சத்தியமங்கலம் கானுலா பகுதி - 6


எனக்கான நாள் - 6

#SathyamangalamForest #KundriMalai

     நாங்கள் நேற்று மாதேஸ்வரன் மலைக்கு கிளம்பிய இரவு குஜ்ஜம்பாளையத்தை சேர்ந்த கண்ணப்பன் அண்ணனின் சோளக்காட்டில் யானைகள் இறங்கி அங்கிருந்த சோளப்பயிர்களையும், கம்பு பயிர்களையும் சாப்பிட்டுவிட்டிருந்தன. கண்ணப்பன் அண்ணாவும், ஊர்காரர்களும் இரவு முழுக்க யானைகளை பாங்காட்டிற்குள் விரட்டிக் கொண்டிருந்துள்ளனர்.

     மனிதனை விட புத்திசாலியான யானைகளை காட்டுக்குள் விரட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இரவு முழுவதும் யானைகள் மலைக்கு இடது பக்கமும் வலது பக்கமும் மாறி மாறி இறங்கி போக்கு காட்டியிருந்துள்ளன. ஆயினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நேற்றைய இரவு முடிந்துள்ளது.

     காலை உணவு சாப்பிட கோவிலூரில் இருக்கும் உணவகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அணில் நத்தம் பகுதியை சேர்ந்த சோளக பெண் குழந்தை கடையில் எங்களை பார்த்ததும், அண்ணா நீங்க திரும்ப வந்து பனையோலையில் பொருள் செய்து தரேன்னு சொல்லிட்டு போனீங்க ஆனா வரவேயில்ல என சொல்லி கோவித்துக் கொண்டாள்.
     சரி கோவிச்சிகாதடா சீக்கரம் வந்துடுறேன்னு சொல்லி அவங்களை சமாதானப்படுவிட்டு, அறைக்கு வந்து இருக்கின்ற எல்லா பனையோலைகளையும் எடுத்துக்கொண்டு முதலில் அணில் நத்திம் காலனிக்கு சென்று அங்கிருந்த சிறார்கள் அனைவருக்கும் பனையோலையில் கிரீடம், ரோஜா பூ, மோதிரம், கை கடிகாரம் பறவைகள் செய்து கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளமன்ஸ் தொட்டிக்கு போகிற வழியில் இந்திரா நகரில் சில குந்தைகளை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினேன்.

     பத்து விடுகளே இருக்கும் அந்த தொட்டியில் இருந்த குழந்தைகளுக்கும் பனையோலையில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் செய்து கொடுத்து விட்டு கிளமன்ஸ் தொட்டிக்கு கிளம்பினேன்.

     பிரதான சாலையில் இருக்கும் மலை கிராமங்களை தவிர மலைக்கு மேல் அல்லது உள் பகுதியில் இருக்கும் தொட்டிகளுக்கு ( மிகக்குறைந்த வீடுகள் கொண்ட பகுதி) செல்ல மண் சாலை தான். அந்த சாலையில் பயணித்த போது, தினமும் குழந்தைகள் அவ்வழியே தான் பள்ளிகளுக்கும், காட்டு வேலைகளுக்கு செல்கின்றனர் என அங்கிருக்கும் அண்ணா ஒருவர் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.
     'கிளமன்ஸ் தொட்டி' முழுக்க முழுக்க சோளக பழங்குடிகள் வசிக்கக்கூடிய தொட்டி. பனையோலையோடு என்னை  பார்த்ததும் வீட்டின் சுவரோரம் ஒளிந்திருந்த சிறுமியர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த வயதான பாட்டி ஒருவர் அருகே நடந்து வந்து பனைஓலை கொண்டாந்து இருக்கேயே, இதைய வச்சி என்ன பண்ண போறேனு சத்தம்போட்டு கேட்ட போது, ஒளிந்திருந்த பிள்ளைகள் இன்னும் சத்தமா சிரிச்சிட்டு இருந்தாங்க.

     மலைச்சரிவில் இருந்த அந்த வயதான பாட்டி வீட்டின் முன் தொட்டியின் குழந்தைகள் எல்லோரும் விளையாடிட்டு இருக்க, வீட்டின் திண்ணையில் பனையோலையோடு அமர்ந்து கொண்டு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளை அழைத்து பனையோலைகளை அவர்களிடம் காட்டி இது என்னனு தெரியுமா எனக் கேட்டதிலிருந்து, எங்களுடனான உரையாடல் தொடர்ந்தது. நான் அங்கிருந்து கிளம்பும் வரை யாரும் விளையாடாமல் என்னுடனே இருந்து விட்டனர்.
     பனையோலையில் சிறிய அளவிலான பறவையும், மீனும் அவர்களுக்கு செய்து கொடுத்ததில் அவர்கள் மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டு இருந்த போது இன்னும் சில உரையாடலை தொடங்கினேன்.

* உங்களுக்கு இங்க வாழ சிரமமா இல்லையா.?

* எல்லாரும் படிச்சிட்டு என்வா ஆக விருப்பப்படுறீங்க.?

* நீங்களாம் ஏன் இவ்வளவு உயரமான மலையில அதுவும் காட்டுக்குள்ள இருக்கீங்க.?

* டவுன்ல (நகரம்) போய்டு இருக்க புடிக்கலையா.?

* காட்டுக்கு போனா என்னலாம் சாப்புடுவீங்க.?

* உங்களுக்கு மலையில இருக்க புடிச்சிருக்கா.? இல்ல கீழ்நாட்டுல போய்ட்டு வாழனுமா.?

எனக் கேட்டுக் கொண்டே இருக்க அவர்கள் அனைவரிடமிருந்தும் வந்த பெரும்பான்மையான பதில்கள்

* அண்ணா டவுன்ல எங்களுக்கு வாழவே புடிக்கல

* அங்க நிறைய புகையா இருக்கு

* அங்க நிறைய சத்தமா இருக்கு

* அங்க போனா எல்லாத்துக்கும் காசு கேக்குறாங்க - என நிறைய காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். 

* காடு தாங்க அண்ணா எங்களுக்கு எல்லாமே தேன், கிழங்கு, பழம், மூங்கில் என எங்களுக்கு எல்லாமே காடு கொடுத்துடுதுங்கண்ணா அப்புறம் நாங்க டவுனுக்கு போய் என்ன பண்ணுறது.
     எனக்குள் ஏற்பட்ட ஆச்சரியம் என்னவெனில் இவ்வளவு காரணங்களையும் சொல்லிக்கொண்டு இருந்தது, 6 முதல் 8 வரையே படிக்கக்கூடிய பிள்ளைகள் தான். இந்த சின்ன வயதிலேயே முதிர்ச்சியான வார்த்தைகளை அவர்கள் பேசினார்கள். அவர்களின் முன் மாணவனாக நான் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

     அவர்களிடம் நம் பொது புத்தியில் இருக்கும் நாகரீக உடையோ, பொருளாதாரமோ, வாழ்கை முறையோ இல்லாமல் இருக்கலால் ஆனால் அவர்கள் தான் இந்த காட்டை ஆளும் வேந்தர்கள்.

     பழங்குடி என்றால் காடு, காட்டிற்கு மறு உருவம் பழங்குடிகள் என்பதை புத்தகத்தில் வாசித்ததோடு இல்லாமல் அதனை நேரடியான உரையாடலின் ஊடாகவும் புரிந்து கொண்டேன்.
      அவர்கள் ஒவ்வொருவரும் விரும்பி கேட்ட பனையோலை பொருட்களை செய்து கொடுத்துக்கொண்டே இருந்தேன். மதிய உணவு நேரத்தை தாண்டியும் அவர்களோடே இருந்தேன். ஒரு பையன் அண்ணா எனக்கு ஓலையில் புல்டோசர் செய்து கொடுங்க என்கிறான் இன்னொருவன் மாட்டுவண்டி வேண்டும் என்றான். இப்படியே கலகலப்பாகவும், சிரிப்போடும் அவ்வப்போது உரையாடல்களோடும் நேரம் சென்று கொண்டே இருந்தது. 

     எல்லா குழந்தைகளும் தங்களுக்கு கிடைத்த பனையோலை பொருட்களை அவரவர் வீட்டுக்கு எடுத்து சென்று தங்கள் அம்மாக்களிடம் காண்பிக்க, அவர்களும் சிரித்த முகத்தோடு வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

     எல்லோரிடமும் போய்ட்டு வரேன்னு சொன்னதும் ஒரு பெண் பிள்ளை மட்டும் அழுது கொண்டே ஓடிவந்தாள், என்னமா என்ன ஆச்சி என்ற போது, அங்க பாருங்க அண்ணா அந்த பையன் என்னோட கிரீடத்த எடுத்துட்டு போய்ட்டான் எனச்சொல்லி தேம்பி அழுதுதாள். என்னிடம் இறுதியாக இருந்த சிறு சிறு ஓலைகளை இணைத்து அவளுக்கு புதுவித கிரீடம் ஒற்றை செய்து கொடுத்த போது அளவற்ற மகிழ்ச்சியில் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு ஓடினாள்.

     அங்கிருந்து கிளம்பி அணில் நத்தம் வரும் போது வழியில் ஒரு பெண் குழந்தை தலையில் பனையோலை கிரீடத்தை மாட்டிக்கொண்டு தன் அம்மாவோடு காட்டு வேலைக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தாள்.
     மதிய நேரம் கடந்திருந்தது, தங்கியிருந்த அறைக்கு வந்தேன், தம்பி ஈஸ்வரும், சிவாவும் தங்கள் நிலத்தில் சோள அறுவடைக்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

     நான் குன்றியில் இருந்த நாட்களில் தன்னுடைய வேலைகளை விட்டு என்னுடனே நேரத்தை செலவிட்ட அன்பு தம்பி ஈஸ்வரை கட்டியணைத்து கிளம்புவதாக சொன்னேன். சிவா தம்பி தான் குன்றியில் வாழும் மக்களின் வாழ்வியலை பற்றிய நிறைய புதிய தகவல்களை எனக்கு சொன்னார். இவர்கள் இருவர் இல்லையெனில் என் பயணம் நிச்சயம் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

     குன்றி மலையிலிருந்து கிளம்பும் முன் இறுதியாக அந்த பரண் கடப்பட்டு இருக்கும் மரத்தை நோக்கி வேகமாக ஓடினேன், ஓடிவந்த வேகத்திலேயே மூச்சு இரைக்க பரண் மீது ஏறினேன். 

     பரண் மேலே சென்ற பின், சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாங்காடும், மலைகளும், பள்ளத்தாக்கும்  சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. 

     சிந்தும் கண்ணிரை துடைத்துக் கொண்டு பரணில் இருந்து கீழ் இறங்கி அறைக்கு வந்து வாகனத்தை தயார் படுத்திக்கொண்டு குன்றி மலைக்கு நன்றியை சொல்லும் விதமாக திரும்பி பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

     கடம்பூர் வனப்பகுதி வரும் முன் குறுக்கே சென்ற காட்டு ஓடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் சுற்றி இருந்த மரங்களையும், பறவைகளையும், காட்டையும், மலைகளையும் பார்த்து பெருமூச்சு விட்டபடி உரத்த குரலில் அழுது விட்டே அங்கிருந்து கிளம்பினேன்.
     பழங்குடிகள் தான் காட்டை ஆள்கிறார்கள், அவர்களால் தான் காடும் ஆளப்பட வேண்டும் என்பதே இந்த பயணம் எனக்குள் மீண்டும் மீண்டும் உணர்த்தியது…

     அந்த அடர்ந்த கானகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன், மீண்டும் சந்திப்போம்.

பனைசதிஷ்
29.12.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்