தாலும் இருக்கலாம்  என சொல்லி கிளம்பும் முன்னமே பீதியை ஏற்றி விட்டான்.

      அணில் நத்தத்தில் இருந்து கிளம்பிய அரைமணி நேரத்திற்குள் காடு தொடங்கிவிட்டது. அப்போது தான் மழை பெய்துவிட்டது போல் ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருந்தது. பல ஆண்டு முன்னர் போட்ட தார் சாலை மழையால் பெயர்ந்து போய் வெறும் கருங்கல் சாலையாக இருந்தது.

     சில திருப்பங்களில் வாகனத்தை இயக்க மிகவும் சிரமாக இருந்தது. நிறைய இடங்களில் மரங்களின் வேர் சாலையை குறுக்கும் நெடுக்குமாக பயணித்திருந்தது. சல்லிக்கற்களால் சருக்கக்கூடிய இந்த மலைச்சாலையில் வாகனத்தை ஓட்ட நிச்சயம் திறமை வேண்டும். ஆனால் தம்பி லாவகமாக ஓட்டினான்.
     ஒவ்வொரு சில 100மீட்டருக்கும் சாலையில் புதிதாக இடப்பட்ட யானையின் சாணங்களை பார்க்க முடிந்தது. சில இடங்களில் புதிதாக  இட்டது போலவும், சில இடங்களில் நன்கு காய்ந்தும் இருந்தது. குஜ்ஜம்பாளையத்தில் இருந்து வடமேற்கே 20நிமிட காட்டுப் பயணத்திற்குள் மலைச்சாலை திடீரென இருளாகி போனது. சாலையின் இருபுறமும் காட்டில் இருக்கும் மரக்கொப்புகளால் சூரிய ஒளி தரையில் விழாமல் காட்டில் இருள் நிறைந்திருந்தது.

      யானைகள் அருகில் தான் இருக்கிறது என்பதை, எங்கேயோ உடைபடும் மரக்கிளைகளின் சத்தங்கள் உறுதிப்படுத்தியது. பின் இருக்கையில் அச்சத்தோடே அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு சத்தத்தையும் உன்னிப்பாக கேட்டு கேட்டு திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.

     நீண்ட பயணத்திற்கு பின் மலையை விட்டு ஓரளவு சமதளப் பகுதிக்கு வந்திருப்போம். ஆனாலும் காட்டுப்பகுதியில் தான் இருந்தோம். குன்றி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒன்று சேரும் ஓடைகள் ஆறாக மாறி குறுக்கே வந்தது. இந்த ஆறு காவேரி ஆற்றோடு சென்று சேர்கிறது. அங்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையை தாண்டி நீர் பாய்ந்தோடியது. சில நிமிடங்கள் அங்கேயே நின்று ஓய்வெடுத்து பின் கிளம்பினோம்.
     அடுத்து 10 நிமிடத்தில் பிரதான சாலை சந்திப்பு வந்தது. நூற்றுக்கும் குறைவான வீடுகள் கொண்ட நல்ல சாலை போக்குவரத்து வசதியுள்ள  மாக்கம்பாளையம் என்ற மலையடிவார கிராமம்.

     மலையடிவாரத்தில் இருக்கும் தனித்த அழகான இந்த கிராமத்திற்கு வர சத்தியமங்கலத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதியுள்ளது. சிறிது தூரத்தில் மீண்டும் காடு ஆரம்பித்துவிட்டது.

     இனி இந்த கிளை ஆற்றோடு தான் அண்ணா போகப்போறோம் என தம்பி சொல்லினான். ஆற்றில் நிறைய இடங்கள் மலைப்பாறைகளால் நிறைந்திருந்தது. ஆற்று நீர் பாறைகளை முட்டி மோதி சீறிப்பாயும் போது எழும் சத்தம் கரையில் பயணிக்கும் எங்களுக்கு இசையாக கேட்டது.

     ஒரு புறம் அடர்ந்த காடு மறுபுறம் சீறிப்பாயும் ஆறு என பயணம் தொடர்ந்தது.

அடுத்தப்பதிவில் அழிக்கப்பட்ட காட்டின் கதைகளோடு பயணத்தை தொடர்வோம்.

பனை சதிஷ்
27 / 28.12.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்