சத்தியமங்கலம் கானுலா பகுதி - 5

எனக்கான நாள் - 5

#SathyamangalamForest 
#MaleMadeshwaraTemple

     ஒரு புறம் அடர்ந்த காடு மறுபுறம் சீறிப்பாயும் காட்டாறு என எங்களின் பயணம் தொடர்ந்தது.

     மாக்கம்பாளையத்தில் இருந்து சில கி.மீ தொலைவில் காட்டாற்றின் ஓரம் பல ஏக்கரில் காட்டை அழித்து பாக்கு, தென்னை, வாழை சாகுபடி செய்து சுற்றிலும் தடினமான சுற்றுச்சுவர் எழுப்பி அதன்மேல் மின்சார வேலியும் போடப்பட்டு இருந்தது.  வழிநெடுக காட்டின் விளிம்பு பகுதியில் இது போன்ற சூழலுக்கு ஒவ்வாத பணப்பயிர் சாகுபடியை காண முடிந்தது.

     உணவு தேடி காடுகளிலிருந்து வெளியே வரும் யானைகளுக்கும், இன்ன பிற உயிரனங்களுக்கும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

       அண்ணா போகிற வழியில் ஊக்கியம் தாண்டி தான் நாங்கள் பூசை செய்யும் சிவலிங்கேஸ்வரன் கோவில் இருக்கு அத பார்த்துட்டு போகலாம் என்றான் தம்பி. அவர்களின் குடும்ப வகையறாக்கள் தான் இங்கு தம்புடிகளாக உள்ளனராம். (தம்புடி - பரம்பரையாக பூசை செய்ய உரிமை உள்ள லிங்காயித்துகள். ஆண்டின் சில மாதங்கள் தாம் தம்புடிகளாக இருக்கும் கோவிலிலேயே தங்கி பூசை செய்வார்களாம்).

     காட்டாற்றுக்கு எதிர்கரையில் கோவில் இருப்பதால் ஆற்றை கடந்து தான் செல்ல முடியும். கோவிலுக்கு போகும் முன் குளித்துவிடலாம் என ஆற்றில் இறங்கினோம். இதமான குளிர்ந்த நீரில் நேரம் போனது தெரியாமல் குளித்து கொண்டே இருந்துவிட்டோம். தாமதப்படுத்த வேண்டாம் என்று கோவிலுக்கு விரைவாக கிளம்பினோம். ஆற்றை கடந்து போகும் போது பனந்தூர் (பனந்தூர் - வெட்டப்பட்டு வேரோடுள்ள பனையின் அடிப்பகுதி) ஒன்று ஆற்றங்கரையோரம் இருந்தது.

     மலையடிவாத்தில் தனிமையில் இருக்கும் அழகான சிவன் கோவில். சுற்றிலும் சில காட்டு தெய்வங்களின் சிலைகளை காண முடிந்தது. குறிப்பாக கோவிலின் இடது பக்கம் கன்னிமார் தெய்வ சிற்பங்களும், வலது பக்கம் பூசலில் இறந்த வீரனின் நடுகல்லும் அதில் பழைய கன்னடத்தில்  கல்வெட்டும் பொறிக்கப்பட்டு இருந்தது.

     கோவிலில் இருந்து சில கி.மீ தொலைவில் தமிழ்நாடு, கர்நாடக சோதனைச் சாவடிகள் வந்தது.

     இனி பயணம் முழுக்க கர்நாடக காட்டுப்பகுதிக்குள் தான் அண்ணா, போகிற வழியில் ஒரு டேம் (அணை) பார்க்க நல்லா இருக்கும் போகலாமா என்றான். சரிடா ஆனால் இருட்டுவதற்குள் அங்கிருந்து கிளம்பிடணும் என சொல்ல அணையை நோக்கி கிளம்பினோம்.

     வழியில் சில கர்நாடக மலையடிவார கிராமங்களில் ஆங்காங்கே தமிழில் பெயர் பலகைகள் இருந்தன. தமிழ் பேசக்கூடிய மக்களும் இங்குள்ளனராம்.

     மீண்டும் அடர்ந்த வனப்பகுதி. இந்த கர்நாடக வனப்பகுதியில் சில இடங்களில் யானைகள் நடமாடும் பகுதியென யானை படத்தோடு கன்னடத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை பலகையை காணமுடிந்தது. என்ன தம்பி இங்க கூட யானைங்க வருமாடா என கேட்க, ஆமாங்க அண்ணா இந்த பக்கமெல்லாம் யானை எப்ப இறங்கும்னே தெரியாது, டேம் (அணை) இருக்குறதால தண்ணி குடிக்க அடிக்கடி இந்த பக்கம் வந்துவிடும் என்றான்.

     ஒரு வழியாக காட்டுப்பகுதிகளை கடந்து அணைக்கு வந்து சேர்ந்தோம். முழுவதுமாக நிரம்பி வழிந்தோடிய அணையை காண ரம்பியமாக இருந்தது. சுற்றிலும் நீர் வழிந்தோடும் சத்தமும் பறவைகளின் சத்தமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அங்கேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பின் அணையோடு சில புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் வந்த வழியான அடர்ந்த காட்டுப்பகுதியில் திரும்பிக் கொண்டிருந்தோம்.

     நாங்கள் முதலில் வரும் போது இல்லாத யானையின் சாணம் இப்போது புதிதாக சில இடங்களில் சாலையோரம் போடப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அருகில் எங்கோ தான் உள்ளது ஆனாலும் பார்க்க முடியவில்லை.

     சாலையின் இரு பக்கமும் புதர்களையும், சிறு சிறு மரங்களையும் அகற்றியிருந்தனர். யானையோ மற்ற காட்டு விலங்குகளோ திடீரென சாலையின் குறுக்கே வந்தாலும் சாலையில் செல்வோருக்கு தெளிதாக தெரியும் அளவுக்கு இருந்தது.

     அணையில் இருந்து திருப்ப வருகைபோதே வானம் இருட்ட தொடங்கிவிட்டது. எங்கோ மழை பெய்யும் வாசமும், இதமான குளிர்ந்த தென்றல் காற்றும் அடித்துக்கொண்டே இருந்தது. நிச்சயம் கோவிலுக்கு சென்று சேரும் முன் மழை நெருங்கிவிடும் என நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது.
     மதியம் தொடங்கிய பயணம் 5மணி நேரமாக பயணித்து முன்னிரவு தொடங்கிய போது தான் மாதேஸ்வரன் கோவில் இருக்கும் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஆனாலும் இன்னும் இரண்டு, மூன்று மலைகளை கடந்தால் தான் கோவிலுக்கு செல்ல முடியும். 

மா மழை தொடங்கிவிட்டது.

     மலையில் செல்லும் முன்னமே மழை தூர ஆரம்பித்துவிட்டது. பாதி மலையை நெருங்கியதும் நல்ல மழை. நடுக்காட்டில் மலைச்சாலையில் எங்கேயும் ஒதுங்க முடியாது என்பதால் மழையிலேயே சென்று கொண்டிருந்தோம். இருவருமே குளிருக்கான ஆடையை தான் போட்டு இருந்தோமே தவிர மழைக்கான ஆடை எங்களிடம் இல்லை. நேரம் செல்ல செல்ல மழை மேலும் கடுமையானது. மலையில் மழையோடு மூடுபனியும் சேர்ந்துவிட்டதால் எதிரில் சாலை உள்ளதா… வாகனம் வருகிறதா என்பது கூட சரிவர தெரியவில்லை. ஆனால் தம்பி ஈஸ்வர் நேர்த்தியாக வாகனம் ஓட்டினான்.

     மழை பெய்துகொண்டே இருந்தது. நாங்கள் நனைந்து கொண்டே இருந்தோம். ஆனாலும் காட்டின் இருளை விலக்கி தூரத்தில் மாதேஸ்வரன் கோவில் மட்டும் மின்மினிப் பூச்சி போல் ஒளிவெள்ளத்தில் மின்னிக் கொண்டிருந்தது. மாதேஸ்வரன் கோவில் வந்து சேர்ந்த போது மழை ஓய்ந்திருந்தது.

     மாதேஸ்வரன் கோவில் அமைப்பை பார்த்ததும் எனக்கு திருப்பதி கோவில் நினைவு வந்தது. இரண்டு கோவிலும் மலைக்கு மேல் இருந்தாலும் கோவில் இருக்கும் பகுதி மட்டும் சற்றே பள்ளத்தில் இருக்கும். கோவில் அருகே பேருந்து நிலையமும் அருகே நிறைய வீடுகளும் என ஓரளவு நகரமாக இருந்தது.

     பசி வாட்டியதால் முதலில் உணவு முடித்துவிட்டு அடுத்து தங்கும் அறையை தேடலாம் என்று அருகில் இருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு, பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த தங்கும் விடுதிக்கு சென்று அறையெடுத்து, மழையால் நனைந்த துணிகளை அறையில் உலர்த்தி போட்டிருந்தோம். 

     இரவு சாப்பிட்டது பச்சரிசி சாப்பாடாம், இது நாள் வரை பச்சரிசியில் வடித்த சோற்றை சாப்பிடாத எனக்கு சாப்பிட்ட பின் வயிற்றுப்போக்கு ஆரம்பித்துவிட்டது. அது இரவு முழுக்கவும், காலையிலும் தொடர்ந்தது. எனவே விரைவாக சாமி பார்த்துட்டு கிளம்பிடலாம் என தம்பியிடம் கேட்டுக் கொண்டேன்.

     ஆதிசங்கரர் புலியின் மீது அமர்ந்து இருப்பது போன்று இருந்தது மாதேஸ்வரரின் தோற்றம். கோவிலின் அருகே இருக்கும் மலையில் புலியின் மீது மாதேஸ்வர சாமி அமர்ந்திருப்பது போல பிரம்மாண்டமான சிலையை செய்து கொண்டிருந்தனர்.

     மாதேஸ்வர சாமி, சத்தியமங்கலம் காடு தொடங்கி பல மலைகளில் ஓய்வெடுத்து பின் இறுதியாக இந்த மலையில் வந்து தங்கிவிட்டதாக சில புராண கதைகள் சொல்கின்றன. இந்த கோவில் தான் லிங்காயித்து மக்களின் மெக்கா.

     தம்பி ஈஸ்வரனின் அண்ணா சிவாவும் சில மாதங்கள் இந்த கோவில் பூசை செய்ததால். கூட்ட நெரிசலிலும் தம்பி என்னை நேரடியாக சாமியை தரிசிக்க அழைத்து சென்றான். 

     கோவிலின் பின்புறம் வளர்ந்த பெண் யானை அடைத்து வைக்கப்பட்ட தன் கொட்டகைக்குள் இருந்து சுற்றி இருக்கும் மலையையும், காட்டையும் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.
     கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் வரையிலான காட்டுபாதையில் வருகிற போதே என் வாகனம் கடுமையாக பாதித்துவிட்டது. எனவே மீண்டும் அவ்வழியே மலையேற வேண்டாம் எனவும் சுற்றிக்கொண்டு போனாலும் நல்ல சாலை உள்ள வழியே போவோம் எனவும் தம்பிடம் சொன்ன போது அண்ணா நான் என் வண்டியில மாசத்துக்கு இரண்டு முறை இந்த வழியில் தான் வர்றே. அடுத்த வாரமும் இதே வழியா தான் சிவாண்ணாவை கூட்டி கோவிலுக்கு வருவேன் என்றான். இருப்பின் சுற்றிக்கொண்டே போலாம் என நான் அடம்பிடித்ததால் அவனும் சரி என்றான்.

     மாதேஸ்வரன் மலைக்கு மேட்டூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கோவிலில் இருந்து காவேரி ஆற்றின் ஓரமாக மேட்டூர் வழி நல்ல சாலை வசதியில் இருக்கும். ஆனால் மேட்டூர் சென்று பின் பவானி வழியாக சத்தி சென்று அங்கிருந்து கடம்பூர், குன்றி மலைக்கு செல்வது என்றால் நேரம் விரயமாகும் என்பதால் நாம் பர்கூர், அந்தியூர் வழியாக செல்லலாம் என்றான் தம்பி.

     நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மாதேஸ்வர மலையைவிட்டு இறங்கும் போது ஆங்காங்கே புதிய புதிய ஓடைகளை கடந்து வர வேண்டி இருந்தது. காட்டு ஓடையின் நீர் செம்மண் நிறத்தில் இல்லாமல் ஓரளவு தெளிவாக இருந்த போதே புரிந்த இங்குள்ள காடுகள் இன்னமும் செழிப்பாக உள்ளதை உணர்ந்து கொண்டேன்.

      எவ்வளவு கனமழை பெய்தாலும் காட்டுத்தரையில் உள்ள மக்கிய மரங்களின் இலைகள் மழைநீரை வடிகட்டிய பின்னரே ஓடைக்கு அனுப்பும். மலையில் மரங்களை வெட்டிவிட்டால் மழை பெய்தால் அது மேல் மண்ணை மொத்தமாக அடித்துச் சென்றுவிடும், அதிகமாக செம்மண் நிறத்தில் காட்டு ஓடை இருந்தால் காட்டில் மரங்கள் அதிகளவு வெட்டப்படுள்ள என புரிந்து கொள்ளலாம்.

     கர்நாடக - தமிழ்நாட்டு சோதனைச் சாவடியை கடந்து வந்த பிறகு மேட்டூர் அணைக்கு செல்லும் காவேரியின் துணை ஆறு வந்தது. ஆற்றிற்கு வடக்கே கர்நாடகம் தெற்கே தமிழ்நாடு. இங்கிருந்து மேட்டூர் அணைக்கு முன் பாலார் என்ற பகுதிக்கு அருகே காவேரி ஆற்றோடு கலக்கும் வரை இந்த ஆறு தான் இரு மாநில எல்லைப் பகுதியாக.

     தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகவுக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் திம்பம், தாளவாடி பகுதிக்கு அடுத்தபடியாக இந்த அந்தியூர் - கொல்லேகால் மலைப்பாதையில் தான் அதிகம் பயணிக்கின்றன. ஆகையால் ஒவ்வொரு வளைவிலும் கனரக வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்ததால் எங்கள் பயணம் சற்றே தாமதமானது.

      மழை பெய்திருந்தாலும் தமிழக பகுதியில் இருக்கும் காடுகள் வறண்டே காணப்பட்டது, இங்குள்ள பாங்காட்டு பகுதியிலும் மூங்கில்கள் முற்றிவிட்டிருந்தது.

     இரு மாநில எல்லைச்சோதனை சாவடியில் இருந்து தட்டக்கரை என்ற தமிழக மலை கிராமம் வரையிலும் (25கி.மீ) அடர்ந்த பாங்காடு தான். மலையில் சரக்கு வாகனங்கள் செல்ல ஏதுவாக மலைச்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு இடத்தில் காட்டுக்கு நடுவே நான்கு வனக்காவலர்கள் குழுவாக நின்று ஒருவர் அடையாளம் காட்ட இன்னொருவர் காட்டின் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

     தம்பியிடம் இது குறித்துக் கேட்ட போது, ஆமாங்க அண்ணா ஒவ்வொரு நாளும் அவங்க பெரிய ஃபாரஸ்ட் ஆபிசர் இவங்களுக்கு ஒரு இடம் சொல்லிடுவாங்க, இவங்க எல்லாரும் அந்தந்த காட்டு பகுதிக்கு போய்ட்டு போட்டோ எடுத்து அவங்க பெரிய ஃபாரஸ்ட் ஆபிசருக்கு அனுப்பனும் அதுக்காக தான் இந்த பாங்காட்டு பக்கம் நிக்குறாங்க. மழை, வெயில், காட்டுத்தீ எதுவா இருந்தாலும் இவங்க காட்டுக்குள்ள போய் தான் ஆகனும் என்றான்.

     எளிய வனக்காப்பாளர்களின் பணி உண்மையில் வியப்படைய வைத்தது. நேற்று குன்றி மலையில் இருந்து மாதேஸ்வரன் கோவிலுக்கு கிளம்பும் முன் மழையில் நனைந்து கொண்டே ஒரு வன ஊழியர் வனத்திற்கு போனது எதற்காக என இப்போது புரிந்தது.

     அடுத்தடுத்து ஊசிமலை, பர்கூர், தாமரக்கரை மலை கிராமங்கள் வந்தது, வழிநெடுக சுற்றிலும் மலைச்சரிவுகளில் விவசாயம் செய்திருந்தனர். தென் திசையில் பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டி அந்தியூரை நோக்கி கீழ் இறங்கிக் கொண்டிருந்தோம். தூரத்தில் அந்தியூர் நகரமும், மலை அடிவாரத்தில் இருக்கும் வரட்டுப்பாளையம் நீர்தேக்கமும் தெளிவாக தெரிந்தது.

     சோளகர் நாவலில் வாசித்த பர்கூர், அந்தியூர் மலைப்பகுதிகளை முதல் முறையாக பார்த்த போது நாவலோடு பயணப்பட்ட அனுபவம். வீரப்பனார் தங்கியிருந்த சில கிராமங்களையும் வருகிற வழியில் பார்த்தோம்.

     பர்கூர் மலையை தாண்டிய பின் தூரத்தில் சில தனித்த மலை கிராமங்களையும் பார்க்க முடிந்தது. இங்குள்ள மலைகிராமங்களில் பெரும்பாலும் சோளர்களும் (ஊராளி) ஒரு சில பகுதிகளில் லிங்காயித்துகளும் வாழ்கின்றனராம்.

     இறுதியில் அந்தியூரை அடைந்து அங்கிருந்து பெருமுகை வழியாக சத்தியமங்கலம் நால்ரோடு சந்திப்புக்கு சென்று கொண்டிருந்தோம். மச்சான் சித்தலிங்கம் நேற்று மாலை தான் குன்றி மலைக்கு வந்து நண்பருக்காக எருமை மாட்டை கன்று குட்டியுடன் வாங்கி கொடுத்துவிட்டு இப்போது கோவை திரும்பி கொண்டிருப்பதாகவும் வாய்ப்பிருந்தால் வழியில் சந்திப்போம் என சொல்லியிருந்தான்.

     நேற்று இரவு சாப்பிட்ட உணவு வயிற்றை படாத பாடுபடுத்திவிட்டதாலும் காலையில் இருந்து ஏதும் சாப்பிடாததாலும் நிறைய பசி, எனவே நால்ரோடு சந்திப்பில் உணவுக்காக கடையில் அமர்ந்திருந்த போது, சித்துவுக்கு அழைத்து இங்கே வந்துவிட சொன்னதும் அவனும் அடுத்த 10,15 நிமிடங்களுக்குள் வந்துவிட்டான். இது நாள் வரை முகநூலில் மட்டுமே பார்த்து பழகிய அவனையும் மேலும் சில நண்பர்களையும் சித்துவுடன் உடன் இருந்தனர். முக்கியமாக நடுகல் ஆய்வுக்காக தம் வாழ்வை அற்பணித்துள்ள குமரவேல் அண்ணாவை சந்திக்க முடிந்தது.
     உணவு முடித்து, குமரவேல் அண்ணாவுடன் பழங்குடிகள் பற்றியும், வழியில் பார்த்த நடுகற்கள் பற்றியும் பேசிவிட்டு, மீண்டும் கடம்பூர் மலைப்பாதை வழியாக குன்றிமலைக்கு வந்து சேர்ந்தோம்.

     மாலை நெருங்கிவிட்டதால் எலும்பை ஊடுறுவும் குளிர் தொடங்கி இருந்தது. இரண்டு நாள் பயணத்தாலும், இரவு உணவாலும் உடல் ரொம்பவே களைத்திருந்தது.

     தம்பி, பரணில் ஏற வேண்டாம் அண்ணா என சொல்லியும் நேராக பரணில் மீது ஏறி படுத்துக்கொண்டே மாலையில் சூரியன் மலையைவிட்டு இறங்கும் காட்சியையும், இருளுக்காக காத்திருக்கும் பாங்காட்டையும் ஒருசேர பார்த்துக்கொண்டே ஓய்வெடுதேன்.

     நாளை கடைசி நாள் குன்றி மலையை விட்டு பிரியாவிடை பெற்றுக்கொள்ள போகிறோம்.

பனை  சதிஷ்
27 / 28.12.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்