சத்தியமங்கலம் கானுலா பகுதி - 2


எனக்கான நாள் - 2

#Sathyamangalam #KundriMalai

     சில ஆண்டுகளுக்கு முன் சத்தியில் இருக்கும் நண்பரோடு கடம்பூர் அடுத்த இருட்டிப்பாளையத்தில் அவரது விவசாய நிலத்தை பார்க்க சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்ப வருவதற்குள் இரவு ஆகியிருந்தது. அப்போது கடம்பூர் - சத்தி மலைச்சாலையில் ஒற்றை ஆண் யானை சாலையோர புற்களை மேய்ந்து கொண்டு இருந்ததை பார்த்திருந்தோம். ( சொல்லப்போனால் அது தான் முதன் முதலாக காட்டில் நான் பார்த்த யானை) இம்முறையும் அதே மலைப்பாதை, தனியாக பயணம் செய்வதால் யானையை எதிர்கொள்ள நேரிடோமோ என்ற அச்சவுணர்வோடு வண்டியை ஓட்டிக்கொண்டு மலைக்கு மேல் கடம்பூருக்கு வந்து சேர்ந்தேன்.

      மலையில் அப்போது தான் மழைத்தூர ஆரம்பித்து இருந்தது. அங்கிருந்த ஒரு கடையில் அம்மழைக்கு இதமாக புதினா தேனீர் குடித்துக்கொண்டே, மேகக்கூட்டங்கள் மலையின் மீது முட்டி மோதுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்.
     முன்னர் ஒரு முறை ஜவ்வாது மலையில் மழை நேரத்தில் பயணித்த போது இப்படியானதொரு மழை மேகங்கள் மலையை முட்டி மோதுவதை பார்த்த அனுபவம் உண்டு. இப்போது அதை விடவும் மிக அருகிலேயே மேகக்கூட்டங்களை காண்கிறேன். மலையில் முதல் அனுபவமே பேரின்பம் கொடுத்தது.

     கடம்பூர் வந்து சேர மதிய நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே ஒரு கடையில் மதிய உணவை முடித்துவிட்டு குன்றி மலைக்கு செல்லும் வழியை அவர்களிடம் விசாரித்த போது, தம்பி நேத்திக்கு தான் யானை ஒருத்தர மிதிச்சு கொன்னுச்சி அதனால் குன்றிக்கு தனியா போக வேண்டாம், சத்தியில் இருந்து குன்றிக்கு பஸ் வரும், இல்லனா கடம்பூர்ல இருந்தே லோடு ஆட்டோ போகும் அதோட சேர்ந்து போய்டுங்க தனியா மட்டும் போகாதிங்கனு சொல்லி என் நடுக்கத்தை மேலும் அதிகரித்திருந்தார்.
     ஆனால் குன்றி மலைக்கு செல்லும் பேருந்து மாலை 4.30மணிக்கு தான் வரும் என்றனர். நீண்ட காத்திருப்புக்கு பின் மக்களை ஏற்றிச் செல்லும் ஒரு லோடு ஆட்டோ குன்றிக்கு புறப்பட தயாராக இருந்தது. தம்பி அந்த லோடு பின்னாடியே போய்டுங்க, வழியில் எங்கையும் நிக்க வேண்டாம் என சொல்லி பாசத்தோடு வழியனுப்பினார் உணவக கடைக்காரர்.

      மழைச்சாரலுடன், லோடு ஆட்டோ கிளம்பியது. அதனை பின் தொடர்ந்தேன். கடம்பூரில் இருந்து 20 , 25 கிலோ மீட்டர் தொலைவில் தான் குன்றிமலை இருக்கிறது. மலைப்பாதை என்றால் கூட அதிகபட்சம் 40 அல்லது 50நிமிடங்களில் சென்றுவிடலாம். ஆனால் ஏன் எல்லாரும் இவ்வளவு பயமுறுத்தினாங்க என்பது மலைப்பாதையில் போக போக தான் தெரிந்தது.
     கடம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து 5கி.மீ தான் வந்திருக்கும், அதற்குள் பச்சையம் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி ஆரம்பித்துவிட்டது. மழையோடு காட்டின் பாதை பொறுமையாக சென்று கொண்டிருந்தேன். சாலையின் ஓரமாக எங்களோடு பயணித்துக்கொண்டு இருந்த காட்டு ஓடையின் சத்தத்தை தவிர இந்த மலைப்பாதையில் முன்னரும், பின்னேயும் யாரும் இல்லை.

     சில கி.மீ தொலைவுகளிலேயே சாலையில் புதிதாக போட்ட யானை சாணத்தில் பட்டாம்பூச்சிகள் மோய்த்துக் கொண்டிருந்தன. வானகத்தை இடை நிறுத்தாமல் அதை பார்த்துக்கொண்டே செல்கையில் அடுத்த சில மலைத்திருப்பங்களில் மீண்டும் யானைகளின் சாணக்குவியல். வழி நெடுக பல இடங்களில் சில நாட்கள் முதல் சில மணி நேரமே இருக்கும் யானையின் சாணங்கள் ஆங்காங்கே இருந்தன.

     காட்டுப்பாதையில் பல தரப்பட்ட பறவைகளின் ஒலியை கேட்க முடிந்தது, சிலவற்றை தவிர மற்ற அனைத்து ஒலிகளும் எனக்கு புதிதானவை.
     மலைச்சாலையின் ஊடாக வந்த காட்டு ஓடை இப்போது சாலையின் குறுக்கே கடந்து வடமேற்கு பக்கம் சென்றது. ஓடையில் இறங்கி ஏறி வந்த பின் தண்ணீரின் குளிர்ச்சியால் சில நிமிடங்களுக்கு கால்கள் மறுத்து போனது போல் இருந்தது.

     ஒரு இடத்தில் முன் சென்றுக்கொண்டிருந்த லோடு ஆட்டோ திடீரென சாலையோரம் நின்றது. யானை தான் குறுக்கே இருக்கிறதோ என நினைத்து வேகமாக வாகனத்தின் அருகே சென்றேன்.

     நேற்று யானை ஒருவரை இங்கு தான் மிதித்து கொன்றதாக வாகன ஓட்டுனர் அடையாளம் காண்பித்தார். இன்னும் இரத்த கரையோடு இருந்த சட்டை சாலையோர மரத்தின் அடியில் இருந்தது. யானை அவரின் தலையில் மிதித்து நசுக்கி இருந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போயிருக்கிறார் என வானத்தில் இருந்தோர் பேசிக்கொண்டிருந்தனர்.

     யானை மீதித்து கொன்ற இடத்தில் யானையின் கால் தடத்தை பார்த்த போது அது எவ்வளவு கோபத்தோடு இருந்துள்ளது என்பது புரிந்தது. ( இந்த யானை மனித மேதல் எப்படி நடந்தது என குன்றிக்கு சென்றபின் ஊர்காரர்கள் சொல்லி கேட்டே, அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் ) அந்த இடத்தை பார்த்த பின் எனக்குள் மீண்டும் அச்சவுணர்வு, எதையும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் ஒரு வழியாக குன்றி மலையை வந்தடைந்தேன்.

      பல மலைகிராமங்களை கொண்ட குன்றி மலையில் நாம் செல்வது கிழக்கு திசையில் உள்ள கடைசி மலைகிராமமான அணில் நத்தம் என்ற பகுதி.
     முதலில் இந்திரா நகர் என்ற சோளக மக்கள் மட்டும் வசிக்கின்ற சிறுப்பகுதி, அதை கடந்து செல்கையில், இடது புறம் குஜ்ஜிலிபாளையம் மலைகிராமத்திற்கு செல்லும் வழியும் வலப்புறத்தில் பெரிய கிருத்துவ தேவாலயமும் இருந்தது. (குன்றி மலை முழுமைக்கும் ஒரு காலத்தில் கிருத்துவம் செய்த நற்காரியங்கள், பிற்காலத்தில் அது உள்வாங்கிய பழங்குடி மக்கள், நிலங்கள் குறித்து விரிவாக பின்னர் பேசுவோம்).

     தேவாலயத்தை கடந்து செலும் போது, கோவிலூர் என நினைக்கின்றேன், அவ்விடத்தில் இதுநாள் வரை நான் பார்க்க வேண்டும் என ஏங்கிய பீனாச்சியை ஊதிக்கொண்டும் பெரும் பறையை அடித்துக்கொண்டும் ஒரு சோளக ஆண்கள் குழு தங்கள் பகுதியில் நடக்கவிருக்கும் திருவிழாவுக்காக மக்களிடம் அரிசி வாங்கிக் கொண்டிருந்தனர். வயதான இருவர் பீனாச்சி ஊத, நான்கு நடுத்த வயதுடைய நபர்கள் பறையடிக்க, ஒருவர் அந்த இசைக்கு ஏற்றார் போல் ஆடிக்கொண்டே அரிசியை பெற்றுக் கொண்டிருந்தார்.

     அவர்களின் வாத்திய இசையை நீண்ட நேரம் அவர்களோடே நின்று கொண்டிருந்தேன். அணில் நத்தம் செல்ல இன்னும் ஒரு மலையை கடக்க வேண்டி இருந்தது. கோவிலூர் தாண்டி கிளமன்ஸ் தொட்டி என்ற இடத்திற்கு அருகில் தான் நாம் நால் ரோட்டில் சந்தித்த நண்பர் சதிஷ் பணி செய்யும் நிலாப்பள்ளி இருந்தது. பலமணி நேர பயணத்திற்கு பின், இறுதியாக வந்து சேர வேண்டிய அணில் நத்தம் பகுதிக்கு வந்தாகிவிட்டது. இங்கு யாரை பார்ப்பது, யாரிடம் பேசுவது என சிறிய குழப்பத்தோடு நண்பன் சித்துவுக்கு அழைப்பு கொடுத்த போது, தம்பி ஈஸ்வர் வந்து அழைத்து செல்வான் என்றான்.
    தம்பியின் வருகைக்காக காத்திருந்த போது அணில் நத்தம் குழந்தைகளிடம் (லிங்காயித் மக்கள்) பேசிக்கொண்டிருந்த போது ஒரு பெண் குழந்தைக்கு பனையோலை பறவை செய்து கொடுத்தேன், அவ்வளவு தான் அதை பார்த்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து சூழ்ந்து கொண்டனர்.

      எல்லாரும் ஆளுக்கு ஒரு திருக்குறள் சொல்லுங்க அப்ப தான் பனையோலையில கிரீடம், பறவையெல்லாம் செய்து கொடுப்பேன்னு சொன்னதும். வெட்கத்தோடு சிரித்துக்கொண்டே குறளை சரியாக சொல்லி அவர்களுக்கான பனையோலை பொருளை வாங்கிக்கொண்டனர். 

    தம்பி ஈஸ்வர் வந்ததும், அங்கிருந்து கிளம்பும் முன் நாளை வந்து உங்கள பார்க்கிறேன் என குழந்தைகளிடம் சொன்ன போது எல்லோரும் ஒரே குரலில் அண்ணா நாளைக்கு  சீக்கரம் வந்துடுங்க என சொல்லிக்கொண்டே அவரவர் வீட்டிற்கு ஓடிச்சென்றனர். அவர்களின் சிரிப்புக்கும், மகிழ்வுக்கும் தானே இத்தனை தூர பயணமும்.

     அணில் நத்தத்தில் இருக்கும் அழகிய விவசாய பண்ணையில் நான்  தங்க ஏற்பாடு செய்திருந்தான் நண்பன் சித்து. கொண்டு வந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு சிறிது ஓய்வுக்கு பின் தம்பி ஈஸ்வருடன் பண்ணையை சுற்றி பார்க்க சென்றோம். அப்போது காட்டில் மேய்ந்து கொண்டிருந்த தன் ஆட்டை  தேடிக்கொண்டு சோளகர் அண்ணன் ஒருவர் வந்திருந்தார். அவரோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கையில் பல செய்திகளை பகிர்ந்து கொண்டார்.  (அடுத்தடுத்த பதிவுகளில் அதுகுறித்து பேசுவோம்) தம்பி ஈஸ்வரின் அண்ணன் சிவக்குமார் பாதி பிரித்த நிலையில் பலா பழத்தை கொண்டுவந்தார், காட்டின் வேளலியோரம் அமர்ந்து பலா பழத்தை சாப்பிட்டு கொண்டே உரையாடலை தொடர்ந்தோம்.

     கொகாலி ( பீனாச்சி )

      ஒரு முறை ஜவ்வாதுமலையில் பழங்குடி மலை கிராமத்திற்கு சென்றிருந்த போது அங்கு நடந்திருந்த இறப்பு சடங்கில் கையடக்க நாதசுவரத்தை அவர்கள் வாசித்ததை பார்த்திருக்கிறேன்.  சோளகர் தொட்டி நாவலை வாசித்த போது தான் தெரிந்தது அவர்கள் வாசித்தது பீனாச்சி என்று.
      பண்ணையில் தம்பி ஈஸ்வரனிடம் வழியில் பீனாச்சி ஊதிக்கொண்டு இருந்த மக்களை பற்றி கேட்ட போது நம்ம அணில் நத்ததில் கூட முனியாண்டி (சோளகர்) தாத்தா பீனாச்சி வாசிப்பாரு வாங்க அண்ணா போய் பார்க்கலாம் என கூட்டிச்சென்றான்.

      மாலை வெய்யில் குறைந்து மலையில் இருள் விரைவாக வந்து கொண்டிருந்தது. முனியாண்டி தாத்தா அப்போது தான் காட்டு வேலைகள் முடிந்து வீட்டிற்கு வந்திருந்தார். ஐயாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் வீட்டில் இருந்த அக்கா ஒருத்தங்க சாப்பிடுங்கனு ஒரு வாழை பழத்தை கொடுத்தாங்க. மூன்று மஞ்ச வாழை பழத்தை ஒன்றாக சேர்த்த அளவிற்கு பெரிய பழமாக இருந்தது. அதனை மோந்த வாழை என்கிறனர். ஒரு பழத்தையே சாப்பிட முடியாமல் சாப்பிட்டேன்.

     பீனாச்சியை பற்றி கேட்ட போது எல்லா சோளகரும் பீனாச்சியை வாசிப்பது இல்லை, இதனை ஊத கடுமையான மூச்சிப்பயிற்சியும், பலமும் இருக்க வேண்டும் என்றார் முனியாண்டி தாத்தா. வயது முதிர்ந்த காலத்திலும் நாங்கள் கேட்டுக்கொண்டதால் அவர் எங்களுக்காக வாசிக்க தொடங்கினார்.

      அவர் வாசிக்க தொடங்கியது பீனாச்சியின் இசையில் முனியாண்டி தாத்தாவிடம் சரணாகதி ஆகியது போல் இருந்தது. சில பழங்குடி பாடல்களை சொல்லிக்கொண்டே பீனாச்சியை வாசிக்கவும் செய்தார். இறுதியாக பீனாச்சியின் முனையில் வாயில் வைத்து ஊதப்படுவது பனையோலை தான் என பார்த்த போது கூடுதல் ஆச்சரியம். எல்லாவற்றையும் ரசித்துவிட்டு பண்ணைக்கு வந்து ஓய்வெடுத்தோம்... தொடரும்…
லிங்காயித், சோளகர் என இரு வேறு சமூக மக்கள் வாழும் குன்றி மலையில், நிலம் இழந்து சொந்த நிலத்திலேயே கூலிகளாக மாறிப்போன சோகளர் ஒருவரின் உள்ளக்குமுறல் குறித்தும், கிருத்துவம் இந்த மலையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

பனை சதிஷ்
26.12.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்